Monday, 24 June 2013

மாணவர்களுக்கு மனவளக்கலை

தினமணி 24-6-13

மாணவர்களுக்கு யோகா, தியானம், நீதி போதனைகள், உடல் நலம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை கற்றுத்தரும் வகையில் பாடவேளை நேரத்தில் மட்டுமே மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகளில் பாடவேளை நேரம் 45 நிமிஷங்களிலிருந்து 40 நிமிஷங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

பள்ளி வேலை நாள்கள் மற்றும் விடுமுறை நாள்கள், பாடவேளை நேரங்களில் மாற்றம், காலை வழிபாட்டு முறை, உறுதிமொழிகள் ஏற்பு போன்றவை தொடர்பாக தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு விளக்கம் அளிக்க பள்ளி நாட்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் புதிய அம்சங்கள்

* வரும் கல்வியாண்டில் (2013-14) பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள செயல்பாடுகள்:

* பாடவேளை 45 நிமிஷங்களிலிருந்து 40 நிமிஷங்களாகக் குறைப்பு.

* இறைவணக்கம் முடிந்த பிறகு 5 நிமிஷங்கள் தியானம்.

* மதிய உணவு இடைவேளைக்கு 30 நிமிஷங்களுக்கு முன்னதாக 15 நிமிஷங்கள் எளிய யோகா பயிற்சி.

* அடுத்த 15 நிமிஷங்களில் நீதிபோதனை, நன்னெறி கதைகள், மதச்சார்பின்மை, சமத்துவ சமுதாயம், உடல் நலம் மற்றும் சுகாதாரக் கல்வி, நாட்டுப்புறக்கலைகளைப் பற்றி அறிய கலைக் கல்வி, பொம்மை செய்தல், பூ வேலைப்பாடு, மணி வேலைப்பாடு, வாழ்க்கைக் கல்வி, மன அழுத்தத்தைத் தவிர்த்தல், சுற்றுச்சூழல் கல்வி, முதலுதவி, தற்காப்புப் பயிற்சிகள்.

* மதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகளுக்கு 15 நிமிஷங்கள் (வாய்ப்பாட்டைச் சொல்லுதல், தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்களை சொல்வதை எழுதச் செய்யுதல், 6 முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் வாக்கியங்கள் அமைத்தல், 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 நிமிஷங்கள் பொது அறிவு சம்பந்தமாகப் பேசுதல், குழு உரையாடல் போன்றவை).

* வார இறுதிநாளான வெள்ளிக்கிழமையின் இறுதி ஒரு மணி நேரம் பேசுதல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழிகள் கூறுதல், பழமொழி கூறுதல், படைப்பாற்றல் போன்ற செயல்பாடுகள்.

* ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமையில் மாணவர்களின் படைப்பாற்றல்கள் மற்றும் வகுப்பு மாதிரித் தேர்வுகளின் மதிப்பெண்களை பெற்றோருடன் ஆலோசனை செய்தல்.

* வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 20 நிமிஷங்கள் இறைவணக்கக் கூட்டம்.

No comments:

Post a Comment