Friday, 14 March 2014

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 15


ஆன்மீகத் தேடல்

 வேறு என்னென்ன வழிகளில் கருமையத்தைத் தூய்மை செய்யலாம் என மாணவிகள் கேட்டதற்கு அம்மா சொல்கிறார்கள் -

" இரண்டொழுக்கப் பண்பாட்டிலேயே எல்லாம் அடங்கி உள்ளன. இதை எப்படி எல்லாம் கடைபிடிக்கலாம் என்பதை பார்க்கலாம். ' யாருடைய உடலுக்கும், மனதிற்கும் துன்பம் தரமாட்டேன்' என்ற முதல் ஒழுக்கத்தை எடுத்துக் கொண்டு முதலில் உங்களை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் உடலுக்கு, மனதிற்கு  நீங்கள் துன்பம் தராமலிருக்க என்னென்ன பண்ணவேண்டும்?"

" தினமும் உடற்பயிற்சிகள், காயகல்ப பயிற்சிகள் மற்றும் தவம் செய்ய வேண்டும்" என்கிறார்கள் மாணவிகள்.

" சரியாகச் சொன்னீர்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில்  உள்ள வெப்பம், ரத்தம், காற்று, ஜீவகாந்தம் மற்றும் உயிர் ஓட்டங்கள் சீரமைக்கப்பட்டு உடல் துன்பங்கள் நீங்குகின்றன. நோய் வராமலும் தடுக்கின்றோம். தவப் பயிற்சிகள் அடிக்கடி செய்வதால் மனஒர்மை ஏற்படுகின்றது. இன்னும் நீங்கள் இறைநிலை தவம் அடிக்கடி செய்து   இறைநிலையோடு ஒன்றி நிற்க பழக வேண்டும். மேலே என்ன செய்ய வேண்டும்?" எனக் கேட்கிறார்கள் அம்மா.

" யாரிடமும் சண்டை போடாமல், மனதில் பகை, வஞ்சம் வைத்துக் கொள்ளாமல் மன்னித்து கருணை உள்ளத்தோடும் இன்முகத்தோடும் இருக்கவேண்டும்" என்கிறார்கள் மாணவிகள்.

" சபாஷ்! இப்போது மற்றவர்களுக்கு எப்படி துன்பம் தராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ".

" சாதி, மத, நாடு, இன, மொழி வேறுபாடின்றி எல்லோருமே நம் சகோதர, சகோதரிகள் - இறைநிலையின் வடிவங்கள், அவர்களுக்குள்ளும் அறிவே தெய்வமாக விளங்குகின்றது என்ற உணர்வில் எல்லோரையுமே தெய்வங்களாகப் பார்க்கவேண்டும், மதிக்க வேண்டும்" என்கிறார்கள் மாணவிகள்.

" மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மகரிஷி அவர்களின் கனவுகளை நனவாக்கும் அருட்தொண்டில் ஈடுபடப்போகும் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது. நீங்கள் எப்போதும் ஒழுக்கம், கடமை, ஈகை இவை மூன்றுமினைந்த அறநெறிப் படிகளை பின்பற்றி வாழ வேண்டும். நம்மை சார்ந்த பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர் மற்றும் நம் குழந்தைகளுக்கு நம் பொறுப்புணர்ந்து அக்கறையோடு காத்து உதவ வேண்டும். தாய் , தந்தை, குரு, ஆட்சி தலைவர் மற்றும் தெய்வம் (இறைநிலை) இவர்களை   மதித்து  வணகி வாழ வேண்டும்." என்கிறார்கள் அம்மா.

" இயற்கை வளத்தை காக்க வேண்டும் " என்கிறாள் ஒரு மாணவி.

" ஆம். இயற்கையை அழிக்காமல் அதனோடு இயைந்த வாழ்க்கை வாழவேண்டும். அது மட்டுமல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட பொருட்களை வீணாக்காமலும், செதப்படுத்தாமலும் காத்து வாழவேண்டும்".

" இரண்டோழுக்கப் பண்பாட்டில் இவ்வளவு இருக்கின்றதா!" என வியக்கிறார்கள் மாணவிகள்.

" இப்படி நீங்கள் வாழ பழகிக்கொண்டால் நீங்கள் ஆன்மீக வாழ்க்கை வாழ்கின்றீர்கள் என அர்த்தம்" என்கிறார்கள் அம்மா.

" அப்பாடா! அம்மா ஆன்மீக ஆனா, ஆவன்னாவிற்கு இப்போதுதான் வந்துள்ளார்கள்!" 

" ஆன்மீகத்தைப் பற்றி நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான் இதுவரை பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினோம்.
இனி ஆன்மீகம் பற்றி பேசுவோம்" என்கிறார்கள் அம்மா.

- தொடரும்


No comments:

Post a Comment