Friday, 4 May 2018

ஏழாம் சுவை - நகைச்சுவை - 7

-   அறு(சு)வையா​னந்தா

    
ஜி யை சந்திக்கச் சென்றபோது அவர் தன் பக்தகோடிகளிடம் சிரிப்பவர்களின் வகைகள் பற்றி சொல்லிக்கொடிருந்தார்.

அவர் வகை படுத்தியதை சுருக்கமாகச் சொன்னால் -

தனக்குள் சிரிப்பவன் ஞானி 
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம் 
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன் 
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன் 
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி 
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன் 
பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன் 
பிறர் காணச் சிரிப்பவன் கோமாளி 
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி 
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்மயோகி 

பக்தகோடிகளை அனுப்பிவிட்டு எங்களிடம் வந்த ஜி, தெனாலிராமன், பீர்பால் மற்றும் முல்லா கதைகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் முல்லா பற்றி கேட்டதற்கு, ஜி கூறியதாவது -

முல்லா என்கிற  முல்லா நஸ்ருதீன்  சூஃபி ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம்.  உள்ளத்தை ஆராய்வது சூஃபித்துவத்தின் அடிப்படை.முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர்.முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை.வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள்.ஓஷோ, முல்லாவின் கதைகளை  நிறைய தன்  சொற்பொழிவுகளில் பயன்படுத்தியுள்ளார்.

ஜி சொன்ன முல்லா கதைகள் -.

ரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ''உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?'' என்று கேட்டார்.முல்லா, ''முடியாததற்கு வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்'' என்றார்.முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ''கழுதை அங்கிருந்து சத்தமிடுகிறதே முல்லா'' என்றார். உடனே கோபத்துடன், ''என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை'' என்றார் முல்லா.

*********************************************************************

முல்லாவின்கழுதை ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ''அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது'' என்றார். ''உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?'' என்று கேட்டனர். முல்லா, ''நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்... நல்லவேளை'' என்றாராம்.

*******************************************************************

முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும்  மது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர்

ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா வந்து வணங்கி நின்றார். முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும்,

நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும்
நீர் சொல்வது பொய்யாக இருந்தால் நீர் தூக்கில் ஏற்றப்படுவீர் என்றார் மன்னன். 

முல்லா உண்மை சொன்னாலும் பொய்யை சொன்னாலும் அவர் உயிருக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. 

முல்லா நிலமையை எவ்வாறு சமளிக்கபோகிறர் என்று சபையோர் அவரையே கவனித்தனர். முல்லா எதைக் கூறி தப்பியிருப்பார்?

முல்லா மன்னனை நோக்கி மன்னர் அவர்களே...தாங்கள் என்னை தூக்கில் போடபோகிறீர்கள்   என்று பதற்றம் ஏதுமின்றிக் கூறினார். 

அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார். முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும் அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும். முல்லா கூறியது பொய் என்று வைத்துக்கொண்டால் முல்லாவைத் தூக்கில் போடவேண்டும். தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை எனக் கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும். இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து முல்லா மன்னனைத் திக்குமுக்காடச் செய்து விட்டார். அவரது அறிவாற்றலைக் கண்ட மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்து
அனுப்பினான்.

*******************************************
ஓஷோ சொன்ன முல்லா ஜோக்  -

முல்லா நசுருதீன் ஒரு வேளையில் சேர்ந்தார்....
சில நாட்கள் கழித்து அவர் முதலாளி அவரை கூப்பிட்டார்....
" முல்லா.. நீங்கள் இந்தத் துறையில் ஐந்து வருடம் அனுபவம் இருப்பதாகச் சொல்லி வேலையில் சேர்ந்தீர்கள்...ஆனால் நீங்கள் இதற்கு முன் எந்த வேலையும் செய்யவில்லை என்று நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்....ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள் ?"

முல்லா: சார், நீங்க தானே பேப்பர்ல "கற்பனைத் திறம்" மிக்க ஆட்கள் தேவைன்னு விளம்பரம் கொடுத்தீங்க?"

HAPPY BIRTHDAY MALA.....



pl.click the link below
CLICK       REVOLVES AROUND YOU

to see/hear  " I amma Barbie girl song with Mala & JP " posted last birthday click        here

Thursday, 3 May 2018

ஏழாம் சுவை - நகைச்சுவை - 6

- அறு(சு)வையா​னந்தா





ஜி யைச் சந்திக்கச் சென்றபோது அவரே ஆரம்பித்தார் -

" நமது சங்கத்தில் நடைபெற்ற மனைவி நல வேட்பு நாள் விழாக்களில் கலந்துகொண்டேன். மிகவும் மகிழ்ச்சியும், நிறைவும் சிலருக்கு நெகிழ்வும் தந்ததாக அமைந்திருந்தது. நிறைய குடும்பங்களில் அமைதியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த இந்த விழா எல்லா இடங்களிலும் நடைபெற வேண்டும் " என்றார்.

" இந்த மாதமும் பல இடங்களில் நடக்க இருக்கின்றது ஜி " என்றோம்.

"  கணவன் மனைவிகளிடையே ஒருவர் மற்றவரிடம் காணும் குறைகளே பல பிரச்சனைகளை உருவாக்கிவிடுகின்றது.  இந்த குறைகள் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடிப்பது -

1. சுயநலம்
2. ஊதாரித்தனமான செலவு
3. வம்பு பேசுதல்
4. சீண்டிக்கொண்டே இருத்தல்
5. வீட்டில் கவனமின்மை
6. ஆதிக்க மனப்பான்மை
7. வெளிவிவகாரங்களில் அதிக அக்கறை
8. சுத்தமின்மை
9. இன்னொரு ஆணிடமோ, பெண்ணிடமோ ஈடுபாடு   &
10. அலட்சியப்படுத்தல்

இவ்வளவு குறைகளுக்கிடையே பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் தியாகம் இவற்றைக் கடைப்பிடித்து வாழ்வை சீர் செய்து வாழும் மனமொத்த தம்பதிகளை பார்க்கின்றோம் அல்லவா! இவர்களும்  அவ்வப்போது சண்டை  சமாதானமாகி வாழ்க்கைக்கு மேலும் சுவை  ஊட்டுவார்கள். இதை உணர்த்தத்தான் நமது முன்னோர்கள் புராணங்களிலே தெய்வீகத்  தம்பதியர்களான சிவன் - பார்வதி, விஷ்ணு - லட்சுமி, பிரம்ஹா - சரஸ்வதி
இவர்கள் சண்டை போட்டுக் கொண்டு பிறகு சமாதானம் அடைந்து உலகுக்கு சில நீதிகளைப் போதித்ததாக கதைகள் அமைத்தனர் " என்றார் ஜி.

" கணவன் - மனைவியருக்கு நீங்கள் தரும் அறிவுரை என்ன ஜி ?" எனக் கேட்டோம்.

" கணவன் மனைவி இருவருமே தங்களிடையே வரும் சண்டைகளை ஊடலாக நினைத்து உடனே சரி செய்ய வேண்டும். இம்மாதிரி சண்டைகளில் கோபத்தைத் தவிர்த்து மன்னிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவி தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கணவன் எதிர்பார்க்கக்கூடாது. சண்டையிலே மனைவியை வெல்ல அனுமதித்து கணவன் தோற்க வேண்டும். அப்படித் தோற்ற கணவர்கள்தான் வெற்றிகரமான குடும்பத் தலைவர்களாக திகழ்கின்றார்கள். ஏனெனில்

'வெற்றி'  பெற்ற மனைவி 
கணவனிடம் தன உள்ளத்தைப் பறிகொடுத்து 
அவன் சொல்கேட்கும் 
அன்பு அடிமையாக 
மாறிவிடுகின்றாள்!"
என்று முடித்தார் ஜி.

"நீங்கள் சொல்லும் ஜோக்குகளுக்கு சிரித்துவிட்டு செல்ல வந்த எங்களுக்கு, ஏன் எல்லோருக்குமே உபயோகமான அறிவுரை தந்தீர்கள் ஜி! மிக்க நன்றி. 
நிறைவாக ஒன்றிரண்டு ஜோக்ஸ் ப்ளீஸ்.." எனக் கேட்டோம்.

" ஓ..இந்தப் பகுதியே அதற்காகத்தானே...உங்களுக்காக கணவன்-மனைவி ஜோக்ஸ் -

  கணவன் குடும்பத்துக்கு தலை மாதிரிதான். ஆனால் மனைவி என்பவள் கழுத்து மாதிரி. கழுத்தின் அனுமதி இன்றி தலையை எந்த பக்கமும் திருப்ப முடியாது.

*************************************
டாக்டர்: "மேடம்... உங்க கணவருக்கு மனஅழுத்தம் அதிகமாயிடுச்சு. நல்லா சமைச்சு போடுங்க, சண்டை போடாதீங்க, உங்க பிரச்சனைகளை சொல்லாதீங்க. டிவி சீரியல் பத்தி பேசாதீங்க, எப்பவும் சந்தோஷமா பாத்துக்குங்க."
வெளியே வந்த மனைவியிடம்  கணவன்: "டாக்டர் உன்கிட்ட என்னம்மா சொன்னாரு?"



 மனைவி: "நீங்க பிழைக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டாரு...."

********************************************
  " வேலைக்காரனுக்கு உங்க சட்டையை குடுக்காதீங்கன்னு சொன்னாக் கேக்குறீங்களா? "

   "  என்ன ஆச்சு ?"


   "  இன்னைக்கு நீங்கதான்னு நினைச்சு..."


   "  அய்யய்யோ!  என்ன ஆச்சு ? "



   "  அவனை பூரிக்கட்டையால அடிச்சிட்டேன் ."
****************************************************

Wednesday, 2 May 2018

ஏழாம் சுவை - நகைச்சுவை - 5

 - அறு(சு)வையா​னந்தா


'ஜி'யை சந்திக்கச் சென்றிருந்தபோது அவரை காண வந்திருந்த இரு உயரதிகாரிகளை சந்தித்தோம். அவர்கள் 'ஜி'யின் கீழ் பணிபுரிந்தவர்களாம். அவர்களிடமிருந்து
 தெரிந்துகொண்ட  விஷயங்கள்  -


* எவ்வளவு டென்ஷனாக வேலை இருந்தாலும் தன்  நகைச்சுவை உணர்வால் அந்த வேலையை எளிதாக்கி, சீக்கிரமாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க ஜி உதவுவார்.

* ஜி யுடன்  வேலை செய்பவர்கள் குழு மனப்பான்மையுடன் உற்பத்தி திறனை அதிகப் படுத்துவார்கள்.

* இதனால் ஜி யுடன் ஏற்பட்ட அன்புபிணைப்பால்தான் அவரை அடிக்கடி காண வருகின்றோம்.

அந்த அதிகாரிகள் ஜி யுடன் பேசிவிட்டு சென்ற பிறகு நாங்கள் இன்றைய அலுவலகம் மற்றும் வேலை செய்யும் இடங்கள், வேலை பளு இவற்றைப் பற்றி பேசினோம்.

" இன்றைய அவசர யுகத்தில், போட்டிகளும், சவால்களும் நிறைந்த சூழ்நிலையில், 12 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் அனைவருக்குமே  எப்போதும் டென்ஷன்தான். கொஞ்சம் குரலை உயர்த்தி ஆணையிட்டால்கூட ஊழியர்கள் உணர்ச்சி வசப்பட்டு பிரச்சனைகளை உண்டாக்கிவிடுகின்றார்கள். இந்த மாதிரி நேரத்தில் சிரிக்கபேசி, அவர்களை புதிய கோணத்தில் சிந்திக்க உதவுவேன். வேலைகள் சிறப்பாக முடியும் " என்றார் ஜி.

" எங்களுக்கு சில சுவையான சம்பவங்கள் கூறமுடியுமா? " எனக் கேட்டோம்.

