Wednesday, 18 May 2016

பெண்கள் - 11

பெண்களின் வெற்றி பயணத்துக்கு 11 பாதைகள்!

நாம் எவ்வளவுதான் வருந்தினாலும், வாதிட்டாலும், இந்த ஆண்மயமான உலகில்தான் நம் இருப்பு நிகழவேண்டும். முன்னைவிட இன்று அந்த உலகத்தில் நமக்கான எல்லைகள் விரிவுபட்டிருக்கின்றன என்றாலும், நம் வழிகளை இன்னும் சுமூகமாகவும் சிறப்பாகவும் கடந்துபோவதற்கான 10 மந்திரங்கள் இங்கே...

1.  ஆண்களின் உலகை வெல்ல, முதலில் பெண்களுக்குள் ஒற்றுமை வேண்டும். வளைகரங்கள் இணைந்து நிகழ்த்துங்கள் எந்த மாற்றங்களையும்!

2. பெண் என்பதற்காக சிறப்புச் சலுகைகள் கேட்காதீர்கள். ஆண்கள் அனுபவிக்கும் அதிக சுதந்திரம் பற்றிப் புகார் எழுப்பினாலும் பலனிருக்கப்போவதில்லை. ஆனாலும், பாலின சமத்துவம் இல்லாத இந்தச் சூழலில் நீங்கள் பெறும் வெற்றியின் மடங்கு இரண்டு என்று, வெற்றிக்குப் பின் உரக்கச் சொல்லலாம்... இப்போது ஓட்டத்தில் முந்துங்கள்!
3. பெண்களுக்காக  வகுத்துவைத்துள்ள அழகு வரையறைகளுக்குள் பொருந்த முயற்சிக்காதீர்கள். அதை விரும்பவும் செய்யாதீர்கள். உண்மையான, நீடித்த அழகு என்பது, உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையுமே!

4. பொருளாதாரச் சுதந்திரம்தான், ஆண்களைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத சுதந்திரத்தை உங்களுக்குப் பரிசளிக்கும் என்பதை, இளவயதிலேயே உணர்ந்துவிடுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்துக்கு நீங்களே உரிமையாளராக இருங்கள்!

5. சின்னச் சின்ன தற்காப்பு வளையங்கள் அமைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆபத்தில் இருக்கும்  சமயங்களில், உங்கள் ஆண் வேறு ஏதோ ஓர் வேலையில் மும்முரமாக இருப்பார். உங்களுக்கு நீங்கள் மட்டுமே எப்போதும் பாதுகாப்புத் தர முடியும்!

6. வாழ்க்கையின் புதிய முயற்சிகளை, நீங்கள் அறிந்த பெண்கள் இதுவரை எடுத்ததில்லை என்ற காரணத்துக்காகத் தவிர்க்காதீர்கள். அவர்கள் காலம் வேறு,  உங்கள் காலம் வேறு. அவர்கள் திறமை வேறு, உங்கள் திறமை வேறு!
7. உங்கள் கவலையால்  எந்தக் காரியம் முடியப்போவதில்லை.  மகிழ்ச்சியாக இருங்கள். அது தரும் புத்துணர்வில் நிதானத்துடன் பணியை முடிக்கலாம்!

8. எடுத்துக்கொண்ட சபதத்தில் இருந்து பின்வாங்காதீர்கள். சண்டைபோட வேண்டுமென்றால், தயங்காமல் சண்டைபோடுங்கள். போராட்டத்தின் முடிவு, உங்கள் தகுதியில் உங்களை நிறுத்தியிருக்கும்!

9. பெண்கள் பலரும் தடம் மாறும் ஒரு விஷயம் இது. உங்கள் வேலைகளைப்  பற்றிய விமர்சனங்களை, உங்களைப் பற்றியதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். தேவைப்படும் திருத்தங்களை எந்தக் காயங்களுமின்றி  செயல்படுத்துங்கள்!

10. கற்றலில் தொடர்ந்திருங்கள். உங்களுக்கான உரிமைகள் பற்றி அறிந்திருங்கள்!

11.  பெண்ணாக இருப்பது தவம், வரம்! உணருங்கள், உங்களை நீங்களே கொண்டாடுங்கள்!
   நன்றி  -  விகடன் 

No comments:

Post a Comment