Saturday, 3 February 2024

மார்க்ஸிம் கார்க்கி

உலகப் புகழ்பெற்ற ‘தாய்’ நாவலை எழுதிய மார்க்ஸிம் கார்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது. செருப்பு தைப்பது, மூட்டைத்தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில்பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக்காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்தவர் மார்க்ஸிம் கார்க்கி. வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்ததால் தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்க முடிந்தது போலும்.


இவரது நிஜப்பெயர் அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கொவ். மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாத்தாவின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத் தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். தன்னுடைய பெயரை கார்கி என்று மாற்றினார். ரஷ்ய மொழியில் அதற்கு கசப்பு என்று அர்த்தம்.
அன்றைய செண்ட்பீட்டர்ஸ் பார்க் என்ற ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி இரண்டாயிரம் பேர் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கார்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.

தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அதை எதிர்த்து ‘சூரிய புத்திரர்கள்’ என்ற எழுச்சியான நாடகத்தை அரங்கேற்றினார். வெளியே வந்தும் பலமுறை இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். இதற்காக ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.
ரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சி நிதி வேண்டு கார்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்கியால் எழுதப்பட்டது தான் உலகப்புகழ்பெற்ற தாய் நாவல். கார்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த நாவல்தான்.

இன்று சோவியத் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை


No comments:

Post a Comment