இந் நூலிலுள்ள பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்து, அதற்கு விளக்கம் கூறும் வகையில் ஆசிரியர் பாடியிருத்தலின், பழமொழி என்னும் சிறப்புப்பெயர் பெற்றது. மேலும் இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இதனால் பழமொழி நானூறு" என்றும் இது குறிக்கப் பெறும். இதன் ஆசிரியர் மூன்றுறை அரையனார்.
நூல்
தற்சிறப்புப் பாயிரம்
பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி, பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா, முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான், இன் துறை வெண்பா இவை. |
அசோக மரத்தின் நிழலில் எழுந்தருளியிருக்கும் அருகக்கடவுளின் திருவடிகளைத் தொழுது பழைய பழமொழிகள் நானூறைத் தழுவி மூன்றுரை அரசர் இனிய பொருட்முறைகள் அமைந்த வெண்பாக்களாக்கி இந்நூற்பாட்டுக்களின் நான்கடியும் சுவை தோன்ற பாட்டமைத்தார். இறைவனை வணங்கி இப்பழமொழி நானூறும் பாடப்பெற்றன.
கடவுள் வணக்கம்
அரிது அவித்து, ஆசு இன்று உணர்ந்தவன் பாதம், விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து, உரியதனில் கண்டு உணர்ந்தார் ஓக்கமே-போல, பெரியதன் ஆவி பெரிது. |
காமம்,வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களையும் அருமைகாக கெடுத்தலான்.குற்றமின்றி முற்றும் அறிந்த கடவுளின் திருவடிகளையே அகன்ற கடலால் சூழப்பெற்ற அகன்ற இடத்தினையுடைய பெரிய இவ்வுலகில் உரிமைப் பொருளைப் போலக் கருதி அறிந்தவர்களது உயர்வே பேருடம்பினையுடைய ஆவியைப் போன்று பெரிது
கருத்து: கடவுளின் திருவடிகளை உரிமையாக வணங்கியவர்களது உயர்வே மிகச்சிறந்தது.
1. கல்வி
ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண் போற்றும் எனவும் புணருமே?-ஆற்றச் சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே இல்லை, மரம் போக்கிக் கூலி கொண்டார். | 1 |
மிகவும் வழியைக் கடக்கவிட்டு தீர்வைப் பொருள் அடைபவர்கள் இல்லை ஓடத்தைச் செலுத்தி நிறுத்தியபின் கூலியைப் பெறுபவர்கள் இல்லை. (அவைபோல) கல்வியைக் கற்றற்குரிய இளமையில் கல்லாதவன் முதுமையின்கண் கற்று வல்லவனாவான் எனவும் புணருமோ என்று சொல்லுதலும் கூடுமோ?இல்லை.
கருத்து: கற்றற்குரிய இளமைப் பருவங் கழிவதற்கு முன்னேகல்வி கற்கவேண்டும்.
சொற்றொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக் கற்றொறும், "கல்லாதேன்" என்று, வழி இரங்கி, உற்று ஒன்று சிந்தித்து, உழந்து ஒன்று அறியுமேல், கற்றொறும் தான் கல்லாத வாறு. | 2 |
(கற்றார் முன்பு) ஒன்றைச் சொல்லுந்தோறும் குற்றம் உண்டாதலால் மனத்தளர்வின்றி கற்குந்தோறும் நான் கல்லாதவன் என்று கருதி கல்லா தொழிந்த நாட்களுக்கு வருந்தி மனம் பொருந்தி ஒருமைப்பட மீண்டும் மீண்டும் நினைத்து; உழன்று ஒன்று அறியுமேல் - வருந்தி அறிந்திராத ஒரு பொருளை அறிவானாயின் பின்னும் நூல்களைக் கற்குந்தோறும் தான்கல்லாதவனாகவே நினைத்துக் கற்கக் கடவன்.
கருத்து: படிக்குந்தோறும்அறியாதவனாக நினைத்து ஒவ்வொருவனும் படிக்கவேண்டும்.
விளக்கு விலை கொடுத்துக் கோடல், விளக்குத் துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி; விளக்கு மருள் படுவது ஆயின்,-மலை நாட!-என்னை பொருள் கொடுத்துக் கொள்ளார், இருள். | 3 |
மலைநாட்டையுடையவனே விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை விலைப்பணம் கொடுத்துக் கொள்வது விளக்கினால் பொருள் வேறுபாடு இல்லை என்று விளக்கின் தன்மை முழுமையும் ஆராய்ந்தேயாகும் விளக்கு தெளிவாகக் காட்டாது தானே மழுங்குதலைச் செய்யின் பொருள்கொடுத்துப் பெற்ற அதனால் அவர்க்கு வரும் பயன் யாது? (ஆதலால்) பொருளைக்கொடுத்து இருளைக் கொள்ளார்.
கருத்து: ஞானநூல்களைக் கற்றல் வேண்டும்.
ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃது உடையார் நால் திசையும் செல்லாத நாடு இல்லை; அந் நாடு வேற்று நாடு ஆகா; தமவே ஆம்; ஆயினால், ஆற்று உணா வேண்டுவது இல். | 4 |
மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார் அவ்வறிவு படைத்தவர்களது (புகழ்) நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுக ளில்லை அந்த நாடுகள் அயல் நாடுக ளாகா அவ்வறிவுடையோர் நாடுகளேயாம் அங்ஙனமானால் வழியில் உண்பதற்கு உணவு (கட்டமுது) கொண்டுசெல்ல வேண்டியதில்லை.
கருத்து: கற்றாருக்குச்சென்ற இடமெல்லாம் சிறப்பு.
"உணற்கு இனிய இந் நீர் பிறிதுஉழி இல்" என்னும் கிணற்று அகத்துத் தேரைபோல் ஆகார், கணக்கினை முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலின், கேட்டலே நன்று. | 5 |
குடித்தற்கு இனிய உவர்ப்பில்லாத நன்னீர் வேறு இடங்களில் இல்லையென்று நினைக்கும் கிணற்றினுள்ளே வாழும் தவளையைப்போல் தாமுங் கருதாமல் நூல்களை நாள் முழுமையும் வெறுப்பின்றி இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும் (அறிஞர்களிடம்) விரும்பிக் கேட்டலே நன்று. (கற்றலிற் கேட்டலே இனிது.)
கருத்து: தேரைபோ லாதலாவது தாம் விரும்பிச் செய்யும் கற்றதனாலன்றிக் கேட்டறிதலினாற் பயனில்லை என்று கருதுதல்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இல்லை, இலக்கியங்கள், நானூறு, பதினெண், பழமொழி, ஒன்று, கொடுத்துக், கேட்டலே, நாடு, இனிய, விளக்கு, பொருள், கீழ்க்கணக்கு, பழமொழி, ஆசிரியர், கல்வி, கொள்ளார், நினைத்து, மீண்டும், கற்குந்தோறும், வருந்தி, முழுமையும், அறிவுடையார், இன்று, நன்று, இனிது, நாடுக, சங்க, நூல்களை, கற்றார், அறியுமேல், நானூறும், எனவும், கொண்டார், உயர்வே, கருதி, கடவுளின், அகன்ற, வணங்கி, என்னும், ", நான்கு, கற்றொறும், சோர்வு, கற்றற்குரிய, கல்லாதவன், பெரிது