" நிறைய சொல்லலாம். முப்பது ஆண்டுகளுக்குமுன் நான் பணிபுரிந்த இடத்தில் ஆண்டு ஆய்வுக்காக உயரதிகாரி வருவதாக செய்தி வந்தது. அந்த அதிகாரி மிகவும் கண்டிப்பானவர், மிகவும் சிடுசிடு என இருப்பார் என்பதால் எல்லோருக்கும் பயம். அவர் வருவது பற்றி ஒரு தந்தி வந்தது. அதைப் படித்ததும் எல்லோருக்கும் ஒரே சிரிப்பு  - அதில் ' coming by morning 5 O ' clock train . send office keep ' என இருந்தது. தந்தியில் jeep என்பது keep என இருந்ததால் அர்த்தமே மாறிவிட்டது. அந்த அதிகாரி ஆய்வுக்கு வந்தபோது அந்த தந்தியைக் காட்டினோம். அதைப் பார்த்துவிட்டு அவர் சிரித்த சிரிப்பில் எங்களுக்கு எல்லா பயமும் போய்விட்டது.

" இப்போது வந்து சென்றார்களே, அவர்கள் என்ன புலம்பினார்கள் தெரியுமா..அவர்களுடைய boss விரட்டி, விரட்டி வேலை வாங்குகிறாராம்.கேட்டால் தனக்கு மேலே இருக்கும் மூன்று முட்டாள் அதிகாரிகள் உடனடியாக விவரங்கள் கேட்டு தன்னை விரட்டுகிறார்கள் என்கிறாராம். நான் சொன்னேன் - ' நீங்கள் உங்கள் bossஸிடம் என்ன சொல்லியிருக்கவேண்டும் - உங்களுக்குமேல் மூன்று முட்டாள்கள்தான். ஆனால் எங்களுக்கு மேல்   நான்கு முட்டாள்கள் இருக்கிறார்களே  என்று'.     இப்படி சொல்ல முடியாவிட்டாலும் கொஞ்சம் இப்படியெல்லாம் சிந்தித்து, சிரித்து அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளலாம்" என்றார் ஜி.

மேலும் சொல்லுங்கள் ஜி " என வேண்டினோம்.

" Humour at Workplace "  என பல பத்திரிகைகளில் உண்மை நகைச்சுவை நிகழ்சிகள் வெளிவருகின்றன.  இன்றைக்கு நகைச்சுவை உணர்வு உள்ள அதிகாரிகளையும், சக ஊழியர்களையும்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.  பேச்சாளர்களில்கூட  நம்மை அதிகம் சிரிக்க வைப்பவர்களைத்தான் நாம் விரும்புகிறோம் அல்லவா....எனவே முதலில் நம்மை வைத்தே நாம் காமெடி செய்துகொள்வது  நம்மை பாபுலராக்கிவிடும்" என்கிறார்  ஜி.

" என்னைவச்சு யாரும் காமெடி, கீமெடி பண்ணுலையே ... அப்படின்னு கேக்காம நம்மகிட்ட இல்லாத விஷயத்தை உணர்ந்து நம்மை நாமே கமெண்ட் அடித்துக் கொண்டு நாமே சிரிக்கணும் என்று சொல்கிறீர்கள் , இல்லையா ஜி " என நாம் கேட்க

" ஆமாம். ஈகோ இல்லாத ஆள் என்ற இமேஜ் நம் மீது விழுந்து நம் மேல் மரியாதை கூடும் " என்கிறார் ஜி.

  எங்கள் உரையாடலின்போது ஜி சொன்ன சில அலுவலக ஜோக்குகள் -

*******************************
 “இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்”


“அவ்வளவு பிசி ஒர்க்கா?”



“இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
எழுப்பிவிடலை”


********************************************

"உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?"

 "படுத்த   படுக்கையா!"  


**************************


இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு... நீங்க ஆபீஸ் போக வேண்டாங்க!"

"என்னை நம்பு செல்லம்... சத்தியமா எனக்கு வத்தல் போடத் தெரியாது!"



********************************

நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யுறோம்..."

அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க..