Tuesday, 31 December 2024

2025ல் நான்..,,,

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என அனைவருமே ஏதாவது சபதம் எடுக்கிறோம். ஆனால் அந்த ஆண்டின் கடைசியில் எடுத்த சபதத்தை முடித்தோமா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஆனால் வரப்போகும் 2025-ஐ நான் சொல்வது போல ஒருமுறை தொடங்கிப் பாருங்கள். நிச்சயம் வாழ்க்கையில் சில மாற்றங்களை உணருவீர்கள். 

2024ல் நீங்கள் கற்ற 5 பாடங்களை குறித்துக் கொள்ளுங்கள்: 

நிறுத்தி நிதானமாக யோசித்து, இந்த ஆண்டு நீங்கள் புதிதாக பெற்ற அனுபவங்களையும், கற்ற பாடங்களையும் எழுதிக் கொள்ளுங்கள். இப்படி யோசிப்பது 2024ல் நீங்கள் எப்படி செயல்பட்டீர்கள் என்பதன் ஒரு ட்ரெய்லரை உங்களுக்குத் தெரியப்படுத்தும். இந்த விஷயம் 2025ல் நீங்கள் எப்படி செயல்படலாம் என்பதற்கான அடித்தளத்தைப் பற்றி சிந்திக்க உதவும்.

முக்கியமான 3 விஷயங்களை செயல்படுத்துங்கள்: 

உங்கள் வாழ்வில் தற்போதைய நிலைக்கு எது மிகவும் முக்கியம் என யோசித்துப் பார்த்து அதில் உங்களுக்கு முக்கியம் எனத் தோன்றும் முதல் 3 விஷயங்களை தேர்வு செய்து, அதில் கவனம் செலுத்தி செயலில் இறங்குங்கள். தேவையில்லாமல் எல்லா விஷயங்களையும் போட்டு மனதில் குழப்பிக் கொண்டிருந்தால் எதையுமே செயல்படுத்த முடியாது. மற்ற அனைத்தையும் ஒதுக்கி விட்டு முதல் மூன்று விஷயங்களில் உழு மூச்சுடன் இறங்குங்கள். இதிலேயே, உங்களுடைய திறமையை வளர்த்தல், பணம் ஈட்டுதல், உறவுகள் போன்ற அனைத்தும் வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

உடலுக்கு முக்கியத்துவம் தாருங்கள்:

 என்னை யாருக்காவது சில அறிவுரைகள் கொடுக்கும்படி கேட்டால் நான் முதலில் சொல்வது உடலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதுதான். ஏனெனில் நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா விஷங்களும் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும் எப்படியாவது உழைத்து ஒரு கட்டத்தில் அடைந்துவிட முடியும். ஆனால் உடல் நிலையை சரிவர கண்டுகொள்ளாமல் அசாதாரணமாக இருந்தால், அதில் ஏற்படும் பாதிப்புகளை அவ்வளவு எளிதில் நம்மால் மீட்டெடுக்க முடியாது. உடல்நிலை பாதிக்கப்பட்டால் சகலமும் முடிந்துபோகும் என்பார்கள். எனவே உடலை வலுவாக்கும் சரியான உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றை எந்த யோசனையும் இன்றி தொடங்குங்கள். 

2025 இல் இந்த மூன்றில் கவனம் செலுத்துங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் வளர்ச்சியை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். எதுவாக இருந்தாலும் நீங்கள் செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.


No comments:

Post a Comment