Wednesday, 20 April 2016

MIDWEEK INSPIRATION

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.
நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம்.
இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.
மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!
2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!
மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம்.
இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது.
இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.
3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!
இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் – அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.
4. பொறாமை கொள்ளாதீர்!
வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!
நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!
5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!
உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.
6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!
இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.
7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!
இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.
8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்
தியானம் – உள்மன ஆய்வு – மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்
.
9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!
வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.
10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!
“இது என்னால் முடியுமா? முடியாதா?” என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.
முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது – மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

மன அமைதிக்கு 6 விஷயங்கள்



வாழ்வில் உயர்வும் தாழ்வும், மகிழ்ச்சியும் துக்கமும் சேர்ந்தே வரக்கூடியது. தினசரி புதுப்புது சவால்களை சந்தித்து எதிர் நீச்சல் போடும் நமக்கு,  மன அமைதி அத்தனை எளிதாக கிடைப்பதில்லை. இருந்தாலும் மண்டையை பிளக்கும் வெயிலுக்கு இடையில் மண்பானை தண்ணீர் குடிப்பது போல, கீழ்க்கண்ட ஆறு விஷயங்களை கடைபிடித்தால் மனம் அமைதியடைய வாய்ப்பு இருக்கிறது.
 
1) மனதில் கோபம், வெறுப்பு ஏற்படும்போது யாரிடமும் பேசாதீர்கள். வெறுமனே கண்களை மூடி உங்களை சுற்றியுள்ள சத்தங்களை கேளுங்கள். இல்லையென்றால் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பறவைகளின் கீச்சுக்குரல், காற்றின் இசை, பூனை, நாய்களில் சத்தம், மெல்லிய இசை ஆகியவற்றை கேட்கலாம்.
2) மனத்தளர்ச்சி ஏற்படும் போது கண்களை மூடி' நான் வலிமையானவன்' ' நான் கோபப்படமாட்டேன்' எனக் கூறிக்கொள்ளுங்கள். இது தவறான எண்ணங்களை நோக்கி உங்கள் மனம் செல்வதை தடுக்கும்.
3) மூச்சை இழுத்து விடுவதும் ஒரு தியானம்தான். மெதுவாக மூச்சை இழுத்தபடி ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்கள். மீண்டும் பத்து முதல் ஒன்று வரை எண்ணியபடி மூச்சை மெதுவாக விடுங்கள்.
4) புதிய காற்று, சூரிய ஒளி, தண்ணீர், உணவு, குழந்தைகள், மலர்கள், சாக்லேட் , வாழ்க்கைப் பாடங்கள், புத்தகம், செல்ல பிராணிகள், நடை பயிற்சி, நடனம், தூக்கம் இவை எல்லாம் உங்களின் மன இறுக்கத்தை போக்கும் அற்புத மருந்துகள்.
5) உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த யாரும் இல்லை என நினைக்கிறீர்களா? அப்படி என்றால் 'மனதுடன் பேசுங்கள்'. 'வாழ்கையில் எனக்கு என்ன தேவை?' என மனதிடம் கேளுங்கள். கேட்கவில்லை என்றால் எதுவும் கிடைக்காது.
6) தோல்வி உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம். ஆனால், தோல்வியடையாத மனிதர்களே உலகில் இல்லை. தோல்வியே இல்லை என்றால் எப்படி உங்களால் கற்றுக்கொள்ள முடியும்? நீங்கள் தோல்வியடைவில்லை; உங்கள் முயற்சிதான் தோல்வியடைந்து என நினைத்துக்கொள்ளுங்கள். 
நன்றி - விகடன் 
 

Tuesday, 12 April 2016

SUCCESS...38

வெற்றியாளர்களின் ஒன்பது பண்புகள்!

