Monday 10 August 2015

COMPASSION - 4 ( கருணை )

இமயமலைச் சாரலில் ஓர் ஆசிரமம். தலாய்லாமா கருணையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். புத்தனைப் போன்ற கருணையைப் கைக்கொள்வது எப்படி என்று விளக்கிக் கொண்டிருந்தார்.

 கருணையைப் பற்றி அவ்வளவு அழகாகவும் மிகத் தெளிவாகப் புரியும்படியும் அவர் பேசியதை மாணவர்கள் மிக்க கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் பரபரப்புடன் ஓடி வந்தான். அவன் முகத்தில் தெரிந்த கலவரம் மாணவர்களையும் பதறச் செய்தது. தலாய்லாமாவை வணங்கிவிட்டு பின் அவரிடம் நெருங்கி அவர் காதுகளில் எதையோ முணுமுணுத்தான் வந்தவன்.

 சிறிதுநேரம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தார் அவர். முடியவில்லை. சிறு குழந்தையைப்போல அழத் தொடங்கினார்.

 பல மதங்கள் ஒரு துறவி அழுவதை அனுமதிப்பதில்லை. ஆனால் ஓர் உண்மையான துறவி அன்பில் தோய்ந்த மனம் கொண்ட ஒரு நிஜமான சந்நியாசி அழுகைக்கு அப்பாற்பட்டவர் அல்ல. எல்லா ஆசைகளையும் வென்ற ராமானுஜரே தன் சீடன் கூரத்தாழ்வார் இறந்தபோது குழந்தையைப் பறி கொடுத்த தாய் போலக் கதறி அழுததாக வரலாறு தெரிவிக்கிறது.

 சில நிமிடங்கள் அழுதபின் தலாய்லாமா கண்ணைத் துடைத்துக்கொண்டு தெளிவான குரலில் பேசத் தொடங்கினார்:

 ""என் அன்பு மாணவர்களே. இந்தத் துறவிக்காக ஒரு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்த முடியுமா?''

 மொத்த வகுப்பும் எழுந்து நின்றது.

 ""இப்போதுதான் எனக்குச் செய்தி வந்தது. நேற்று இரவு நடந்த ஒரு பயங்கரத் தாக்குதலில் சீனர்கள் 60 பெண் துறவிகள் உள்பட 180 பேரைக் கொடூரமாய்க் கொன்று விட்டார்கள்''.

 சரி, இறந்து போனவர்கள் ஆத்மசாந்திக்குத்தான் பிரார்த்திக்கப் போகிறோம் என்று எதிர்பார்த்த மாணவர்கள் தலாய்லாமா அடுத்துப் பேசியதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள்.

 ""தாக்கிய சீனர்களின் மன அமைதிக்காகப் பிரார்த்திப்போம்''

 தலாய்லாமா உலகெங்கிலும் உள்ள புத்தத் துறவிகளின் தலைவர். தன்னைச் சார்ந்த துறவிகளின் மரணத்திற்காகவும் அவர்கள் ஆத்ம சாந்திக்காகவும் அவர் பிரார்த்தனை செய்வது என்பது ஒரு சாதாரண செயல். அது ஒரு மதம் சார்ந்த சடங்காக, ஒரு சம்பிரதாயமாகத்தான் இருந்திருக்கும்.

 ஆனால், தலாய்லாமா தன்னைச் சார்ந்த துறவிகளைத் தாக்கிக் கொன்ற சீனர்களின் மன அமைதிக்காகப் பிரார்த்திக்கச் சொன்னது காருண்யத்தின்
உச்சகட்ட நிலை. அவர் அப்படிச் சொல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

 இப்போது தலாய்லாமா மட்டும் அமைதியாக இருக்க, அவரது கருணையின் தாக்கத்தைத் தாங்க மாட்டாமல் மொத்த வகுப்பும் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தது.

-"வல்லமை தாராயோ' என்ற நூலில் வரலொட்டி ரங்கசாமி
நன்றி  - தினமணி கதிர்  9-8-15

No comments:

Post a Comment