ஞானப்பழம்
" அம்மா, நம் தமிழ்நாட்டில் ஏகப்பட்ட கோவில்கள், குளங்கள் உள்ளனவே! அங்கு சென்று வழிபட்டால் புண்ணியம் என்கிறார்கள். இது பற்றி விளக்குங்களேன் " என ஒரு கேட்கின்றாள்.
" நல்ல கேள்வி! இந்த விஷயம் பற்றி அனைவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கோவில் பற்றியும் அங்கு உள்ள குளம் பற்றியும் தல வரலாறு இருக்கும் அல்லவா... அதைக் கொஞ்சம் கூர்ந்து ஆராய்ந்தால் நம் முன்னோர்களின் அறிவாற்றல் வெளிப்படும். உதாரணமாக நாம் ஒரு கோவில் தலப் புராணம் ஒன்றை ஆராய்வோம். உங்கள் அனைவருக்கும் தெரிந்த கோவில் ஒன்று சொல்லுங்கள் " என அம்மா கேட்க,
" மதுரை, பழனி, திருப்பதி .." என பல கோவில்கள் பெயர்களை மாணவிகள் சொல்கின்றனர்.
" நாம் பழனி கோவில் தல வரலாறு பற்றி பார்க்கலாம். யாராவது அதை சுருக்கமாகச் சொல்லுங்கள்" என அம்மா கேட்க
" மாம்பழம் ஒன்றுக்காக விநாயகரும், முருகனும் சண்டை போட்டுக்கொள்ள சிவனும், பார்வதியும் அவர்களுக்கு ஒரு போட்டி வைக்கின்றார்கள். யார் முதலில் இந்த அகிலத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே மாம்பழம் எனச் சொல்ல, முருகன் உடனே மயில் மீதேறி சுற்றத் தொடங்கிவிட்டார். விநாயகரோ தன் பெருத்த உடலை வைத்துக் கொண்டு எப்படி சுற்றுவது என யோசித்து ' அம்மை அப்பனே அகிலம் ' என்று சிவனையும், பார்வதியையும் சுற்றிவந்து மாம்பழத்தைப் பெற்றுக் கொண்டார். இதைக் கண்ட முருகன் கோபித்துக் கொண்டு ஆண்டி கோலம் பூண்டு ஏறி நின்ற மலைதான் பழனி" என்கிறாள் ஒரு மாணவி.
" சரியாகச் சொன்னாய்.. இந்த கதையிலிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நீதி என்ன?" எனக் கேட்கிறார்கள் அம்மா.
" அம்மா-அப்பாதான் எல்லாம்" என்கிறாள் ஒரு மாணவி.
" முருகனுக்கே கோபம் வரும்போது நமக்கும் கோபம் வருவதில் தப்பில்லை" என்கிறாள் ஒரு மாணவி.
அனைவரும் சிரிக்கின்றார்கள்.
" ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு படத்தில் லாஜிக்கே இல்லை..சொதப்பல்! என விமர்சனம் செய்கின்றோம். பழனி கதையில் எவ்வளவு ஓட்டை இருக்கின்றது எனப் பார்க்கலாமா...
1. எல்லாம் அறிந்த ஞானபண்டிதனான முருகனுக்கு தன் அண்ணன் அம்மா-அப்பாவை சுற்றிவந்து பழத்தை வாங்கிக்கொள்வார் என தெரியாமலா இருக்கும்?
2. விநாயகர் எல்லாம் வல்லவர். அவரை வணங்காமல் போருக்கு புறப்பட்ட சிவனுடைய தேரின் அச்சு முறிந்ததாம். அப்படிப்பட்ட விநாயகர் ஆற்றல் குறைந்தவரா?
3. தம்பிக்காக அண்ணன் விட்டுக் கொடுக்கலாம் அல்லவா!
4. தம்பிதான் நாம் இருவரும் பழத்தை பங்கு போட்டுக்கொள்ளலாம் என சொல்லி இருக்கலாமே!
5. சிவன்தான் இன்னொரு பழத்தை படைத்து கொடுத்திருக்கலாமே!
இப்படி இன்னும் யோசிக்கலாம். உண்மையான தத்துவம் என்ன தெரியுமா...
நம் முன்னோர்கள் சுத்தவெளியான இறைநிலை எங்கும் நிறைந்துள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள். இன்றிருக்கும் விஞ்ஞான வசதிகள் அவர்களுக்கு இல்லை. நீங்கள் எளிதாக உணர்ந்துகொண்டீர்கள். சொல்லுங்கள் பார்க்கலாம்.. சுத்தவெளி அல்லது இறைநிலை அல்லது சிவம் எங்குள்ளது?" என அம்மா கேட்க
" சுத்தவெளி எனும் சிவம் அணுவின் மையத்திலும், அணுக்களிடையேயும், பிரபஞ்சத்துக்குள்ளும், பிரபஞ்சத்தை சூழ்ந்தும் உள்ளது" என்கிறார்கள் மாணவிகள்.
" நன்றாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள்.. பாராட்டுக்கள்! நீங்கள் இப்போது சொன்னதைத்தான் பழனி கதை . விளக்குகின்றது. விநாயகர் அணுவில் சிவம்-சக்தி இருப்பதை உணர்ந்து சுற்றிவந்ததாகவும், முருகன் அகிலத்தை சூழ்ந்து இருக்கும் சுத்தவெளியாகிய சிவத்தை சுற்றி வந்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! முன்னோர்களுக்கு விஞ்ஞான சாதனங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் இந்த தத்துவத்தை ஒரு கதையாகச் சொன்னார்கள்.
கதை சுவையாக இருப்பதற்கு விநாயகருக்கும், முருகனுக்கும் சண்டை வந்தது...முருகன் கோபித்திக்கொண்டான்,,என கொஞ்சம் மசாலா சேர்த்தார்கள். ஆனால் இன்று தத்துவத்தை மறந்து பழனி என்றாலே பஞ்சாமிர்தம் ஞாபகம்தான் வருகின்றது.." என முடிக்கின்றார்கள் அம்மா.
மாணவிகள் சிரிக்கின்றனர்.
" நீங்கள் சொன்னதுதான் சரி என எப்படி எடுத்துக்கொள்வது?" என ஒரு மாணவி கேட்கின்றாள்.
" இந்த விளக்கத்தை சொன்னவர் நானல்ல..புகழ்பெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள்" என்கிறார்கள் அம்மா.
- தொடரும்
No comments:
Post a Comment