Thursday, 18 January 2024

நீராகாரம்

 


நீராகாரம்-சோற்றுநீர்-பயன்கள்
அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று `பழைய சோறு, கம்பங் களிதான்... வேற என்ன? என்று பதில் சொல்வார்.
பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association,) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது.
வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் ஒரு பழமையான உணவுத்தான் நீராகாரம்.....
நீராகாரம், பழஞ்சோறு, பழைய சாதம், பழையது என்று பலவிதமாய் அழைக்கப்படும் பழைய சோற்றுக்கு இணையான எளிய உணவு ஒன்றை இவ்வுலகில் எவராலும் காட்ட இயலாது. அத்தகு பெருமை வாய்ந்தது இப்பழைய சோறு!
பழைய உணவென்றாலே நலக்கேடுதானே தரும், அப்படியிருக்க இது மட்டும் எப்படி அருமருந்தாகிறது; அரிய உணவாகிறது? என்று நீங்கள் கேட்கலாம்.
பழைய சோற்றைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சாப்பிடுவதுதான் கேடு பயக்கும். மாறாக, மீதியுள்ள சோற்றில் நல்ல நீரை ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தைத் தேவையான அளவு நறுக்கிப் போட்டு மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை அச்சோற்றை நீருடன் சேர்த்து சாப்பிட்டு வெங்காயத்தையும் இடையிடையே மென்று உண்டால் அதுதான் அற்புத உணவாகிறது.
இன்றைக்கு மருத்துவர்கள் கூறும் எல்லா ஊட்டச் சத்துக்களும் இதில் உண்டு!
அதற்கு என்ன காரணம்?
இரவு முழுக்க நீருடன் சோறு ஊறும்போது, அதில் நுண் உயிரிகள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) கோடிக்கணக்கில் பெருகுகிறது. அதனோடு வைட்டமின் பி6, பி12 போன்றவையும் இதில் அதிகம் உள்ளன. பழைய சாதம் புளித்து நொதிக்கும்போது இந்த விளைவுகள் உண்டாகின்றன.
சாதாரண தானியங்கள், பருப்புகளைவிட முளைகட்டிய பின் அவை பலமடங்கு சக்தியும், சத்தும் மிக்கனவாய் மாறுவது போலவே, பழைய சோறு நீரில் நொதிக்கும்போது அதன் பயன் பன்மடங்கு உயருகிறது.
அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்டிருக்கும் பழைய சோற்றின் நன்மைகள்...
* உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.
* காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
* இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும்.
* ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.
* முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும்.
* ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
* எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.
* புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.
* வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும்.
பழைய சோறு இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், பழைய சோறு. பாரம்பர்யத்தைப் போற்றுவோம்!

No comments:

Post a Comment