Sunday, 23 November 2014

ஆசை....8


நீ எதிர்பார்த்தது, எதிர்பார்த்தபடி பிறர் மூலமாகக் கிடைக்காது. ஒவ்வொரு மாற்றத்திலும் பிணக்குற்று, பிணக்குற்று ஏமாற்றத்திற்கு ஆட்பட்டு அதனாலே துன்பமானது பெருகிக் கொண்டே போகிறது. இந்த அடிப்படையைத் தெரிந்து கொண்ட பின்னர் "எதிர்பார்த்தல்" என்பதை விட்டு விடுவது நல்லது எனத் தெரிகிறதல்லவா? தொடக்கத்தில் ஒரு வார காலம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற முடிவினை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துக் கொள்ளுங்கள். (Do not expect anything from anyone for one week to start with and then extend the period to one month).


அதற்குரிய விளைவு நிச்சயமாக உண்டு. நீ எதிர்பார்த்தாலும், எதிர் பார்க்காவிட்டாலும் நீ என்ன செயல் செய்கிறாயோ, அந்தச் செயலுக்குத் தக்க விளைவு வந்துதான் ஆக வேண்டும். நல்லதை எண்ணி, நல்லதை விளங்கிக் கொண்டு, பயனை உணர்ந்து கொண்டு இப்பொழுது செய்கிறேன்; வருவதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன் - இந்த அளவு வரும் எனக்கூட எதிர்பாராது நல்லதைச் செய்யும்போது நிச்சயமாக நன்மை பிறக்கும் என்று செய். அவ்வாறு செய்வதற்கு முன்னதாக இன்னொரு ஆராய்ச்சியும் தேவை. அதாவது உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.


நீ எங்கே இருக்கிறாய், என்னவாய் இருக்கிறாய்? (What you are, where you are and how you are?) உடல் நலத்திலே, வலுவிலே, வயதிலே, அறிவாற்றலிலே அல்லது விஞ்ஞான வளர்ச்சியிலே, பொருள் உற்பத்தி செய்யும் திறமையிலே, அதிகாரத்திலே, சூழ்நிலையிலே உள்ள ஒரு வாய்ப்பிலே நீ எங்கே இருக்கிறாய், எப்படி இருக்கிறாய்? இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு, சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன். செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு; செய்து கொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய். இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்

No comments:

Post a Comment