Tuesday, 11 December 2012

பாரதியார்





என்னை வழிநடத்தும் ஆன்மீக குருமார்களில் 

ஒருவரான மகாகவி பாரதியாரின் 

பிறந்ததினமான  இன்று 
கீழ்கண்ட அவரின் 
இரு பாடல்களையும் 
ஆழ்ந்து படிக்குமாறு 
கேட்டுக் கொள்கிறேன்.
ஜனவரி மாதம் தொடங்க இருக்கும் 
" ஆன்மீக ஆனா, ஆவன்னா "
தொடரின் 'மூலம்' 
இந்த பாடல்களில் 
                                               இருக்கின்றது.


பரசிவ வெள்ளம்


உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே.
1
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே.
2
எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர் என்றும்மய லெய்துவதாய்,
3
வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்,
4
தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி,
5
தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.
6
எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே.
7
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே.
8
காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.
9
எல்லாந் தானாகி யிரிந்திடினும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.
10
மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனைத்துங் கண்டாரே.
11
இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்;
எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே.
12
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.
13
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.
14
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா !
15
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா !
16
எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா !
17
எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா !
18
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா !
19
காவித் துணிவேண்டா, காற்றைச் சடைவேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே
20
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங்க ளில்லையுள ந்தொட்டுநின்றாற்போதுமடா !
21
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா !
சிவமொன்றேயுள்ளதெனச்சிந்தைசெய்தாற்போதுமடா !
22
சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின்றசிவம்,
வந்தெனுளே பாயுதென்றுவாய்சொன்னாற் போதுமடா !
23
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா !


அறிவே தெய்வம்
ஆயிரந்தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் - பல்லாயிரம் வேதம்
அறிவொன்றே தெய்வமுன்டாமெனல் கேளீரோ? 1
மாடனைக் காடனை வேடனைப்போற்றி
மயங்கும் மதியிலிகாள் - எதனூடும்நின் றோங்கும் 
அறிவொன்றேதெய்வமென்
றோதி யறியீரோ? 2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்சுருதிகள் கேளீரோ? - பல
பித்த மதங்களி லேதடுமாறிப்பெருமை யழிவீரோ? 3
வேடம்பல்கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர் வேடத்தை
நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே. 4
நாமம்பல் கோடியொர் உண்மைக்குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்நாமத்தை நீருண்மை
யென்றுகொள்வீரென்றந்
நான்மறை கண்டிலதே. 5
போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணுநிலையாமே -
உபசாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே. 6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்றுகாட்டும் மறைகளெல்லாம் -
நீவிர்அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ? 7
உள்ளதனைத்திலும் முள்ளொளி யாகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்குக்
கொள்ளற் கரியபிரமமென் றேமறைகூவுதல் கேளீரோ? 8
மெள்ளப் பல தெய்வம் கூட்டிவளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற்கோர்மறைகாட்டவும் வல்லீரோ? 9
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன் உணர்வெனக் கொள்வாயே. 10

4 comments:

  1. After forced to read hard to understand Tamil poems (at high school), பாரதியார் opened my eyes to simple, powerful and easy to understand poems in Tamil. My all time fav: "சென்றதினி மீளாது மூடரே" :))

    ReplyDelete
  2. ஒன்னும் புரியலே except for the words in the box...which i believe in..
    hope your ஆன்மீக ஆனா, ஆவன்னா will be in simple tamil..

    ReplyDelete
    Replies
    1. மாதம் ஒரு சாப்டர் எழுதப்படும் இந்த அரிச்சுவடியில் இந்த பாடல்களுக்கான அர்த்தம் ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.

      Delete
  3. I did! Looking forward to read

    ReplyDelete