Saturday 20 May 2017

தமிழ் அமுதம் ...4

 நல்லாற்றுப் படும் நெறி


 ஒரு மரத்தில் அணில் ஒன்று தாவி விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி கீழே நின்ற ஒநாயின் மீது விழுந்தது. ஓநாய்  அதைத் தன் வாயில் கவ்வி சாப்பிட முயற்சிக்கும்போதுதன்னை விட்டு விடுமாறு அணில் கேட்டது. அப்போது ஓநாய் ,''நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன்னை விட்டு விடுகிறேன்,''என்றது.
அணிலும்,''உன் பிடியில் நான் இருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்?''என்று கேட்கவே ஓநாயும்  பிடியைத் தளர்த்தியது.உடனே மரத்தில் தாவி ஏறிய அணில், 
''இப்போது உன் கேள்வியைக் கேள்,''என்றது. 
ஓநாய் கேட்டது,''உன்னை விட நான் பலசாலி. ஆனால் என்னைவிட மகிழ்ச்சியாக மரத்தில் எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறாயே! இது எப்படி சாத்தியம்?''
அணில் சொன்னது,''நீ எப்போதும் கொடிய செயல்களையே செய்கிறாய். அதுவே உன் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் நான்  எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. மரங்களில் தானாகப் பழுத்த பழங்களை  மட்டுமே சாப்பிடுகிறேன். அதனால் என் மனதில் எப்போதும் கவலையில்லை.'' என்றது.

     இந்தக் கதையில் அணில் ஓநாயிடம் "உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லைஉபத்திரவம் பண்ணாதேஎன்று சொல்கிறது. இதே அறிவுரையை யாராவது உங்களிடம் சொல்லியிருப்பார்கள்இல்லாவிட்டால் நீங்களாவது யாரிடமாவது கூறியிருப்பீர்கள். இந்த சிந்தனை இன்று நேற்று தோன்றியதல்ல. சங்ககாலத்திலேயே இப்படியொரு பாடல் உண்டு.

பல்சான்றீரே பல்சான்றீரே
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனின் மூப்பிற் பல்சான்றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திரல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே!

-நரிவெரூஉத் தலையார்.


நல்ல பல குணங்களை உடையப் பெரியோர்களே.. நல்ல பல குணங்களைக் கொண்ட பெரியோர்களே...
மீனின் முள் போன்ற நரையும், முதிர்ந்த வரிவரியாய் சுருக்கம் விழுந்த கன்னத்தையும், பயனில்லாத மூப்பையும் கொண்டுள்ள பெரியோர்களே..
மழு எனும் ஆயுதத்தையும், கடுமையான வலிமையையும் கொண்டவனாகிய கூற்றுவன் (யமன்) உங்களைப் பற்றிப் போகும்போது வருந்துவீர்..
நீங்கள் நல்ல செயலைச் செய்யமாட்டீர் என்றாலும், கெட்ட செயல்கள் செய்வதையாவது விட்டொழியுங்கள்! இதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.. நல்ல நெறி என்று சொல்லப்படுவதும் இதுதான்...

நரிவெரூஉத் தலையார்
பிணம் தின்னும் நரியே கண்டால் வெருவி(அஞ்சி) ஓடும் வண்ணம் இப் புலவரின் தலை இருந்ததாம். சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப் பெருஞ்சேரல் என்னும் அரசனைக் கண்டவுடன் இந்த வெறுக்கத்தக்க தலையின் தோற்றம் மாறிவிடும் என்று அவருக்குக் கூறியிருந்தனராம். அவ்வாறே இந்தப் புலவர் அந்தச் சேர அரசனைக் கண்டவுடன் வெறுக்கத் தக்க அவரது தலைத்தோற்றம் மாறி நல்லுடம்பு வரப்பெற்றாராம். இவ்வாறு புறநானூறு ஐந்தாம் பாடலுக்கு   குறிப்பு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment