தெய்வ வடிவங்கள் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்ததற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?
இந்துமத தெய்வ வடிவங்கள் இயற்கை ரசனையில் உருவானவை என்று எண்ணுவதற்கு இடமிருக்கிறது. இமய மலையின் பிரம்மாண்டத்தைக் கண்டு திகைத்தவன் படைப்பின் அதிசயத்தைத் தனக்குள்ளாகவே ரசித்துக் கொண்டான்.
பனி படர்ந்த அந்த சிகரங்களில் பரம்பொருளின் தோற்றத்தையே கண்டு ரசித்தான். இமய மலையின் பனிப்பாறைகள் உருகி, நீரோட்டமாகச் சிதறி, சிற்றாறாக உருவெடுத்து வெள்ளப் பிரவாகமாகி, சமவெளியை அடைந்து, அலை மோதும் அகண்ட நீர்ப்பரப்பாக பூமி மாதாவை அளந்து, கடலில் சங்கமித்த கட்சி இறைவனின் எழில்மிகு காட்சிகளில் ஒன்றாக அவனுக்குத் தோன்றியது.
அவன் காண விரும்பிய கடவுள் கற்பனையில் உருவானார்.
இமயமலை கயிலாயமாயிற்று. கொடும்புலியை வேட்டையாடி அதன் தோலையே உடையாகத் தரித்தவன் சிவபெருமானானான். காட்டிலும் மேட்டிலும் திரிந்து விஷம் கொண்டு அலைந்த பாம்பு சிவனாரின் கழுத்தில் ஆபரணமாயிற்று.
இமய மலையிலிருந்து புறப்பட்ட கங்கை அவனுடைய சடை முடியில் வாசம் செய்யும் கங்கா தேவி ஆனாள். காலை அகட்டி, சூலாயுதத்தை கம்பீரமாக ஏந்தி சிவபெருமான் நின்ற திருக்கோலம் இந்துக்களின் தெய்வக்கோலம் என்ற நிலையைப் பெற்றது.
காலைக் கதிரவன் செவ்வொளி பரப்பி கடல் நீர்ப்பரப்பில் மீது உதயமாகிறான். இமயக் காட்சியைப் போல இதுவும் ஓர் இயற்கைக்கு காட்சிதான். சிவந்த சூரியன் செவ்வேள் என்கிற முருகன் ஆகிறான். சூரியனின் வருகையை சேவல் கூவி அறிவிக்கிறது. ஆகவே சேவற்கொடி அவனது வருகையை அறிவிக்கும் கொடியாகிறது.
காலை சூரியன் கடல் மீது உதிக்கும் காட்சியை ஒருகணம் கற்பனை செய்யுங்கள். நீல நிற நீர்ப்பரப்பின் மீது சூரியன் புறப்படுகிறான். மயில் தோகை விரித்த காட்சி அல்லவா அது! ஆகவே முருகனின் வாகனமாக மயில் ஆகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேற்கண்ட அற்புதமான, 'இயற்கையும் இறைவனும்' ஒன்றே என்று நிறுவும் வகையில் அமைந்த, வருணனையை அளித்தவர் யாரோ நவயுகக் கவிஞரோ அல்லது ஞான பீட விருது பெற்ற, நவீன இறை மறுப்பு எழுத்தாளரோ அல்ல. இதைச் சொன்னவர் 'வாழும் தெய்வம்' என்று இன்றளவும் பலராலும் போற்றி வணங்கப்படும் மஹாபெரியவா என்ற காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
பொதுவாகவே மனிதர்களுக்கு ஒருவரைப் பற்றிய 'இவர் இன்ன மாதிரி ஆசாமி' என்ற கண்ணோட்டம் இருக்கும். இது நாம் ஐம்புலன்கள் மூலம் அறிந்த தகவல்களைக் கொண்டு எடுத்த முன்முடிவே. காஞ்சி பரமாச்சாரியார் போன்ற மடாதிபதிகள் பற்றியும் இத்தகைய முன்முடிவு சார்ந்த கண்ணோட்டம் பலருக்கும் இருக்கும்.
ஆனால் கிட்டத்தட்ட ஒரு பகுத்தறிவுவாதியைப் போன்று அவர் இறை உருவத்தை, இயற்கையின் வெளிப்பாடாக விவரிப்பதைப் படித்து ரசித்ததும், அத்தகைய முன்முடிவு - அது எவரைப் பற்றி இருந்தாலும் - எவ்வளவு அபத்தமானது என்று புரியும்/யக்கூடும்!
எது ஒன்றை [அ] எவரைப் பற்றியும், காரண அறிவு சார்ந்த முன்முடிவுகளைச் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு, வாழ்வில் எதையுமே 'உள்ளது உள்ளபடி' நோக்க / அனுபவிக்க அறிந்து கொண்டோமானால், பிரபஞ்ச நடனமான வாழ்வில் எவருமே, எதையுமே ரசித்து ஆனந்தப்பட வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment