Friday, 5 April 2013

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 5

விண் 

" விண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள கொஞ்சம் கெமிஸ்ட்ரி ஞாபகப் படுத்திக் கொள்வோமா?" என்று அம்மா கேட்க 
ஒரு மாணவி " எப்போது அம்மா கடவுளைப் பற்றி சொல்வீர்கள்?" என அலுத்துக் கொள்கிறாள்.

" விஞ்ஞானரீதியாக இறை உணரத்தான் நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதிலிருந்து கேட்கின்றேன்.  கெமிஸ்ட்ரிக்கு வேறு என்ன பெயர்?"

" வேதியியல் " என்கிறாள் ஒரு மாணவி.

"வேதம் என்றால் என்ன?" என அம்மா கேட்க 

" இந்து சமய நூல்கள் ", " நான்கு வேதங்கள் உள்ளன ", " நான்மறைகள்",                 " மந்திரங்கள்", " இந்த பெண்ணின் பெயர் " எனப் பல பதில்கள் வருகின்றன.

" மாறிக் கொண்டே இருத்தல் என்ற பொருளும் உண்டு. இந்த பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருப்பதால் இதை விளக்கும் நூல்களுக்கு வேதங்கள் என்றும்  ஓர்  அர்த்தம் உண்டு.  மாறிக் கொண்டே இருக்கும் தன்மைகளைப் பற்றி சொல்வதுதான் வேதியியல் பாடம். இப்போது சொல்லுங்கள் பார்க்கலாம் - பிரீயாடிக் அட்டவணையில் உள்ள தனிமங்கள் அல்லது மூலகங்கள் எத்தனை?"

" மொத்தம் 118 என்று சொல்கிறார்கள். ஆனால் 112 மூலகங்கள்தான் இதுவரை ஒத்துக்கொள்ளப் பட்டுள்ளன" என்கிறாள் ஒரு மாணவி.

" சரியாகச் சொன்னாய். முதல் மூலகம் எது? அதைப் பற்றிச் சொல்?"
ஹைட்ரஜன் அணு 

"ஹைட்ரஜன் வாயுதான் முதல் மூலகம். இதில் ஒரு புரோட்டான், ஒரு எலக்ட்ரான் உள்ளது."

" எல்லாமே நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஒரு காலகட்டத்தில் 
மூலகங்களின் அடிப்படை துகளை அணு எனப் பெயரிட்டார்கள்.
அணுவை விட மிக சிறிய பொருள் இல்லை என்றார்கள். பிறகு வந்த விஞ்ஞானிகள் அணுவில் எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான் 
துகள்கள் உள்ளன என்றும் அவைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மூலகங்கள் மாறுபடுகின்றன என்றார்கள். தற்போது இந்த மூன்றும் ஒரேவித அடிப்படைத் துகளால்தான் ஆக்கப் பட்டிருக்கவேண்டும் என்று அந்த துகளை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கின்றார்கள். சென்ற ஆண்டு இதில் கிடைத்த வெற்றிதான் ஹிக்ஸ்போஸான்  துகள். இதில் இன்னும் நிறைய கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அடிப்படைத் துகளுக்கு நம் முன்னோர்கள் 
'பரம அணு' அல்லது 'பரமாணு' எனப் பெயரிட்டு பல விஷயங்களைச் சொல்லியுள்ளார்கள்."


ஹிக்ஸ்போஸான்  துகள்

"பரம என்றால் என்ன அர்த்தம்?" என ஒரு மாணவி கேட்க 

" பரம பிதா, பரமஏழை  என்றெல்லாம் நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளில் இதைவிட உயர்ந்த அல்லது இதற்கு கீழே இல்லை என்ற அர்த்தம் புரிகின்றது அல்லவா. ஒரு அணுவை சிதைத்துக்கொண்டே போனால் கடைசியில் மிக,மிக,மிக சிறிய துகள் - அதை சிதைத்தால் ஒன்றுமில்லாமல் போகும். கற்பனையில்தான் இதை செய்யலாம். இந்த கடைசி துகளுக்குத்தான் பரமாணு என்று பெயர்." 


மாணவிகள் புரிந்ததாக தலையாட்டுகின்றனர்.

" இப்போது நான் சொல்கிறேன் - எலக்ட்ரான், புரோட்டான், நியுட்ரான் எல்லாமே பரமாணுக்களால் ஆக்கப் பட்டுள்ளன. எல்லா மூலகங்களும் பரமாணுக்களால் ஆக்கப் பட்டுள்ளன. நீங்கள், நான், இந்த பிரபஞ்சம் எல்லாமே பரமாணுக்களால் ஆக்கப் பட்டுள்ளன. சரிதானே!" என அம்மா கேட்க மாணவிகள் ஒத்துக் கொள்கின்றனர்.

ஒரு மாணவி கேட்கிறாள் - " விஞ்ஞானிகள் இந்த பரமாணுவைத்தான் 
கண்டுபிடிக்க முயலுகிறார்களா?"

" ஆம். இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ஹிக்ஸ்போஸான் துகள். இதற்கே சில பேர் கடவுள் துகள் எனப் பெயரிட்டு குழப்பி விட்டனர். பரமாணுவை இறைத்துகள், நுண்ணணு, ஈதர், நுண்விண், தூசு( formative dust ), energy particle எனப் பலப் பெயர்களில் சொல்கின்றார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன் ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில்  இதை விளக்கியபோது பிரமிப்படைந்த விஞ்ஞானிகள் பரமாணுவிற்கு 'வேதான் ' என பெயரிட்டு அவரை  கௌரவித்தனர். 

பரமாணு,விண் & வெளி ( Space )

பல ஆயிரக்கணக்கான பரமாணுக்கள் சேர்ந்து ஒரு கொத்து இயக்கமாக உருவாகும்போது அதை நாம் விண் என அழைக்கின்றோம். இப்போது சொல்லுங்கள் - விண் எங்குள்ளது? ஆகாயத்திலா?" என அம்மா கேட்க 

" பிரபஞ்சம் முழுக்க எல்லா இடங்களிலும் விண் இருக்கின்றது " என மாணவிகள் சொல்கின்றனர்.

" இனி நாம் கடவுளைப் பற்றிப் பேசலாம் " என அம்மா ஆரம்பிக்கின்றார்கள். 

- தொடரும் 

"விஞ்ஞானம் சிறப்புற்று விண் வெளியுணரப் பெற்றால் 
அஞ்ஞானம் மறைந்து விடும், அன்பும் அருளும் பொங்கி 
மெய்ஞ்ஞானம் ஒளி வீசும்; மெய் உயிர் அறிவறிவு 
இஞ்ஞால முழுமைக்கும் ஏற்றமுறும் இன்பமே!"

                                                         - அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் 

No comments:

Post a Comment