Tuesday, 8 December 2015

சென்னை மழை....3



முன்பு படித்தது -

விதைச் சோளம்
                     ஆடி முடிஞ்சிரிச்சு
                      ஆவணியும் கழிஞ்சிரிச்சு
                      சொக்கிகொளம்  கோடாங்கி
                      சொன்ன கெடு முடிஞ்சிருச்சு.

                      காடு காஞ்சிரிச்சு
                      கத்தாழை கருகிடிச்சி
                      எலந்த முள்ளெல்லாம்
                      எலையோட உதிஞ்சிருச்சு
.
                      வெக்க பொறுக்காம
                      றெக்க  வெந்த குருவியெல்லாம்
                      வெண்காடு விட்டு
                      வெகுதூரம் போயிடிச்சி.

                      பொட்டு மழை பெய்யலையே
                      புழுதி அடங்கலையே
                      உச்சி நனையலையே
                      உள்காடு உழுகலையே

                      வெதப்புக்கு  விதியிருக்கோ
                      வெறகாக விதி இருக்கோ
                      கட்டி வெச்ச வெங்கலப்ப
                      கண்ணீர்  வடிச்சிருச்சு

                      காத்துல ஈரமில்ல
                      கள்ளியில பாலுமில்ல
                      எறும்பு குளிச்சேற
                      இரு சொட்டுத் தண்ணியில்ல

                      தெய்வமெல்லாம் கும்பிட்டு
                      தெசைஎல்லாம் தெண்டனிட்டு
                      நீட்டிப் படுக்கையிலே
                      நெத்தியில  ஒத்த மழை

                      துட்டுள்ள ஆள  தேடி
                      சொந்தமெல்லாம் வாரதுபோல்
                      சீமைக்குப் போயிருந்த
                      மேகமெல்லாம் திரும்புதையா!

                      வாருமையா வாருமையா
                      வருண பகவானே!
                      தீருமையா   தீருமையா 
                      தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

                      ஒத்த ஏறு  நான் உழுக
                      தொத்தப்பசு வச்சுரிக்கேன்
                      இன்னும் ஒரு மாட்டுக்கு
                      எவனப் போய் நான் கேட்பேன்.

                      ஊரெல்லாம் தேடி
                      ஏர்மாடு  இல்லாட்டி
                      இருக்கவே இருக்கா என்
                      இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

                      காசு பெருத்தவளே
                      கார வீட்டுக் கருப்பாயி
                      தண்ணிவிட்டு எண்ணயின்னு
                      தாளிக்கத் தெரிஞ்சவளே!

                      சலவைக்குப் போட்டா
                      சாயம் குலையுமின்னு
                      சீல தொவைக்காத
                      சிக்கனத்து மாதரசி

                      கால்மூட்ட வெதச் சோளம்
                      கடனாகத் தந்தவளே
                      கால் மூட்ட கடனுக்கு
                      முழு மூட்ட அளக்கறண்டி 

                      ஊத்துதடி ஊத்துதடி
                      ஊசிமழை ஊத்துதடி
                      சாத்துதடி சாத்துதடி
                      சடசட சடையா சாத்துதடி

                      முந்தா நாள் வந்த மழை
                      மூச்சு முட்டப் பெய்யுதடி
                      தெச ஏதும் தெரியாம
                      தெர  போட்டுக் கொட்டுதடி

                      கூர  ஒழுகுதடி
                      குச்சிவீடு நனையுதடி
                      ஈரம் பரவுதடி
                      ஈரக் கொலை நடுங்குதடி

                      வெள்ளம் சுத்தி நின்னு
                      வீட்ட இழுக்குதடி
                      ஆஸ்தியில சரிபாதி
                      அடிச்சிக்கிட்டுப் போகுதடி 

                      குடிகெடுத்த காத்து வந்து
                      கூர  பிரிக்குதடி
                      மழைத் தண்ணி ஊறி
                      மண்சுவரு சரியுதடி.

                      நாடு நடுங்குதையா
                      நல்லமழை போதுமையா
                      வெத வெதக்க  வேணும்
                      வெயில் கொண்டு வாருமையா.

                      மழையும் வெறிக்க
                      மசமசன்னு வெயிலடிக்க
                      மூலையில வச்சிருந்த
                      மூட்டையைப்  போய் நான் பிரிக்க

                      வெதச் சோளம் நனஞ்சிருச்சே
                      வெட்டியா பூத்திருச்சே
                      மொளைக்காத படிக்கு
                      மொளைகட்டிப் போயிடிச்சே

                      ஏர் புடிக்கும் சாதிக்கு
                      இதேதான் தலையெழுத்தா?
                      விதிமுடிஞ்ச ஆளுக்கே
                      வெவசாயம் எழுதிருக்கா?

                      காஞ்சு கெடக்குதேன்னு
                      கடவுளுக்கு மனு செஞ்சா
                      பேஞ்சுக்  கெடுத் திருச்சே
                      பெருமாளே என்ன  பண்ண?
- கவிஞர் வைரமுத்து


வெள்ளத்தில் சென்னை வெள்ளம்
வடியாதென்பது வல்லவன் வகுத்தடா – வர்ணா
எம்மிடம் அருள் செய்யடா…

குடியேற இடம்தேடி
கூடாத செயல்செய்து
ஏரிகள் தூர்த்தோமடா – வர்ணா
இயற்கையிடம் தோற்றோமடா…

கால்வாய்க்கு வழியில்லை
நீர்போகப் பாதையில்லை
வீடுகள் மிதக்குதடா – நீயும்
தண்டித்தல் அறமல்லடா…

மழைவெள்ளம் வடியாமல்
மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடடா – வர்ணா
ரேஷனில் மழைபெய்யடா…

– சுரேஷ் காமாட்சி


நீரோடைகளாகும்
தார் சாலைகள் !
தார்மீக பொறுப்பை
யார் ஏற்பார்களாம் ?

நம்மூரில் மழையால்
கூவம் சுத்தமாச்சு - but
ஊரே கூவமாச்சு !

 - டைரக்டர் பார்த்திபன் 

No comments:

Post a Comment