01-புதிய வேலை தேடுவதை பற்றி பேசக் கூடாது.
02-முக்கியமாக (அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி) உங்கள் சம்பளத்தை பற்றி பேசவே கூடாது..!
03-கிண்டல், கேலி செய்வது உங்கள் இயல்பாகவே இருந்தாலும் அதை தவிர்த்திடுங்கள் (முக்கியமாக ஜூனியர்களிடம்)..!
04-பிறர் எப்படி வாழ்கிறார்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டதீர்கள்..!
05-அதே சமயம் உங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை சார்ந்த விடயங்களை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்..!
06-உங்கள் போட்டியாளர்கள் மீது எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்..!
07-“:நான் புகைப்பிடிப்பேன், எனக்கு மது பழக்கம் உண்டு” என்ற விடயங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ள துளியும் முயல வேண்டாம்..!
08-உங்கள் வேலை மீது எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்பதை வெளியே காட்டிக்கொள்ளாதீர்கள்..!
09-உங்கள் அந்தரங்க விடயங்கள் மற்றும் இல்லற வாழ்க்கை பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ள கூடாது..!

Saturday, 9 April 2016

WEEKEND WISDOM

ம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமைய கடைபிடிக்க வேண்டிய கஷ்டமில்லாத காரியங்கள். உங்களுக்காக
A முதல் Z வரை                                                                                நன்றி - விகடன் 

என்னடா கஷ்டமில்லாத காரியங்கள் என்று 26 கருத்துகள், 26 போட்டோவை போட்டு திணித்து விட்டார்களே என்று நினைக்காதீர்கள். இவை அனைத்தும் படிக்க கஷ்டமாக இருக்கலாம். ஆனால், இவை ஒவ்வொன்றும் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமைய உறுதுணை செய்பவை. கொஞ்சம் உங்கள் வாழ்க்கையிலும் கடைபிடிச்சுதான் பாருங்களே.
A முதல் Z வரை  கஷ்டமில்லாத காரியங்களை கடைபிடித்து உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

