Saturday 20 January 2018

ஏழாம் சுவை - நகைச்சுவை - 4

ஏழாம் சுவை - நகைச்சுவை 
- அறு(சு)வையானந்தா 



" ஜி, உங்கள் ஏழாம் சுவையைப் படித்த நிறைய அன்பர்கள்  நகைச்சுவையை நன்கு அனுபவித்தோம் என்று தெரிவித்திருக்கின்றார்கள். அதில் ஒர்  அன்பர் ஏழாம் சுவையில் ' அசைவம் ' உண்டா என்று கேட்டிருக்கின்றார்  "என்றதும்

" உணவுக்காக உயிர்கொலை கூடாது என்று ஐந்தொழுக்கப் பண்பாட்டில் வாழும் நாம் நகைச்சுவையிலும் அசைவம் தவிர்ப்பது மிக நல்லது " என்ற ஜி,


" ஒரு முறை மகரிஷி அவர்கள் கருவாட்டினைப் பற்றி நகைச்சுவையாகச் சொன்னார்கள் - " என்று ஒரு சம்பவத்தினை ஜி சொல்ல ஆரம்பிக்கின்றார்.


" 1980ம் ஆண்டு மகரிஷி முதன்முறையாக திருச்சி வந்திருந்தார்கள். கூடவே அழியாரில் அருள் அரங்கு கட்டுவதற்கு உதவிய திருமதி இந்திரா குப்தா  அவர்களும், அமெரிக்க அருள்நிதி  டோனி சதானந்  மற்றும் மகரிஷிக்கு உதவியாக  திருமதி ஓமனா அவர்களும் வந்திருந்தார்கள். திருச்சி மத்தியப் பேரூந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார்கள். ஒருநாள் மாலையில் எல்லோருமாக பேரூந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது சைக்கிளில் வந்த ஓர் இளைஞன் அந்த பகுதியில் இருந்த திரைப்பட கவர்ச்சிப் படத்தைப் பார்த்துக்கொண்டே அங்கிருந்த போலீஸ்காரர் மீது மோதிவிட்டான். அன்றிரவு  மகரிஷியிடம் இந்த கவர்ச்சி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது மகரிஷி அவர்கள்  ' கவர்ச்சி என்பது எல்லா பொருள்களிலும் இருக்கிறது. எந்த புலனை அது அதிகம் கவர்கிறது என்பதில்தான் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். உதாரணமாக கருவாடு இருக்கிறதே அது பார்ப்பதற்கு அழகாகவா இருக்கிறது? அதன் நாற்றமும் நமக்கு பிடிப்பதில்லை. ஆனால் கருவாடு சாப்பிடுபவர்களிடம் அதன் சுவையை கேளுங்களேன். சப்புகொட்டிக்கொண்டு அதன் சுவையைப் பற்றி பேசுவார்கள். எனவே கருவாட்டின் கவர்ச்சி அதன் சுவையிலே'. என்று மிக  எளிமையாக  நகைச்சுவையுடன் கவர்ச்சி பற்றி விளக்கியது என்றுமே மறக்க முடியாது" என்கிறார் ஜி.


" ஜி, மகரிஷி சொன்ன நகைச்சுவைகள் பற்றி மேலும் சொல்லுங்கள் " என்று நாம் கேட்க


" முதன்முறையாக ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் கம்ப்யூட்டர் இணைத்தபோது  மகரிஷி எல்லாவற்றையும் ஆர்வமாக கவனித்து, எப்படி இயக்குவது என்பதையெல்லாம் கேட்டு தெரிந்துகொண்டார். ' இதுதான் சாமி, மவுஸ்'. என்றதும் உடனே மகரிஷி அவர்கள் ' ஒ! அதுதான் கம்ப்யூட்டருக்கு மவுஸ் கூடிகிட்டேபோவுது!' என்று நகைச்சுவையுடன் சொன்னதும் ஞாபகத்திற்கு வருகின்றது" என்கிறார் ஜி.


" ஜி, இன்னொன்று சொல்லுங்கள் " என்று நாம் கேட்க


" ஒருமுறை திருவான்மியூர் தலைமை மன்றத்தில் மகரிஷி அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஜென் புத்திஸம்  பற்றி பேச்சு வந்தது. நான் ஒரு குறிப்பிட்ட ஞானி பற்றியும், அவர் ஜென் கதைகள்  மூலமாக  புத்திஸம் பற்றி எளிதாக விளக்குகிறார் என்பதைப் பற்றியும் சொன்னதும்   மகரிஷி அவர்கள் ' புத்திஸம் நல்லதுதான். ஆனால் நீங்கள் சொல்பவர் அதில் புத்தியில்லா இசத்தையும் கலந்துவிடுகிறாரே!' என்று  உடனே சொன்னது  மகரிஷியின் நகைச்சுவையுணர்வினை மேலும், மேலும் வியக்க வைத்தது"  என்கிறார் ஜி.


" இன்னொன்று சொல்லுங்கள், ஜி!"  என்று நாம் கேட்க அவரோ


" தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் தொகுத்துள்ள ' மகரிஷியின் நகைச்சுவையுணர்வு' புத்தகத்தில் படித்துக்கொள்ளுங்கள் "  என்று சொல்லி " இன்றைக்கு இவ்வளவு போதும் " என்று 

முடித்துக் கொள்கிறார்  ஜி.

Friday 12 January 2018

வாழ்க வளமுடன் or வாழ்க வளத்துடன்...... எது சரி...?

’வாழ்க வளமுடன்!’ 
என்று கூறுவது தவறா? 
இலக்கணம் என்ன சொல்கிறது?
- பேராசிரியர் பெருந்தகை அமரர் அ /நி K G சாமி ஐயா