ஆன்மீகம் அறிவோம்
" இனிய மாணவச் செல்வங்களே! நமது ஆன்மீக ஆனா, ஆவன்னா பாடத்தில்ஆன்மீகம் பற்றி இப்போது பேசப்போகின்றோம். ஆன்மீகத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளத்தான் நாம் பலபல விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். இன்றைக்கு மக்கள் ஆன்மீகம் என்ற சொல்லை மட்டும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், ஆன்மீகத்தைப் பற்றி புரிந்து கொண்டிருக்கின்றார்களா என்பது சந்தேகமே! பொதுவாக ஆன்மீகம் என்றால் வழிபாட்டு தலங்களுக்குச் செல்வது, புனித பயணங்கள் மேற்கொள்வது, புனித நூல்களைப் படிப்பது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆன்மீகம் என்றால் என்ன என்பதை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.." என மாணவிகளிடம் கேட்கின்றார்கள் அம்மா.
"நீங்கள்தான் எங்களுக்குத் தெளிவாக விளக்கிவிட்டீர்களே அம்மா! ஆன்மாவைப் பற்றி, அதாவது கருமையத்தைப் பற்றியும் அதனை தூய்மை செய்யும் வழிமுறைகள் பற்றியும் தெரிந்து அதன்படி நடப்பதுதான் ஆன்மீக வாழ்வு என்று சொன்னீர்களே அம்மா!" என்கிறார்கள் மாணவிகள்.
" சபாஷ்! சரியாகச் சொன்னீர்கள். தவம் மாத்திரம் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் ஆகிவிட மாட்டார்கள். நம் புராணங்களில் வரும் இராவணன், சூரபத்மன் மற்றும் ஹிரண்யன் போன்றவர்கள் கடும் தவம் செய்தார்கள், இறைவனிடம் வரங்கள் வாங்கினார்கள். ஆனால் அவர்களை ஆன்மீகவாதிகள் என்று சொல்லமுடியுமா? உண்மையான ஆன்மீகவாதிகள் ஆன்மாவைப் பற்றி தெளிவாக அறிந்து கருமையத்தூய்மைக்கான நெறிமுறைகளுடன் வாழ்வதாகும். ஆன்மீகத்தின் அடிப்படை எப்போதும் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருப்பதுதான், ஆன்மீகவாதிகள் அன்புமயமானவர்கள். நமது மகரிஷி அவர்கள்
அனைத்துயிரும் ஒன்றென்று
அறிந்த அடிப்படையில்
ஆற்றும் கடமைகளெல்லாம்
அன்பின் செயலாகும்
என்று நமக்கு பிரம்மஞானம் தந்து இறையுணர்வையூட்டி 'அன்பே இறைவன்' என்ற உயர்நிலைக்கு நம்மை அழைத்து செல்கிறார்கள். நம் மனவளக்கலைப் பயிற்சிகள் அனைத்தும் ஆன்மீகப் பயிற்சிகளாகும்.," என்கிறார்கள் அம்மா.
"ஆன்மீகம் என்ற சொல்லுக்கு சரியான பொருள் என்ன?" எனக் கேட்கிறாள் ஒரு மாணவி.
" ஆன்மாவைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்வோம் - . ஏற்கனவே நாம் இறைவனை வழிபடும்போது உண்மையில் அவரவர் எண்ணங்களைத்தான் வணங்குகின்றோம் என்றும் எண்ணங்கள் மனதிலிருந்து எழுகின்றன. மனமோ உயிரின் படர்கை நிலை. உயிரின் மூலமோ கருமையம். இந்த கருமையத்தூய்மைக்குத்தான் இரண்டொழுக்கப் பண்பாடு கடைபிடிக்கின்றோம். ஆன்மாவை உணர்வது என்றால் ' தன்னை உணர்வது' என கொள்ளலாம்.
" நான் உண்மையிலேயே ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேனா என்பதை எப்படி அறிவது" என்கிறாள் ஒரு மாணவி.
" மிகவும் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். யாரெல்லாம் தங்கள் துன்பங்கள், பிரச்சனைகள், கஷ்டங்கள் இவற்றிற்கு மற்றவர்களையும், சூழ்நிலைகளையும் காரணமாகச் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் இன்னும் ஆன்மிகம் பக்கம் அடியெடுத்து வைக்கவில்லை என்று அர்த்தம் " என அம்மா சொன்னதும் மாணவிகள் சிரிக்கின்றனர்.
" ஆன்மீகப் பாதையில் எடுத்துவைக்கும் முதல் அடி எது தெரியுமா?" என அம்மா கேட்கின்றார்கள்.
- தொடரும்
No comments:
Post a Comment