Sunday, 21 January 2024

பாலகுமாரன்

படித்துக்கொண்டு இருந்த அந்தக் காலகட்டத்தில் சரியான பயந்தாங்கொள்ளி நான். அதனாலேயே சிகரெட் பிடித்தால், 'நான் பெரியவன்; என்னை யாரும் அசைக்க முடியாது’ என்கிற தப்பான மனோபாவம் என்னுள் வளர்ந்தது.

ஒரு நாளில், மூன்று நான்கு சிகரெட்களில் ஆரம்பித்த பழக்கம் பாக்கெட், இரண்டு பாக்கெட்... என்று அதிகரித்து ஒரு நாளில் 120 சிகரெட்களை ஊதித் தள்ளும் நிலைக்கு ஆளானேன். இதற்காகவே கடைகளில், மொத்தமாக சிகரெட்களை வாங்கிவந்து வீட்டில் ஸ்டாக் வைத்துக்கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டேன்.

"எழுத்தாளர்களுக்கு ஆறாவது விரல் பேனா என்பார்கள். எனக்கு வலது கையில் ஆறாவது விரல் பேனா என்றால், இடது கையில் சிகரெட்! வீட்டில் என்னைக் கண்டித்துப் பார்த்து ஓய்ந்துவிட்டார்கள். எழுத உட்கார்ந்து தொடர்ச்சியாக நான் பிடிக்கும் சிகரெட் புகை வீடு முழுவதும் வியாபித்திருக்கும். "

ஆனாலும், செய்த பாவத்துக்கு தண்டனை பெறத்தானே வேண்டும்? செயின் ஸ்மோக்கராக நான் சிகரெட் பிடித்திருந்ததில், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதய ரத்த ஓட்டம் தடைபட்டது. பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு சீரானேன். மறுபடியும் ரத்தக் குழாயினுள் அடைப்பு... இரண்டாவது பை-பாஸ் சிகிச்சை. உடம்பு முழுக்க ஊசிகள் தைத்துவைத்திருந்ததில், நரக வேதனை

ஆர்வமுள்ளவர்கள் முழு கட்டுரையும் படிக்க:

'சிகரெட் மறந்த கதை!'

  • நீங்க நல்லவரா? கெட்டவரா?
  • "நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி.."
  • "சத்ரியனா இருக்கறத விட சாணக்யனா இரு"

இதெல்லாம் எந்த படங்கள் என்று உங்களுக்கே தெரியும். வசனம் பாலா தான்.

இவருக்கு நல்ல சிந்திக்கும் ஆற்றல் இருந்தது, பக்க பலமாக குடும்பமும் இருந்தது. தம் எழுத்துத் திறமையால் பெரும் புகழும் உண்டு.

Harry Potter ஆங்கில நாவல் எழுதிய J.K.Rowling மாதிரி பெரும் பணம், ராயல்டி எல்லாம் தமிழ் எழுத்தாளர்கள் சம்பாதிப்பது இல்லை.

மூணு வேளை சாப்பாட்டுக்கு மெயின் வேலை ஒன்றை பார்த்துக் கொண்டு, ஹாபியாக எழுதினால் சாயந்திரம் டிபன் வாங்கி சாப்பிடும் அளவுக்கு ஏதாவது வரும். இவருக்கும் அப்படியே.

ஆனால் இவரது புகைப் பழக்கத்தால் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்பட்டு, 71 வயதில் மூச்சு திணறல் ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

நல்ல ஆரோக்கியம் இருந்தால், தெளிவாக சிந்திக்கலாம். ஓடியாடி சம்பாதிக்கலாம். பல நண்பர்களும் கிடைப்பார்கள்.

எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்கள் நம் கையில் இல்லை, ஆனால் தெரிந்தே செய்ய மறுக்கும் சில பழக்கங்கள், பின்னாடி வெச்சு செய்யும்.

  • அதிகாலையில் இன்னும் கொஞ்சம் நேரம், போர்வையை இழுத்துக் கொண்டு தூங்கினால் சுகமாக தான் இருக்கும்.
  • வாரத்துக்கு இரண்டு நாள் வாக்கிங்கோ, யோகாவோ செய்யலைன்னா யாரும் தலையை சீவி விட மாட்டார்கள்.

ஆனால் எதையுமே தொடர்ந்து செய்தால் தான் அது பழக்கம்.

"நானெல்லாம் ஒரு காலத்தில அவ்ளோ நேர்த்தியா யோகா செய்வேன் என்று என் யோகா ஆசிரியரே வியந்திருக்கிறார்!" என்று பழம் பெருமை பேசி ஒரு பயனும் இல்லை.

எப்பொழுதும் சிரமமில்லாமல் ஒரு தனுராசனமோ, ஸ்கந்தாசனமோ, வீரபத்ராசனமோ செய்ய முடியனும்.

குறைந்த பட்சம் கையை தரையில் ஊன்றாமல் எழுந்திருக்க முடியனும்.

இதில் நாம் தெரிவு செய்வதற்கு ஒன்றுமில்லை. செய்ய வேண்டிய எளிய பயிற்சிகளை தொடர்ந்து செய்தால், நம் ஆரோக்கியம் நம்மிடமே இருக்கும்.

அம்பானி மகனாக இருந்தாலும், உடல் எடையை குறைக்க பெர்சனல் டயட்டிஷியன் வைத்துக் கொண்டாலும், கொழுப்பை குறைக்க ஆப்ரேஷன் செய்து கொண்டாலும், தக்க வைத்துக் கொள்ள டிரெட் மில்லில் அவரவர் தான் ஓடியாகணும்.

பினாமி எல்லாம் வைத்து ஆரோக்கியத்தை வாங்க முடியாது.

ஆரோக்கியம் தான் என்று ஒரு வரியில் இந்த பதிலை முடித்து விடலாம். ஆனால் சில விஷயங்களுக்கு டெமோ கொடுத்தால் தான் பலருக்கு மனதில் பதியும். சோம்பேறித்தனமும் போகும் என்பதால் இப்படி நீட்டி முழக்க வேண்டி உள்ளது.

No comments:

Post a Comment