தொகுப்பு: சோ.கார்த்திகேயன்
வண்ணம்: சுடலை முத்து

Friday, 8 April 2016

எதிர்காலம்

எதிர்காலத்தை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் ஜோதிடம் பார்ப்பது வழக்கம். நமது ஊர்களில் கைரேகை ஜோதிடம், கிளி ஜோதிடம், குறி சொல்லுதல் போன்றவை பிரபலம். சிலர் இதை மூட நம்பிக்கை என்று கூட கூறுவார்கள்.
வளர்ந்து வரும் அறிவியல் விஞ்ஞான உலகத்தில் இதை எல்லாம் யாராவது நம்புவார்களா என பலர் கூறுவதுண்டு. ஆனால், இந்த ஜோதிடம், குறி சொல்லுதல் போன்றவை எல்லாம் நமது நாட்டில் மட்டும் பின்பற்றப்படும் ஒன்றல்ல.
சீனா, எகிப்து, ஐரோப்பிய, ஆப்ரிக்கா என பல உலக நாடுகளில் பண்டையக் காலத்தில் இருந்தே இவை பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முறையில் எதிர்காலத்தை பற்றி குறி சொல்லுவது நடைமுறையில் இருந்துள்ளன….
ஆரக்கிள்
ஆரக்கிள் என்பதன் பொருள் தேவ வாக்கு அல்லது அசரீரி ஆகும். பழங்காலத்தில் ஆரக்கிள் என்பது ஓர் நபர் ஆவார். இவர் புத்திமதி அல்லது ஆலோசனைகளை தருபவராக இருந்தார். இவர் தான் எதிர்காலத்தை பற்றிய தீர்க்கதரிசன கணிப்புகள் பற்றி கூறுவார். இந்த முறை ஒருவிதமான தெய்வீக முறையாக இருந்து வந்தது. லத்தீன் வார்த்தையில் ஆரக்கிள் என்றால் “பேசு” என்று பொருள்.
ஆரக்கிள்
ஆரக்கிள் பேசுவது கடவுளே நேரில் பேசுவது போன்றும், அவர் கூறும் வார்த்தைகள் கடவுளின் வாக்கு என்றும் கடைப்பிடிக்கப்பட்டது. நாம் கூட நமது ஊர்களில் இதை காண முடியும். ஆனால், இன்று நிறைய போலிகள் தான் இருக்கிறார்கள்.
சீட்டுகளைக் கொண்டு குறி சொல்லும் கலை
சீட்டு ஆட பயன்படும் சீட்டு கட்டு கார்டுகளை கொண்டு குறி சொல்லும் முறை ஆகும். 18, 19-ம் நூற்றாண்டுகளில் இது மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. ஆசியா, எகிப்து, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இவை செயல்பாட்டில் இருந்தன.
ரூன்ஸ் (Runes)
ரூன்ஸ் என்பது பண்டையக் காலத்து ஜெர்மானிக் எழுத்து ஆகும், இதை எழுதவும், தெய்வ வாக்கு கூறவும், மந்திரஜாலம் செய்யவும் பயன்படுத்தி வந்தனர். ஏறத்தாழ 1500 வருடங்களுக்கு முன்னர் இது வடக்கு கோதியர்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ரூன்ஸ் (Runes)
இங்கிலாந்து, ஸ்காண்டிநேவியா போன்ற பகுதிகளில் பின்னர் இந்த முறை தோன்ற ஆரம்பித்தது. ஒரு கிறிஸ்துவ புத்தகத்தில் இது பேகன் நடைமுறையில் இருந்து வந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.. ரூன் எனும் வார்த்தைக்கு இரகசியம், மர்மம் போன்ற அர்த்தங்கள் கூறப்படுகின்றன.
ரூன்ஸ் (Runes)
ஒருவர் தனது சூழ்நிலை பற்றி அறிந்துக் கொள்ள முனையும் போது ரூன்ஸ் படிக்கப்படுகிறது. சில சமயங்களில் இது தெளிவற்றும் இருக்கிறது என கூறுகிறார்கள்.
பகடை முறை
பகடை உருட்டி குறி சொல்லும் முறை இது. வரலாற்றில் மிகவும் பழமையான முறையில் இதுவும் ஒன்றாகும். பண்டைய கிரேக்க முறையில் குறி சொல்வதற்கு இந்த பகடை முறை பின்பற்றப்பட்டுள்ளது. ரோமர்கள் இதை தலி (Tali) என்று கூறிவந்துள்ளனர். நான்கு பகடைகளை ஒரே நேரத்தில் உருட்டி அதில் விழும் எண்களை வைத்து குறி கூறப்படுகிறது.
பகடை முறை
இதில் 1,3,4,6 என விழுந்தால் மிகவும் நல்லது என்றும், 1,1,1,1 என்று விழுவது மிகவும் மோசமானது என்றும் கூறப்படுகிறது. சில சமயங்களில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று என பகடைகளை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் மூன்று பகடைகள் உருட்டும் முறை பிரபலமாக இருந்து வந்துள்ளது.
