ஞானத்தின் முதல்படி
மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிட்சு, மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓரமாக ஒதுங்கி நின்றார்.
அசோக சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிட்சுவின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது? என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார். அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.
ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் என்று அமைச்சருக்கு உத்தரவிட்டார். மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.
ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்.
மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்.
மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், அந்த மூன்று தலைகளையும் சந்தைக்குச் சென்று விற்றுவிட்டு வரச்சொன்னார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்.
ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின் தலையைக் கொஞ்சம் தாமதமாக வேட்டைப்பிரியர் ஒருவர் அபூர்வப் பொருள் சேகரிப்புக்காக வாங்கிக்கொண்டார். மீதமிருந்தது மனிதத் தலைதான். ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலையும், புலித் தலையும் விலைபோனதையும், மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.
சரிதான்! இலவசமாகக் கொடுத்துவிடுங்கள் என்றார் அசோகர்.
இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை.
“பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது எத்தனை ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி!''என்றார் அசோகர்.
மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக்கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ளபோது எத்தனை ஆட்டம் ஆடுகிறது!
No comments:
Post a Comment