Saturday, 9 November 2013

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 11

கருமையம் 


" அம்மா, செல்கள் பற்றி ஆரம்பித்து நிறைய புது தகவல்கள் கூறியுள்ளீர்கள். ஆன்மீகத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?" என ஒரு மாணவி கேட்க 

" அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்பதை கேள்வி பட்டிருப்பீர்கள்தானே..இப்போது கருமையம்  என்ற ஒரு புதிய விஷயத்தை உங்களுக்குச் சொல்லப் போகின்றேன். அதற்கு அடித்தளமாகத்தான் செல்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டோம். இதோ இங்கிருக்கின்றதே.. இந்த மாமரத்தின் ஆதாரம் என்ன?  அதாவது மரம் எப்படி தோன்றியது?" என அம்மா கேட்க 

" ஒரு மாங்கொட்டையிலிருந்து, செடியாகி, மரமாகியுள்ளது" என்கிறாள் ஒரு மாணவி.  

" இந்த மாங்கொட்டை எங்கிருந்து வந்தது என்று கேட்டால் இன்னொரு மாமரத்தின் வித்து என்பீர்கள். இதுபோலே உங்கள் உருவம், குணங்களுக்கு எது ஆதாரம்?" என அம்மா கேட்க 

" எனது அம்மா, அப்பா" என்கிறாள் ஒரு மாணவி.

" மிக சரி. நீ உன் அம்மா வயிற்றில் கருவாக உருவானபோதே உன் அம்மா வழி மற்றும் உன் அப்பா வழி பரம்பரை குணங்கள் எல்லாம் கருவில் பதிந்துவிட்டது அல்லவா....இன்னும் சொல்லப்போனால் ஆதி இறைநிலை முதற்கொண்டு இன்றைய நீ வரை பரம்பரை சரித்திரம் அத்தனையும் உன்னில் அடங்கியிருக்கின்றது" என்கிறார்கள் அம்மா.

" அப்படியானால் இறைவனின் குணங்களும் என்னிடம் இருக்கும்தானே..?" என ஒரு மாணவி கேட்க 

" இங்குள்ள எல்லோருமே இறைநிலையின் சொரூபங்களே! இறைநிலை தன்மாற்றம் அடைந்து, இறைதுகளாகி, விண்  முதல் பஞ்ச பூதங்களாகி, ஓரறிவு தாவரம் முதல் ஐந்தறிவு விலங்குகளாகி பின் ஆறாவது அறிவு பெற்ற மனிதன் வரை வந்த பயணத்தில் இறைநிலை குணங்கள் களங்கப்பட்டு போய் விட்டன. இந்த களங்கங்களைப் போக்கினால் நாம் இறைவனாகி நிற்கலாம்" என்கிறார்கள் அம்மா. 

" மேலும் சொல்லுங்கள், அம்மா.." என மாணவிகள் கேட்க 

"குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என டார்வின் கொள்கைகள் பற்றி படித்திருப்பீர்கள். ஒரு சிம்மத்திற்கும், குரங்கிற்கும் பிறந்தவன்தான் மனிதன் என்பார்கள் மகரிஷி அவர்கள். ஐந்தறிவு வரை வந்த விலங்கினங்களுக்கு தனக்குத் தேவையான உணவைத் தயாரித்துக் கொள்ளத்தெரியாது. இயற்கையில் கிடைப்பதை அப்படியே சாப்பிடும்.குரங்கு  சைவ விலங்காக இருந்தாலும், தனக்கு தேவையானதை தன்  இனக் குரங்குகளி டமிருந்தே 
பிடுங்கி சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். சிங்கமோ தன்  உணவிற்காக 
இன்னொரு விலங்கினை அடித்துக் கொன்று சாப்பிடும். இந்த இரண்டு விலங்குகளின் கலப்பாகத் தோன்றிய மனிதன் பிறவியிலேயே பிறர்  வளம் பறித்தல் மற்றும் பிறர் வாழும் சுதந்திரத்தை அழித்தல் என்ற கள ங்கங்களோடுதான் தோன்றியிருக்கின்றான். பகுத்தறிவு பெற்ற மனிதனுக்கு தன்  எதிர்காலம் பற்றி, தேவைகள் பற்றி சிந்தித்து செயல்பட தெரிந்திருந்தாலும் பெரும்பாலான மக்கள் விலங்குகளைவிட மோசமாக வாழ்ந்து களங்கங்களைப்  பெருக்கிக்கொண்டே போகின்றார்கள். இன்றைய சமுதாயத்தில் நாம் காணும் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் மனிதர்களிடம் காணப்படும் களங்கங்களே. வித்துத் தொடராக வரும் இவற்றைப் போக்கிக்கொண்டால் மனிதன் இன்பமாக வாழ முடியும். இந்த கருமைய களங்கங்களைப்  போக்க மகரிஷி அவர்கள் எளிமையானப் பயிற்சிகள் தந்துள்ளார்கள்" என்கிறார்கள் அம்மா.

