மவுனமாய் இருத்தல் நன்று
மவுனம் சர்வார்த்த சாதகம் என்று சொல்லப்படுகிறது. பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும் என்று இதற்குப் பொருள். ‘மௌனே ச கலஹோ நாஸ்தி’ என்கிறது சாணக்ய நீதி. மவுனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது என்று பொருள்.
மவுனம் என்பது பொதுவாக விரும்பப்படுகிறது. பேசாமல் இருந்தால் பிரச்சினை குறைவாக இருக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. மனிதர்களுக்கிடையேயான பல பிரச்சினைகளையும் கிளறிவிடுவது, தூபம் போட்டு வளர்ப்பது பேச்சுதான். சாதாரணப் பேச்சுக்கள், பல விதமான பலன்களைத் தரும் உரையாடல்கள், ஆழமான உரையாடல்கள் ஆகியவை நமது அன்றாட வாழ்வுக்கும் அறிவின் விகாசத்துக்கும் உதவும் என்றாலும் மவுனம் பெரிதும் விரும்பப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன?
அகத்தில் அமைதி
பேச்சு எனபது வெளிமுகமான செயல். உள்முகமாகத் திரும்ப விரும்புபவர்கள் முதலில் பேச்சைக் குறைக்க நினைக்கிறார்கள். இறையாற்றலோடு இரண்டறக் கலக்கும் இலக்கைக் கொண்டவர்கள் அகத்தில் அமைதி காண வேண்டும். கொந்தளிக்கும் கடலில் படகு சீராகச் செல்ல முடியாது. அகத்தில் அமைதி காண்பதற்கான முதல் படி புறத்தில் ஏற்படும் அமைதி.
பேசாமல் இருந்தால் மவுனம் கிட்டிவிடுமா? வாய் பேசாத நிலையிலும் மனம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால் கூடுதலாகப் பேசிக்கொண்டிருக்கிறது.
உண்ணாவிரதம் இருப்பவன் உணவைத் துறந்துவிடுகிறான். உணவு பற்றிய எண்ணத்தைத் துறப்பதில்லை. அந்த எண்ணத்தையும் துறப்பதுதான் உண்ணாவிரதம் என்று கீதையில் ஒரு வரி வரும். மவுனமும் அப்படித்தான். வெளியில் மட்டுமல்ல, உள்ளேயும் அமைதி நிலவும்போதுதான் அது உண்மையான மவுனம். அகத்தில் பக்குவம் கூடி, அதன் விளைவாக மவுனம் கூட வேண்டும். பேச்சை மட்டும் பலவந்தமாக நிறுத்துவது செயற்கையானது. அது உள்ளுக்குள் பல மடங்காகப் பேச்சை வளர்த்துவிடும். பேச்சினால் உள்ளம் குமுறிக்கொண்டிருக்கும்போது வாய் மட்டும் பேசாமல் இருப்பதை மவுனம் என்று சொல்லிவிட முடியாது.
பேச்சு எங்கிருந்து வருகிறது
“யோகம் என்பது சித்தத்தில் எழும் சலனங்களை நிறுத்துதல்” என்று யோக சாஸ்திரம் கூறுவது இதைத்தான். பேச்சு எங்கிருந்து வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஏன் வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். பேச்சை அதன் வேர்வரையிலும் போய் ஆராய வேண்டும். பேச்சின் உண்மையான காரணம் என்ன, உண்மையான தேவை அல்லது பலன் என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து அறிய வேண்டும். இவற்றையெல்லாம் அறிய அறிய, நமது அகச்சலனங்கள் அடங்கும். அகத்தில் அமைதி கிட்டும். வாய் மொழி தானாகவே மட்டுப்படும்.
மவுன விரதம் இருப்பவர் மனதுக்குள் பேசாதிருத்தல் வேண்டும். நமக்குள் உரையாடாமல், உள்ளே தன்னிச்சையாக நிகழும் சலனங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். கருத்து எதுவும் சொல்லாமல், எதிர்வினை ஆற்றாமல் கவனிக்க வேண்டும். அப்படி கவனித்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் உள்ளே மலரும் மவுனத்தை உணரலாம். இதுவும் ஒருவகை தியானம்தான்.
No comments:
Post a Comment