Sunday 27 September 2015

குரு - சீடன்....22


 உண்மைக்குப் பல முகங்கள்

இரண்டு பேர் கரிய புகைக் கூண்டு வழியாக வேலையை முடித்துவிட்டு இறங்கி வருகிறார்கள்.. இறங்கி வந்தவர்களில் ஒருவன் முகம் மட்டும் கரிபடிந்து அழுக்காக இருக்கிறது. இன்னொருவன் முகம் சுத்தமாக இருக்கிறது. 

குரு கேட்டார்: சிஷ்யா.... இரண்டு பேர்களில் யார் முகத்தைக் கழுவிக்கொள்வார்கள்? 

சிஷ்யன் சொன்னான்: சந்தேகமென்ன? அழுக்கு முகக்காரன்தான் முகங் கழுவிக்கொள்வான். 

குரு: இல்லை… யோசித்துப் பார்த்தாயா? அழுக்கு முகக்காரன் சுத்தமான முகக்காரனைப் பார்ப்பான். ஓ! தன்னுடைய முகமும் அப்படித்தான் சுத்தமாக இருக்கிறது என்று நினைத்துக்கொள்வான். முகம் கழுவிக்கொள்ள மாட்டான். 

சிஷ்யன்: ஆமாம் அதுதான் சரி. 

குரு: ஆனால்... சிஷ்யா, அது எப்படிச் சரியாகும்? தவறு. இப்படி யோசித்துப் பாரேன்... சுத்தமான முகமுடையவன் அழுக்கு முகக்காரனைப் பார்த்துத் தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக்கொள்வான். அதனால் தன் முகத்தைக் கழுவிக்கொள்வான் சுத்தமான முகமுடையவன் தன் முகத்தைக் கழுவிக்கொள்வதால் அழுக்கு முகக்காரனும் தன் முகத்தைக் கழுவிக்கொள்வான். ஆக இரண்டு பேரும் முகம் கழுவிக்கொள்வார்கள் அல்லவா? 

சிஷ்யன்: ஆமாம் குருவே! நான் இப்படி சிந்திக்கத் தவறிவிட்டேன் அதுதான் சரியான விடை. 

குரு: இல்லை சிஷ்யா! அதுவும் ஏன் தவறாக இருக்கக் கூடாது? இப்படி வேறு விதமாக யோசித்துப் பார். இரண்டு பேருமே முகம் கழுவிக்கொள்ள மாட்டார்கள்! 

சிஷ்யன்: குருவே என்ன சொல்லுகிறீர்கள்? 

குரு: ஆமாம். அழுக்கான முகக்காரன் சுத்தமான முகத்தைப் பார்த்துத் தன் முகமும் சுத்தமாக இருப்பதாக எண்ணிக்கொள்வான். அதனால் கழுவிக்கொள்ள மாட்டான். இதைப் பார்த்த சுத்தமான முகம் உடையவன் அழுக்கு முகம் கொண்டவனே கழுவிக்கொள்ளாததால் தானும் ஏன் கழுவிக்கொள்ள வேண்டும் என்று சும்மா இருந்து விடலாம் இல்லையா? 

சிஷ்யன்: அதுதான் மனித சுபாவம்! குருவே இது தான் மிகச் சரியான விடை. நான் இப்போது அறிந்துகொண்டுவிட்டேன். 

குரு: சிஷ்யனே! எதையுமே நீயாக யோசிக்க மாட்டாயா?
 எத்தனை நாள் நான் உனக்காக யோசிக்க வேண்டும்? 

சிஷ்யன்: மன்னிக்க வேண்டும் குருவே யோசித்துப் பார்த்தபோது நீங்கள் கடைசியாக சொன்ன பதில் மிகச் சரியானதாக நினைக்கிறேன். 

குரு: அட மடையனே! அதுவும் சரியான விடை அல்ல. இரண்டு பேர் கரிய புகைக் கூண்டிலிருந்து பணியை முடித்துவிட்டுக் கீழே இறங்குகிறார்கள். அதெப்படி ஒருவன் முகம் மட்டும் கரி படாமல் சுத்தமாக இருக்க முடியும்? 

சிஷ்யன்: ???? 

நன்றி - தி ஹிந்து - தமிழ்

No comments:

Post a Comment