Sunday, 3 September 2017

ஏழாம் சுவை - நகைச்சுவை . 1

ஏழாம் சுவை - நகைச்சுவை 

              - அறு(சு)வையானந்தா 


இன்றைய அவசர உலகின் டென்ஷன்களைக் குறைப்பதற்காக நம் வாசகர்கள் 'அருட்குரலில்' சிரித்து மகிழ ஒரு பக்கம் ஒதுக்குங்கள் என கேட்கின்றார்கள். இவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் ஸ்ரீஸ்ரீ...ஸ்ரீ சுவாமி அறு(சு)வையானந்தாஜி அவர்களை அணுகினோம்.

நகைச்சுவையில் நவரசங்களை கலந்து ஏழாம் சுவையாய் வழங்கும் சுவாமிஜி அவர்கள் நம் 'அருட்குரலில்' மாதாமாதம் அருட்சிரிப்புகளை அள்ளி வழங்குவதாக சொல்லியிருக்கின்றார்கள்.

இந்த மாதம் அவர் அருளிய முன்னுரை -

இனிய வாசக பெருமக்களே !  வாழ்க வளமுடன்!
உலகத்திலேயே ரொம்ப  அழகானது எது தெரியுமா? மலர்ந்த முகங்களை, புன்னகை பூத்த முகங்களைப் பார்ப்பதுதான்..அதைவிட அழகானது அந்த புன்னகைகளுக்கு காரணமாக நீங்கள் விளங்குவதுதான்..!

'தொண்டாற்றி இன்பம் காண்போம்' என்று முடிகின்றது நம் இறைவணக்க பாடல்.

ஒருத்தனை சிரிக்க வச்சுட்டா அதுவும்  ஒரு தொண்டுதான்!

திருவள்ளுவர் கூட

நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பாற் பட்டன்று இருள்

 - அதாவது  சிரிக்கத் தெரியாதவனுக்கு பகலும் இருளாகவே இருக்கும் என்கிறார்.

அப்பரடிகள் கூட

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!

சிவபெருமானின் குமிண் நகை காணப்பெறுவதாக இருந்தால் மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்கின்றார்.

குமிண் சிரிப்பு அல்லது குமிண் நகை என்பது உதட்டுக்குள் சிரிக்கும் புன்னகை ஆகும்

ஓஷோ சொல்லுறாரு –

"மனுசன் இப்ப ரொம்ப, ரொம்ப சீரியஸ் ஆயிட்டான்..அவனுக்கு சிரிக்கிறது அப்டீன்னு என்னான்னே தெரியல...ஒரு மணி நேரம் தியானம் செய்றதக் காட்டிலும் ஒரு செகண்ட் உங்ககிட்டேருந்து வரக்கூடிய குபீர்/ வெடி சிரிப்பு ரொம்ப எபக்டிவ்... ஞானங்கிறதே ஒரு பிரபஞ்ச சிரிப்புதான்..!”

எனவே இந்த பகுதியில் உங்களைச் சிரிக்க வைக்கக்கூடிய சம்பவங்கள், துணுக்குகள், கடி, மொக்கை மற்றும்  வாழ்க்கையின் வேடிக்கையான முரண்பாடுகள், அபத்தங்கள் போன்ற பலவும் தர இருக்கின்றேன் 


நீங்கள் அனைவரும் புன்னகை மன்னர்களாகத் திகழ ஆசிகள் வழங்க ஆசைப் பட்டாலும் புன்னகை மன்னன் என்ற வார்த்தைகள்  " இளிச்சவாயன்" என்ற அர்த்தத்திலும்  வழக்கத்தில் இருப்பதால் நீங்கள் என்றும் குமிண் சிரிப்போடு,
குதூகலத்தோடு திகழ என் ஆசிகள் உரித்தாகுக!

அடுத்த மாதம் சந்திப்போம் , வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment