’வாழ்க வளமுடன்!’
என்று கூறுவது தவறா?
இலக்கணம் என்ன சொல்கிறது?
- பேராசிரியர் பெருந்தகை அமரர் அ /நி K G சாமி ஐயா
நமது இயக்கத்தில் வாழ்க வளமுடன் என்கின்ற ஒரு தாரக மந்திரத்தை நமது அருள் தந்தை அவர்கள் உருவாக்கிச் சேர்த்திருக்கிறார். இது மனவளக்கலைஞர்களாகிய நம்மால் எந்த நேரமும் பயன்படுத்தப்படுகிறது. அது அற்புதங்களையெல்லாம் சாதித்திருக்கிறது என்பது நமக்குத்தான் தெரியும். அதனிடம் வசீகரம் எவ்வளவு இருக்கிறதென்றால், நமது இயக்கத்தைச் சாராதாரும் இந்த வாழ்த்து வாசகத்தை மகிழ்ச்சியோடும் வெற்றியோடும் பயன்படுத்தி வருகிறார்கள். வீட்டு வாசலில் எழுதிக் கொள்கிறார்கள். ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். கோலம் போடுகிறார்கள். வாகனங்களில் எழுதி கொள்கிறார்கள். இன்னும் சினிமாவிலும் கூட வணக்கம் போடுவதற்குப் பதிலாக இதனைப் பயன்படுத்துகிறார்கள்.
நல்ல விஷயம் ஒன்று எங்கே உருவானாலும், அதனால் விளையும் நன்மைகளைக் கண்டு பொறாமைப்படுவோர்களும் சமுதாயத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இந்த வாழ்த்து வாசகத்தில் இலக்கணப் பிழை ஏதும் இருக்காதா என்று ஏக்கத்தோடு துருவி துருவிப் பார்க்கிறார்கள்.
1970 – களில் நான் சந்தித்த எனது தமிழாசிரிய நண்பர் ஒருவர், “வாழ்க வளமுடன் என்று சொல்வது இலக்கணப் பிழை. வாழ்க வளத்துடன் என்று சொல்வது தான் இலக்கணப்படி சரி. வேதாத்திரி மகரிஷியாகிய ஒரு நல்ல பெரியவர் இவ்வாறு தமிழை இளக்காரமாக நினைக்கலாமா?” என்று கேட்டார். எனது அறிவைக் கொண்டு அவருக்கு உடனடியாக மறுப்பு ஏதும் என்னால் சொல்ல முடியவில்லை என்றாலும் பின்வருமாறு சொன்னேன்.
’பெரியவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். எங்கள் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நீண்ட காலம் தவம் செய்த ஒரு ஞானி. அவர் ஒன்று சொல்வதில் தவறு இருக்க முடியாது. அதிலுள்ள இலக்கண நுட்பத்தைப் பற்றி சட்டென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை யோசித்துப் பார்க்கிறேன். என்றாலும், இதற்கு இலக்கணப்பூர்வமாக அமைதி இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இது போல் வேறு யாராவது பெரியவர்கள் சொல்லியிருந்தால், அதாவது அம் ஈற்று பெயர்ச் சொல்லுக்குப் பின்னால் வேற்றுமை உருபு வந்தால் அம் கெட அத்துச் சாரியை தோன்றி, அதன் பிறகு உருபு வேற்றுமையுருபு புணரும் என்ற இலக்கண விதிக்குப் புற நடையாக, விதி விலக்காக யாராவது முன்னமேயே பெரியவர்கள் இலக்கியத்தில் அத்துச் சாரியை சேர்க்காமல் எழுதியிருக்கிறார்களா என்று ஆராய்ந்து பார்த்து வருகிறேன். அப்படி யாராவது பெரியவர்கள் அத்துச் சாரியை இல்லாமல் எழுதியிருந்தால் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
அதற்கு அந்த ஆசிரியர், அப்படி யாரும் பெரியவர்கள் பிழையே செய்திருக்கமாட்டார்கள் என்று சாதித்தார். நான் என் மனதை அமைதி நிலையில் வைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று திருக்குறளை எடுத்துத் திறந்தேன். கண்ணோட்டம் என்ற அதிகாரம் வந்தது. அதில் முதல் குறளிலேயே எனக்குச் சான்று கிடைத்து விட்டது. அந்தக் குறள் வருமாறு:-
கண்ணோட்டம் என்பது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
கண்ணோட்டம் என்ற உயர்ந்த பண்பு இல்லாதவர்கள் பூமிக்குப் பாரமாவார்கள் என்பது இதன் பொருள். இங்கே பூமி என்ற பொருள் பட, நிலம் என்ற சொல்லை வள்ளுவர் கையாண்டு இருக்கிறார். நிலம் என்ற சொல்லொடு கு என்ற வேற்றுமையுருபு ஏறுகிறது. எனது நண்பர் சொல்வது தான் சரியென்றால், நிலம் + கு = நிலத்தக்கு என்று வர வேண்டும். ஆனால் வள்ளுவரோ, அத்துச் சாரியை விட்டு விட்டு, நிலக்கு என்று எழுதியிருக்கிறார். எனவே மிகப் பெரியவர்கள் ஒரே வழி இலக்கணத்தை மீறாமல் என்ற எனது கருத்து வலுப்பெற்றது.
மறுநாள்எமது ஆசிரிய நண்பரிடம் திருக்குறளைக் கொண்டு போய்க் காட்டியபோது, அவர் வாயடைத்துப் போனார். ‘வேதாத்திரி மேல் குற்றம் சொன்னால் அது வள்ளுவர் மேல் போய் விழுகிறதே!’ என்று அவர் மிரண்டு போனார். பிறகு இந்த விஷயத்தை யாரும் இழந்துப் பேசி நான் கேட்டது இல்லை. ஆனால், தற்போது ஏதோ ஒரு வாரப் பத்திரிக்கையில் இதே குற்றத்தை மகரிஷி மேல் சுமத்தி இருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். அந்த வார இதழை எனக்குக் காட்டினார். நமது வாசகர்களும் அதைப் பார்த்திருக்கலாம். மனம் வருந்தியும் இருக்கலாம்.
இதைப் பற்றி ஒரு தமிழாசிரியரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவர் என்னை அதிசயமாகப் பார்த்து வாழ்க வளமுடன் என்பது இலக்கணப்படியே சரிதானே என்று கூறி, அதற்கு நன்னூல் சூத்திரமும் குறிப்பிட்டார்! அதன் விவரம் பிறகு கூறுகிறேன். தோன்றக் காரணமாகவும், இருக்க இடமாகவும் அவைகளை தாங்குகின்ற, இயக்குகின்ற சக்தியாகவும், ஒளி, ஒலி, அழுத்தம் என்ற மூன்று விதமான எழுச்சியியக்கத்தைப் பிரபஞ்சம் முழுவதுக்கும் வியாபிக்கச் செய்கின்ற பெரு வல்லமை பொருளாக அறிவு விளங்குகிறது. பொருள் என்றே கூற முடியாத படி, புலன்களுக்கெட்டாமல், தான் அசையாத் தன்மையதாய் உள்ள பேராதாரப் பெரு வெளியில், மனதுக்கு இதுவரையில் எட்டியவகைகளாகவும், இன்னும் எட்டாதவைகளாகவும் உள்ள எல்லா ரகசியங்களும் அடங்கியுள்ளன. எது சரி...?
’வாழ்க வளமுடன்!’ என்று கூறுவதில் இலக்கணக் குற்றம் இல்லை. ‘வளம்’ என்ற மகர ஈற்றுப் பெயர்ச்சொல்லிற்கு பிறகு ‘உடன்’ என்ற மூன்றாம் வேற்றுமை உருபு சேருகின்ற பொழுது இடையில், ‘அத்து’ச் சாரியை சேர்க்க வேண்டியது அவசியமில்லை என்று ஜனவரி 2001 இதழில் பார்த்தோம். அதற்கு, ‘கண்ணோட்டம் உள்ளது உலகியல் அஃதிலர் உண்மை நிலக்குப்பொறை’, என்ற குறளையும் மேற்கோளாகக் கொடுத்திருந்தோம். மேற்படிக் கட்டுரையில் சொல்லியிருந்த தமிழாசிரியர் அக்கட்டுரை வெளிவந்த பின் அதைப் படித்து விட்டுத் திருக்குறளில் மகர ஈற்றுப் பெயர்ச்சொல்லுடன் அத்துச் சாரியைச் சேர்க்காமல் வேற்றுமையுருபை ஏற்றி எத்தனையோ குறள்கள் இருக்கின்றனவே. இதோ என்று, ‘நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில் – பிறற்குரியாள் தோள்தோயா தார்’, மற்று ‘கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது – இல்லை நிலக்குப் பொறை’ இரண்டு குறள்களைக் கூறினார்.
மேலும் அந்தத் தமிழாசிரியர் அத்து முதலிய சாரியைகளை தவிர்க்கவும் செய்யலாம் என்பதற்கு பின்வரும் நன்னூல் சூத்திரத்தையும் குறிப்பிட்டார். ‘பதமும் விகுதியும் பதமும் உருபும் – புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை – வருதலும் தவிர்தலும் விகற்பமும் ஆகும்’.
மகர ஈற்றுப் பெயர்ச் சொற்களோடு வேற்றுமையுருபைச் சேர்க்கும் போது அத்துச் சாரியையும் சேர்க்க வேண்டியதில்லை என்பதற்கு இலக்கண ஆசிரியரான நன்னூலாரை விட வேறு யாரிடம் போய்ச் சான்று கேட்க முடியும்.
’வாழ்க வளமுடன்’ என்று கூறுவது தவறு என்பதில் எனக்கு இன்னொரு அனுபவமும் ஏற்பட்டிருந்தது. 1980 களின் ஆரம்ப ஆண்டுகளில் ஒரு சமயம் சென்னைத் திருவான்மியூர் தலைமை மன்றத்திற்கு மகரிஷிகளைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கு நமது மனவளக்கலைப் பேராசிரியர் புலவர் கே. தியாகராஜன் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க அவரறைக்குச் சென்றேன். அவருடன் ஒரு பெரிய தமிழ் பண்டிதரும் தங்கியிருந்தார். இருவரும் தமிழ் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர்.
நான் புலவரைப் பார்த்து வாழ்க வளமுடன் என்று சொன்னேன். தமி பண்டிதருக்கு எரிச்சல் வந்து விட்டது. ‘வாழ்க வளமுடன்என்பது வியங்கோள். அது முன்னிலையில் தான் வரும். அதாவது, அவன் வாழ்க வளமுடன், இவன் வாழ்க வளமுடன் என்று தான் வரும். தன்மையில் நான் வாழ்க வளமுடன் என்று வராது. முன்னிலையிலும் நீ வாழ்க வளமுடன் என்று வராது. முன்னால் இருப்பவரைப் பார்த்து வாழ்க வளமுடன் என்று வியங்கோளில் வாழ்த்துவது மடத்தனம். என்னே தமிழர்களின் அறியாமை’ என்று என்னிடம் கடுமையாகப் பேசினார். நமது புலவர்க்கு அவர் குரு. எனவே புலவர் சொல்வதறியாது திகைத்தார்.
எனக்கும் துல்லியமான இலக்கண அறிவு இல்லாததனால், ‘பெரியவர்கள் விரும்பினால் இலக் கணத்தை மாற்றி, புது இலக்கியம் படைக்கலாம். எங்கள் மகரிஷிகள் போன்ற மகான்களை இலக்கண வரம்பிற்குள் அடக்க முடியாது’ என்றேன். அதற்குத் தமிழ் பண்டிதர், ‘மகான்களே ஆனாலும் இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும்’ என்று கூறினார்.
எனது வழக்கப்படி, மேற்கோள் தேடுவதற்காக வள்ளலாரை எடுத்துப் படித்தேன். ஒரு பாடல் என் கவனத்திற்கு வந்தது. அது குணரத்தினம் என்னும் தனது நண்பருக்கு வள்ளலார் எழுதி அனுப்பிய வாழ்த்து மடல்.