பகடை முறை
எட்டு அங்குல சுற்றளவில் வரையப்பட்ட ஓர் வட்டத்திற்குள் தான் இந்த பகடைகள் உருட்டப்படுகின்றன. வட்டத்தை விட்டு வெளியே போகும் பகடைகள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டாது.
டெஸ்ஸோமென்சி (Tasseomancy)
டீ இலைகளை கொண்டு குறி சொல்லப்படும் முறைக்கு டெஸ்ஸோமென்சி என்று பெயர். உள்ளுணர்வை கொண்டு மாந்த்ரீகவாதி குறி கூறும் முறை இது. தேநீரை வடிக்கட்டாமல் ஓர் கோப்பையில் ஊற்றப்படும்.
டெஸ்ஸோமென்சி (Tasseomancy)
குறி சொல்லும் மாந்த்ரீகவாதி அதை யாருக்கு குறி கூற வேண்டுமோ அவரை பற்றி விசாரித்துவிட்டு முழுமையாக பருகிவிடுவார். அந்த கோப்பையில் தேநீர் இலைகள் மட்டும் தேங்கி இருக்கும். அதன் நிலை தோற்றத்தை, வடிவத்தை வைத்து இவர் குறி கூற ஆரம்பிப்பார்.
டெஸ்ஸோமென்சி (Tasseomancy)
பாம்பு, மண் வெட்டி, மலை, குதிரை போன்ற வடிவில் தான் பெரும்பாலும் அந்த இலைகள் தோன்றும். இதை வைத்து இவர்கள் குறி கூறுவார்கள். பாம்பு பகையையும், மண்வெட்டி தொழில் ரீதியாகவும், மலை பயணத்தை பற்றியும், வீடு வெற்றியை பற்றியும் வெளிப்படுத்தும் அறிகுறிகளாக இருக்கின்றன.
மேற்கத்திய ஜோதிட முறை
மேற்கத்திய ஜோதிட முறை என்பது ஜாதகம் குறித்தது ஆகும். பிறந்த தேதி, சூரிய அடையாளம் அல்லது குறி போன்றவற்றை வைத்து எதிர்காலத்தை பற்றி கூறும் முறை இதுவாகும். ஓர் வருடத்தை 12-ஆக பிரித்து ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் சூரியனின் நிலை ஒவ்வொரு இடத்தில் இருப்பதை குறித்து வெவ்வேறு இராசிகள் மற்றும் இராசி குறித்த குணாதிசயங்கள், திறமைகள் பற்றி விளக்கி கூறப்படுகிறது.
மேற்கத்திய ஜோதிட முறை
ஒவ்வொரு இராசிக்கும் குறிப்பிட்ட திறமை, குணாதிசயங்கள் இருப்பதாக இதில் நம்பப்படுகிறது. இந்த 12 இராசிகளையும், நெருப்பு, நிலம், காற்று, நீர் என பிரிக்கிறார்கள். காற்றும், நெருப்பும் ஆண்பால் எனவும், நீரும், நிலமும் பெண்பால் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இராசிகளை மூன்று பண்புகள் வகையாகவும் பிரிக்கிறார்கள்.
சீன முறை ஜோதிடம்
உலகிலேயே பழமையான ஜோதிட முறை சீனர்களுடையது என கூறப்படுகிறது. பைபிள் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது தோன்றிவிட்டது எனவும் கூறுகிறார்கள். சீன ஜோதிடம், சீன தத்துவத்திற்கு தொடர்புடையதாக இருக்கிறது. சொர்க்கம், பூமி, நீர் என்ற மூன்று நல்லிணக்க தியரியை தொடர்புடையது என கூறப்படுகிறது.
சீன முறை ஜோதிடம்
சீனாவில் ஒவ்வொரு வருடமும் ஓர் விலங்கை அந்த ஆண்டின் குறியாக வைத்துக் கொள்வார்கள். எடுத்துகாட்டாக நீங்கள் 1968 ஜனவரி 30-ல் இருந்து 1969 பிப்ரவரி 16-ம் நாள் வரை பிறந்திருந்தால் உங்களுக்கான சீன விலங்கு குறி குரங்கு, மற்றும் காஸ்மிக் தனிமம் பூமி. இது போன்று பல குறிகள் சீன முறையில் இருக்கிறது.
டேரட் (Tarot)
டேரட் என்ற இந்த முறையின் தோற்றமே ஓர் மர்மமாக தான் இருக்கிறது. இது 18,19-ம் நூற்றாண்டுகளில் கார்டுகளை வைத்து குறி சொல்லும் முறையாக தோன்றியது. டேரட் முறையையில் குறி தெரிந்துக் கொள்ள நாடுவோர் ஒருவரும், படிப்பவர் ஒருவரும் தேவை. நாடி வந்தவர் நபர் ஒரு கட்டு கார்டுகள் நன்கு குலுக்கி அதிலிருந்து கார்டை தேர்ந்தெடுப்பார்.