"கருமையம் என்றீர்களே, அதுபற்றி மேலும் சொல்லுங்கள்" என மாணவிகள் கேட்கின்றனர்.

" புவிஈர்ப்புமையம் பற்றி படித்திருப்பீர்கள். ஒரு பொருளின் எடை அனைத்தும் அப்பொருளின் வடிவத்திற்கு ஏற்ப ஒரு புள்ளியில் இருப்பதாக கணிக்கின்றோம். நம் பரு உடலின் மையம் எங்குள்ளது?" என அம்மா கேட்க 

"நம் அடிவயிற்றுப் பகுதி" என்கிறாள் ஒரு மாணவி.

" சரி.  உடல் முழுதும் ரத்தம் ஓடினாலும் ரத்த ஓட்டத்தின் மையம் 
இதயம்தானே..இதுபோல உடல் முழுதும் காந்த ஒட்டம் ஓடினாலும், அதற்கு ஒரு மையம் உண்டு. அதுபோல உயிர் உடல் முழுதும் ஓடினாலும் அதன் மையம் உயிரின் மூலமான ஜீவவித்துக் குழம்பு இருக்குமிடமான வித்தகம் இருக்கும் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கின்றது. பருவுடலின் மையம், காந்த ஓட்டத்தின் மையம் மற்றும் உயிர் மையம் எல்லாமே ஓரிடத்தில் அடிவயிற்றில் முதுகுத் தண்டு நுனியில் மூலாதாரம் என்று சொல்வார்களே அங்கே  இருக்கின்றது. இந்த இடத்தை மகரிஷி அவர்கள் 'கருமையம் ( Genetic Centre  ) என சிறப்பாக பெயரிட்டிருக்கின்றார்கள். நம் ஒவ்வொருவரின் கரு மையத்தில் ஆதி முதல் இன்றுவரை மனித சரித்திரத்தின் களங்கங்கள் அனைத்தும் பதிவாகியுள்ளன. இந்த கருமையத்தைத் தூய்மை செய்ய முடியும். அதைத்தான் மகரிஷி அவர்கள் எளியமுறை மனவளக்கலைப் பயிற்சிகளாகத் தந்திருக்கின்றார்கள்" என்கிறார்கள் அம்மா.

"மருத்துவத்தின் மூலமாக கருமையத் தூய்மை செய்ய முடியுமா?" என ஒரு மாணவி கேட்க 

" மகரிஷி சொல்லும் கருமையம் மருத்துவத் துறைக்கே புதுமையானது. இப்போதுதான் இதுபற்றி ஆராயத் தொடங்கியுள்ளனர். நாம் கருமையம் பற்றி மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்" என்கிறார்கள் அம்மா. 

தொடரும்  

மனிதனிடம் அமைந்துள்ள கருமையம், இறைநிலையின் பேரியக்க மண்டலம் பரிணாம இரகசியங்கள் அனைத்துமடங்கிய "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" என்று கொள்ளலாம். கருமையம் தான் மனிதன் அறிவுக்கும் மனதுக்கும் இருப்பிடமாக,  இயக்கக் களமாகவும் இருக்கின்றது.

- வேதாத்திரி மகரிஷி 

No comments:

Post a Comment