அதில் ’வாழ்க! வளமுடன்!’ என தனது நண்பரைப் முன்னிலையில் வைத்து வள்ளலார் வாழ்த்தியிருந்தார். இது பற்றி மேற்சொன்ன நம் ஊர் தமிழாசிரியரிடம் நான் குறிப்பிட்ட போது அவர் நகைத்தார்.
‘கயவொடு ரவ்வொற்று ஈற்ற வியங்கோள்
இயலும் இடம், பால், எங்கும் என்ப’
- நன்னூல்.
என்னும் நன்னூல் சூத்திரத்தை குறிப்பிட்டு, ‘க’ விலும், ‘ய’ விலும், ‘ர்’ இலும் முடிகின்ற வியங்கோள்கள் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய எல்லா இடங்களிலும், எல்லா பால்களிலும் பயன்படுத்தப்படும். அதாவது மூன்று இடங்களிலும் வியங்கோள்களை வித்தியாசமின்றிப் பயன்படுத்தலாம் என்பது தான் நன்னூலார் விதித்த இலக்கணம். அதன்படி ‘வாழ்க வளமுடன்!’ என்று முன்னிலையில் இருப்பவரைப் பார்த்து வாழ்த்துவது தவறில்லை என்று தமிழாசிரியர் விளக்கினார். அவருக்கு நன்றி. சரி. நான் கண்டெடுத்த வள்ளலாரின் வாழ்த்துப் பாடலின் ஒரு பெரிய புதையல் இருக்கிறது. அதைப் பிறகு பார்க்கலாம்.
(சென்ற இதழில் இதே தலைப்பில் வெளி வந்த கட்டுரையில் 12 ஆம் பக்கத்தில் 4 ஆவது பாராவில் ‘படர்க்கையில்’ என்றிருப்பது தவறு. ‘முன்னிலையில்’ எனத் திருத்திப் படித்துக் கொள்ள வேண்டுகிறோம்).
வாழ்க வளமுடன் என வாழ்த்துவதில் இரண்டு விதமான இலக்கணப் பிழைகள் உள்ளன என்ற வாதத்திற்கு உரிய பதிலை 2002 ஜனவரி, மார்ச் இதழ்களிலும் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் படித்திருப்பீர்கள்.
வளத்துடன் வாழ்க என்று சொல்ல வேண்டியதில்லை என்பதற்கு மேற்கோள் தேடிய போது திருக்குறளிலேயே மேற்கோள்கள் கிடைத்த விவரம் அக்கட்டுரைகளில் உள்ளன. வியங்கோளை முன்னிலையிலும் ஒரு பாடலைக் கண்டெடுத்தாகச் சென்ற இதழில் குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டிருந்ததல்லவா? அந்தப் பாடல் வருமாறு:-
கல்வியிற் கேள்வியிற் கடலினுங் கடந்து, அன்பறி வொழுக்கம் அமைந்ததென்னிரண்டு
காண்போன் றென்பாற் கனிவுகொண்டமர்ந்த, குணரத் தினநீ குடும்பத் துடனே
தீர்க்க ஆயுளும் செல்வப் பெருக்கும், நோயற்ற வாழ்வும் நுவலரும் கீர்த்தியும்
சிவந்திகழ் ஞானமும் சித்தியும் பெற்று, வழ்க! வாழ்க! மகிழ்ந்தருட் டுணையால்
வாழ்க! வாழ்க! வளம் பெற வாழ்க!
இறுக்கம் இரத்தின முதலியார்க்கு எழுதிய 20ஆவது திருமேகத்தின் (கடிதத்தின்) தலைப்பில் காணப்படுவது என்ற அடிக் குறிப்போடு இராமலிங்க பணி மன்றம் 2 ஆம் பதிப்பாக வெளியிட்டுள்ள திருவருட்பா ஆறாம் திருமுறை பக்கம் 1122 இல் மேற்படிப் பாடல் காணப்படுகிறது.
