Saturday, 22 December 2012

தேசிய கணித தினம்


உலகின் சிறந்த "கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜன். இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

நமது வாழ்வில் கணிதத்துக்கு முங்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது. தற்போதைய தலைமுறையினர், கணிதத் துறையில் அதிகளவில் ஈடுபட முன்வர வேண்டும்.
ராமானுஜன் யார்:

ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. இவர், 1887, டிச.22ல், ஈரோட்டில் பிறந்தார். 12வது வயதில், கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயன்றார். அப்போது, "மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்' ராமானுஜனுக்கு சிறு வேலை கிடைத்தது. அவரது கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேனேஜர் எஸ்.என்.அய்யர், ராமானுஜன் கண்டுபிடித்த முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப உதவினார். அதற்கு பதில் இல்லை.

இருப்பினும், 1913ல் ராமானுஜன், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டிக்கு மீண்டும் அனுப்பினார். அதைக் கண்ட ஹார்டி, இதை படைத்தவர் சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு மேதையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து, ராமானுஜனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்தார். இதை ஏற்று, 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜனின் திறமை, சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. ராமானுஜனின் உயர்வில் பேராசிரியர் ஹார்டிக்கு முக்கிய பங்கு உண்டு.

உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு, 1917ல் இந்தியா திரும்பினார். 1920ல் மறைந்தார்.


No comments:

Post a Comment