யோகமும் இளைஞர் வல்லமையும்
( YOGA FOR YOUTH EMPOWERMENT )
" என் இனிய மாணவச் செல்வங்களே! உங்களைப் பயமுறுத்தும், மன அழுத்தம் கொடுக்கும் பிரச்சனைகளைச் சொல்லுங்கள்" என்கிறார்கள் அம்மா.
மாணவிகள் பிரச்சனைகளைக் -கொட்டுகிறார்கள் -
* பாடங்கள் புரியாமல் மனப்பாடம் செய்தே பரீட்சை எழுதுகின்றோம். அப்படி மனப்பாடம் செய்தது சீக்கிரமே மறந்து விடுகிறது.
* அப்படியே பாடங்களைப் புரிந்து படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கினாலும் நாங்கள் விரும்பும் கல்வி/கல்லூரி கிடைப்பதில்லை. எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்குமா என்ற பயம் இப்போதே இருக்கின்றது.
* நேரத்தை வீணடிக்கின்றோம் என்று தெரிந்தே டிவி, இன்டர்நெட், பேஸ்புக், செல்போன் என அவைகளில் ஆர்வம் கொண்டுள்ளோம்.
* எங்களின் பருவ வயதில் ஏற்படும் புது,புது உணர்வுகள் - அவைகளைத் தூண்டிவிடும் சினிமா, டிவி, பாடல்கள் இவற்றில் ஈடுபாடு
* பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் அவர்கள் எங்களுக்கு போதிய நேரம் ஒதுக்குவதில்ல
* பெற்றோர்களிடையே அடிக்கடி சண்டை
* சக மாணவர்களின் வேண்டாத பழக்கங்கள்
* தன் தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மை
* இப்பருவத்தில் தோன்றும் காதல் உணர்வுகள் - இதனால் ஏற்படும் தோல்விகள், பிரச்சனைகள்
* மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள்
* பெற்றோர்கள், ஆசிரியர்களின் அதிகமான கண்டிப்பு
* எல்லா வசதிகளையும்/இன்பங்களையும் அனுபவிக்கத் துடிக்கும் சபல புத்தி
* பெற்றோர்கள் தரும் அதிக அளவு சுதந்திரம்/பாக்கெட் மணி
" மாணவர்களைக் கேட்டால் இன்னும் அதிகமாகச் சொல்வார்கள். ..இத்தனைப் பிரச்சனைகள் நிச்சயமாக உங்களுக்கு மன அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை! இந்த இளவயது பருவத்தினை ' கையாளுவதற்குக் கடினமான காலம் ' என பைபிளில் ஒரு வாசகம் உள்ளது. எங்கள் காலத்தில் நாங்கள் வீடு, பள்ளி, படிப்பு என்று இருந்ததால் நீங்கள் சொன்ன முக்கால்வாசி பிரச்சனைகள் இல்லாமல் தப்பித்துவிட்டோம். நீங்கள் படும் கஷ்டங்களுக்கு கடந்த ஐம்பது ஆண்டு சமுதாய மாற்றங்களே காரணம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி முறை, அரசாங்கம் என பலர்மேல் .பழி சொல்லலாம். ஆனால் இந்த தீங்கான சூழ்நிலையை மாற்றித்தான் ஆகவேண்டும். இந்த நாட்டின் ஏற்றமிகு எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது. எனவே பொறுப்புகளும் உங்களுக்கே அதிகமாக உள்ளது.
இதை நன்கு உணர்ந்த உலக சமுதாய சங்கம் அருள்தந்தை அவர்கள் கூறியபடி இளைஞர்களிடையே நல்ல ஒழுக்க பண்புகளையும், நல்ல நடத்தையையும் மேம்படுத்த " யோகமும் இளைஞர் வல்லமையும் " என்ற தலைப்பிலே சான்றிதழ் மற்றும் பட்டய கல்வித் திட்டம் வந்துள்ளது.
இதில் நீங்கள் சொன்ன அத்துனைப் பிரச்சனைகளையும் வெற்றிகொள்ள பாடதிட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பத்தாவது முடித்தவர்கள் இதில் பட்டய கல்வி பெறலாம். மனவளக்கலை பயிற்சிகள் தவிர மேலும் இன்றைய மாணவர்களுக்குத் தேவையான நினைவாற்றல் திறனைப் பெருக்கும் பயிற்சிகள், பாடங்களைப் புரிந்து படித்து தேர்வு எழுதுவது எப்படி, தன்னம்பிக்கையைப் பெருக்க, தோல்வி மனப்பான்மையைப் போக்க, உணர்ச்சி மேலாண்மை, டிவி,நெட், செல், பேஸ்புக் போன்றவைகளை எப்படி உபயோகமாக கையாள்வது, நேர மேலாண்மை என தரப்படவுள்ளது.
இக்கல்வியில் நீங்கள் அனைவரும் சேர்ந்து இப்பயிற்சிகளைப் பெற்று வெற்றியாளர்களாக திகழ வாழ்த்துக்கள்!
" யோகமும் இளைஞர் வல்லமையும் " கல்வி பற்றி உங்களுக்கு அருகாமையில் உள்ள மனவளக்கலை மன்றங்களில் தெரிந்துகொண்டு உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
நீங்கள் அனைவரும் உயர் ஒழுக்கம், உயர்கல்வி பெற்று வாழ்வின் எல்லா வளங்களையும் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றேன். இறையருளும், குருவருளும் உங்களை வழி நடத்துமாக!
வாழ்க வளமுடன்!
தொடர் நிறைவு பெறுகின்றது
காலத்திற்கு ஏற்ற பதிவு! http://malajps.blogspot.in வாழ்க வளமுடன்
ReplyDelete