டேரட் (Tarot)
அவர் தேர்ந்தெடுத்த கார்டை வைத்து பரப்பி அதன் பின் மற்றும் முன் உள்ள மற்ற கார்டுகளின் நிலைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இதை வைத்து நாடி வந்தவர் கேட்கும் கேள்விகளுக்கு குறி கூறுபவர் பதில் கூறுவார்.
எண் கணிதம்
எண் கணிதம் என்பது நமது பெயரில் இருக்கும் எழுத்துக்களுக்கு எண் மதிப்பு கொடுத்து அதன் கூட்டு தொகையை வைத்து கூறப்படும் குறி சொல்லும் முறையாகும். ஒருவரது பலம், பலவீனம், தேவைகள், தடைகள், உணர்ச்சி வெளிபாடு, அவரது செயல்பாடுகள் என அனைத்தை பற்றியும் அறிந்து கொள்ள இந்த எண் கணித முறை பயன்படுத்தப்படுகிறது.
எண் கணிதம்
மேலும் நீங்கள் பிறந்த நாள் மற்றும் நேரத்தை வைத்து உங்கள் அதிர்வெண்கள் பற்றியும் கண்டறிகிறார்கள். பெயர் மற்றும் பிறந்த தேதியை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள் அனைத்தையும் எண் கணித முறையில் கூறப்படுகிறது.
கைரேகை ஜோதிடம்
ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கும் பழமையானது இந்த கைரேகை ஜோதிடம். கை ரேகையில் இருக்கும் கோடுகள், குறிகளை வைத்தும், அதன் நீளத்தை வைத்தும் ஒருவரின் இறந்த கால, எதிர் காலத்தை பற்றி கூறுவது தான் இந்த கைரேகை ஜோதிட முறை.
கைரேகை ஜோதிடம்
உங்கள் வாழ்க்கை பயணத்தின் பிரதி தான் உங்கள் கைரேகை என ஜோதிடர்கள் கூறுகிறார்கள். உறவுகள், உடல்நலம், வேலை, பொருளாதாரம், பயணம், எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எப்போது முடிவெடுக்க வேண்டும் என்பது பற்றியும் இதில் கூறப்படுகிறது.
நாடி ஜோதிடம்
பல வருடங்களுக்கு முன்னர் இன்று பிறந்த குழந்தையை பற்றி எழுதி வைக்கப்பட்ட ஏடுகளை வைத்து கூறப்படும் ஜோதிடம் தான் நாடி ஜோதிடம். கட்டை விரல் ரேகையை வைத்து ஏடுகள் எடுத்து படிக்கிறார்கள். ஆனால், பல ஏடுகள் அழிந்துவிட்டன என்றும், இன்று பலரும் போலி ஏடுகளை தயாரித்து ஜோதிடம் கூறி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
கிளி ஜோதிடம்
இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். கடவுள்கள் படம் அச்சடிக்கப்பட்ட கார்டுகளை வைத்து, கூண்டில் இருந்து வரும் கிளி எந்த சீட்டை தேர்வு செய்து தருகிறதோ, அதில் வந்திருக்கும் கடவுளை வைத்து ஒருவருக்கான குறி சொல்லப்படுகிறது.
குறி சொல்லுதல்
நமது ஊர்களில் குறி சொல்லும் முறையே ஒன்று தனியாக இருக்கிறது. வெறுமென கையையும், முகத்தையும் பார்த்தே ஒருவரது எதிர்காலத்தை பற்றி இந்த குறி சொல்லும் முறையில் கூறப்படுகிறது.
நவீன காலம்
இவை யாவும் சென்ற நூற்றாண்டு வரை தான் பெரிதாய் நம்பப்பட்டு வந்தது. இன்றைய அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியில் நமது திறமையால் மட்டுமே முன்னேற்றத்தை காண முடியும் என இன்றைய தலைமுறை நம்புகிறது. ஆதலால் தான் இவை ஒவ்வொன்றாக அழிவை நோய்க்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன.

Thursday, 7 April 2016

MIDWEEK INSPIRATION

வாழ்க்கையில் முன்னேற 

20 கோட்பாடுகள்!

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.
* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* விட்டுக் கொடுங்கள்.
* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.
* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.