நமது அருள் தந்தையின் முன்னர் உருவெளித்தோற்றமாகத் தோன்றி நான் உன்னுடன் ஒரு 10 வருடம் இருக்கிறேன்’ என்று வள்ளலார் கூறி மறைந்த விவர வாசகர்கள் அறிந்ததே. பல சொற்பொழிவுகளில் அச்செய்தியை மகரிஷிகள் குறிப்பிடுவார்கள். ‘எனது வாழ்க்கை விளக்கம்’ என்னும் மகரிஷிகளின் நூலிலும் அது உள்ளது.
நமக்காக நமது அருள் தந்தையவர்கள் உருவாக்கித் தருக்கின்ற ‘அருட்பேறாற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வேன்’ என்ற சங்கற்பத்தை மேற்கண்ட வள்ளலார் பாடலோடு ஒப்பு நோக்கிப் பாருங்கள்.
உடல் நலம் என்பது நோயற்ற வாழ்வு என்று வந்திருக்கிறது. நீளாயுள் என்பது தீர்க்க ஆயுளும் என்று வந்திருக்கிறது. தீர்க்க என்றால் முழுமையான எனப் பொருள்). நிறை செல்வம் என்பது செல்வப் பெருக்கு என வந்துள்ளது. உயர்புகழ் என்பது கீர்த்தி என வந்துள்ளது. (நுவலரும் என்றால் எடுத்துச் சொல்வதற்கு இயலாத எனப் பொருள்). மெய்ஞ்ஞானம் என்பது சிவந்திகழ் ஞானம் என வந்துள்ளது (சிவம் என்றாலும், மெய் என்றாலும் தெய்வம் ஆகும்).
இன்னொரு விஷயம் கவனியுங்கள். வளம் பெற வாழ்க என வள்ளலார் வாழ்த்தியிருக்கிறார். வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தும் வள்ளலார் தந்ததே என விளங்கும்.
மேற்போக்காகப் பார்க்கக் கூடியவர்கள் தவத்தின் நிறைவில் நாம் கூறி கொள்கின்றவரிடம் சங்கற்பக் கருத்துக்களை நமது மகரிஷிகள் வள்ளலாரைப் பார்த்துப் பிரதி செய்து கொண்டதாக, (காப்பியடித்து விட்டதாக), கூறக் கூடும். உண்மையென்னவென்றால், நமது ஆசானிடம் வந்து வள்ளலார் வாழ்ந்து கொண்டிருந்தார் என்பதற்கு இதைவிட வேறு ருஜு தேவையில்லை என்பதுதான். ஏனெனில், வள்ளலார் நூல்களை நமது மகரிஷிகள் படித்துப் பார்த்ததில்லை.
உலக சமாதானம் என்னும் நூலிலும் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களிலும் வள்ளலார் சொன்ன பத்தாண்டு காலத்தில் தான் எழுதப்பட்டுள்ளன. அதற்குப் பிறகும் மகரிஷிகளால் எழுதப்பட்ட கவிகளில் மெத்தப் படித்த வள்ளலார் சாயையே மிகுந்திருப்பதைக் காணலாம். நமது மகரிஷிகளோ தமிழை முறையாக ஓதியதில்லை. செய்யுங்களைத் திறம்பட எழுதுவதற்குப் படித்திருக்க வேண்டிய யாப்பிலக்கணம் நமது அருள் தந்தைக்குத் தெரியவே தெரியாது.
இதனால் தெரிவது என்ன? தான் கூறியவாறு 10 ஆண்டுகள் மட்டும் வள்ளலார் மகரிஷிகளிடம் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை எனத் தெரிகிறது. வேதாத்திரியை மிகவும் தனக்குத் தொடர்ந்தும் பிடித்துப் போகவே, வள்ளலார் அவர்கள் தொடர்ந்தும் மகரிஷிகளுடனேயே வாழ்ந்து கொண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நன்றி - ஈரோடு மனவளக் கலைஞன் – பிப்ரவரி 2003
மிக நன்று.
ReplyDelete