Sunday, 9 February 2014

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 14

கருமையத்தூய்மை  

" நீங்கள் இப்போது கேட்டீர்களே, இதுபோல நானும் மகரிஷி அவர்களிடம் 'என்னுடைய பதிவுகள், அதுவும் மூதாதையர் பதிவுகள் பற்றி எப்படி தெரிந்து கொள்வது' என்று கேட்டபோது அவர்கள் சொன்னார்கள் - ' அது பெரிய மூட்டை அம்மா, அதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு பதிலாக நம் கரு மையத்தை தூய்மை செய்ய என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்' என்று வழிகள் சொன்னார்கள் " என்கிறார் அம்மா.

" கருமையப் பதிவுகள் அதில் உள்ள களங்கங்கள் பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்" என்று கேட்கிறாள் ஒரு மாணவி.

" நம் சிறு வயதிலிருந்து இன்று வரை நாம் செய்த செயல்களின் பதிவுகள், நம் முன்னோர்களின் பதிவுகள் மற்றும் அதற்கு முன் இருந்த விலங்கினப் பதிவுகள் எல்லாமே நம் கருமையத்தில் உள்ளன. இந்த பதிவுகளுக்கு ஏற்ப நாம் சிந்திக்கின்றோம், செயல்படுகின்றோம் மற்றும் நம் பதிவுகளுக்கு ஏற்ப வரும் விளைவுகளையும் அனுபவிக்கின்றோம்" என்று அம்மா சொல்லிக்கொண்டிருக்கும்போது  ஒரு மாணவி குறுக்கிட்டு

" நான் இதுவரை நல்லவளாக நடந்து கொண்டிருக்கின்றேன். என் கருமையம் தூய்மையாக இருக்கும் அல்லவா " என கேட்கிறாள்.

" மகரிஷி சொல்கிறார்கள் - நம்மிடையே இருக்கும் எண்ணற்ற நிறைவு பெறாத ஆசைகள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பழக்கம், பேசும் பொய்கள், பிறர் மனம் வருந்தும்படி பேசுதல், செய்தல், பிறர் பொருள் கவர்தல், பிறரின் வாழும் சுதந்திரத்தைக் கெடுத்தல், நம்மிடையே உள்ள சினம், பகை, வன்முறை, வஞ்சம்,  தன்  முனைப்பு, வேண்டாத ஆறு குணங்கள், பெண்களை வருந்தவிடுதல், வீண்செலவு, சோம்பல் என நாமே நம் கருமையத்தைக் களங்கப் படுத்திக்கொண்டிருக்கின்றோம்."

" இவ்வளவு பதிவா?" என்று மலைக்கிறாள் ஒரு மாணவி.

" நம் மூதாதையர் பதிவுகள் பற்றி சிந்தித்தால் இன்னும் மலைத்துப் போவீர்கள்.மனிதஇனம் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்குமுன் விலங்குகளாக இருந்த பதிவுகளும் நம்மிடையே உள்ளன. அதனால்தான் மகரிஷி அவர்கள் இதை எல்லாம் திரும்பி பார்க்காமல் கருமையத் தூய்மைக்கான முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்தி இறையுணர்வு பெற பயிசிகல் தந்துள்ளார்கள்."

" கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் " என்கிறார்கள் மாணவிகள்.

" மகரிஷி சொன்னதை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். நம் கருமையம் பதிவுகளால் காபி டிகாஷன் போல கன்னங்கரேல் என இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை தூய்மையாக அதாவது வெண்மையாக மாற்ற என்ன செய்ய வேண்டும். அதில் தூய பால் ஊற்றிக்கொண்டே வரவேண்டும். இங்கே தூய பால் என்பது பிரதிபலன் எதிர்பாராது சமுதாயத்திற்கு, துன்பப்படுபவர்களுக்கு நாம் செய்யும் தொண்டே ஆகும். இப்படி செய்ய, செய்ய டிகாஷன் கலர் வெளுத்துக்கொண்டெ வரும். ஆனாலும் காபி வாசனை இருந்துகொண்டே இருப்பது போல நம் பதிவுகளுக்கேற்ப விளைவுகளும் எழும்.அவரவர் கருமையப் பதிவுகளுக்கேற்ப பெரிய துன்பங்கள் சிறியதாக மாறும், சில பதிவுகள் செயலுக்கு வராமலே நீங்கிவிடும். எனவே நீங்கள் உங்களால் முடிந்த அளவு தொண்டு செய்து வாருங்கள்" என்கிறார்கள் அம்மா.

" எளிமையான வழிகள் இருக்கின்றனவா? " என கேட்கிறாள் ஒரு மாணவி.

" ஓ! அதைதான் இரண்டொழுக்கப் பண்பாடாகத் தந்திருக்கின்றார்கள் மகரிஷி அவர்கள். உங்களுக்குத்தான் அது தெரியுமே. எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள் பார்க்கலாம்" என அம்மா சொல்ல அத்தனை மாணவிகளும்

" நான் எனது வாழ்நாளில் யாருடைய மனதுக்கும், உடலுக்கும் துன்பம் தரமாட்டேன்

துன்பப்படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் "

என சொல்கிறார்கள்.

"மனிதப்பிறவியின் உயர்மதிப்பை உணர்ந்து, மதிப்பளித்து, ஒருவருக்கொருவர் அன்பையும், கருணையும் காட்டி அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ இந்த இரண்டொழுக்கப் பண்பாடைத் தொடர்ந்து கடைபிடியுங்கள். சிலநேரங்களில் சிரமமாகத் தெரிந்தாலும் கருமையத்தூய்மை மூலம் இறைநிலை அடையப் போகின்றோம் என்ற அயராத விழிப்புநிலையில் நிற்கப் பழகிகொள்ளுங்கள்." என்கிறார்கள் அம்மா.

" நிறைய புது விஷயங்கள் தெரிந்துகொண்டோம் " என்கிறார்கள் மாணவிகள்.

" கருமையம் என்பது பிரபஞ்ச பரிணாமச் சரித்திரம் முழுமையாக அடக்கம் பெற்ற தெய்வீகப் பெட்டகமாக மனிதனிடம் அமைந்துள்ளது. அப்படியானால் இந்த பெட்டகத்தை எவ்வளவு தூய்மையாக வைத்திருக்கவேண்டும்?  இதற்கான பொறுப்புணர்ச்சி உங்களுக்கு ஏற்பட்டுவிடவேண்டும் " என   அம்மா சொல்ல அத்துணை மாணவிகளும் உறுதி கொள்கின்றனர்.

 " வேறு என்னென்ன வழிகளால் கருமையத்தை தூய்மை செய்யலாம்? " என மாணவிகள் கேட்கின்றனர்.

                          -  தொடரும் 
















No comments:

Post a Comment