" என் இனிய மாணவச் செல்வங்களே! இதுவரை ஆன்மிகம் பற்றிய அடிப்படைகளை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் உங்களுக்குத் தெளிவு படுத்தியுள்ளேன். இவற்றைப் பற்றி மேலும் சிந்தியுங்கள். நீங்கள் எல்லோரும் மனநிறைவுடனும், வாழ்வில் சிக்கல் ஏதுமில்லாமல் மகிழ்வுடன் வாழஇறைநிலை நின்று வாழ்த்துகின்றேன். ஆரம்பத்தில் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு நீங்களே பதில்சொல்லுமளவிற்கு தெளிவு பெற்றுவிட்டீர்கள். ' சாமின்னு ஒன்னு இருக்கா?' ன்னு கேட்ட மாணவி இப்ப பதில் சொல்லலாம் " என அம்மா சொல்ல
" தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்பது இறைநிலையைக் குறிப்பது என்பதைத் தெளிவாக புரிந்துகொண்டேன் அம்மா " என்கிறாள் அந்த மாணவி.
"இறைநிலையை பற்றி உணராமலேயே இருந்துவிட்டால் என்ன ஆகிவிடும்? " என ஒரு மாணவி கேட்கின்றாள்.
" நீ கேள்வி கேட்டவிதம் பிரமாதம்! இறைநிலை விளக்கம் கேட்டதால் உன் கேள்வியை இப்படி கேட்டுள்ளாய். சாதாரணமானவர்கள் 'நான் சாமி கும்பிடாவிட்டால் சாமி என்னைத் தண்டிப்பாரா?' எனக் கேட்பார்கள்.
நீ வேலைக்குப் போன பிறகு உன்னை அமெரிக்கா போகச் சொல்லி அனுப்புகின்றார்கள். தனியாக போகவேண்டும். என்ன செய்வாய்?" என அம்மா கேட்கின்றார்கள்.
" பயணத்திற்கு வேண்டிய அத்துணை ஏற்பாடுகளையும் செய்வேன். எல்லாவிதமான தகவல்கள், தொடர்பு முகவரிகள் அனைத்தையும் எடுத்துக் கொள்வேன்" என்கிறாள் மாணவி.
"சரி. விமானப் பயணம் உனக்கு புதிது. என்ன பண்ணுவாய்?"
"பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன்" என்கிறாள் மாணவி.
" சரியாகச் சொன்னாய். உன் பயணம் சிறப்பாக இருக்க அனுபவம் மிக்க நபர்களிடமிருந்து தேவையானவற்றை கேட்டுத் தெரிந்து கொள்வதுபோல நம் வாழ்க்கைப் பயணம் மிக சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த உன்னிடமே உள்ள இறைநிலையை துணை கொள்ளலாம் அல்லவா! இறைநிலையை உணர்ந்துகொண்டால் வாழ்வில் நீ விரும்பும் அனைத்தும் மற்றும் நிம்மதி, மகிழ்ச்சி எல்லாமே அனுபவிக்கலாம்" என்கிறார்கள் அம்மா.
" வாழ்வின் நோக்கமே இறைநிலை உணர்தல், அதை அடைதல் என நீங்கள் ஏற்கனேவே சொல்லியிருக்கின்றீர்கள் அம்மா " என்கிறாள் ஒரு மாணவி.
" தியானம் செய்யும்போது எந்த திசையைப் பார்த்து உட்கார வேண்டும்?" எனக் கேட்கிறாள் ஒரு மாணவி.
" நாம் வசிக்கும் பூமியில்தான் திசைகளைப் பயன்படுத்துகின்றோம். துரியாதீதத் தவத்தின்போது சந்திரன், சூரியன் என பேரியியக்க மண்டலத்தில் விரிகின்றோம். அங்கு திசைகளோ, மேல்,கீழ் போன்றவைகள் கிடையாது. எனவே எந்த திசை நோக்கியும் அமர்ந்து தவம் செய்யலாம்" என்கிறார்கள் அம்மா.
" கிழக்கு திசை, வடக்கு திசை தவம் செய்ய உகந்தது என பெரியவர்கள் சொல்கிறார்களே" என்கிறாள் ஒரு மாணவி.
"முன்பெல்லாம் அதிகாலையில் எழுந்து ஆற்றிலோ, குளத்திலோ குளித்துவிட்டு கிழக்கு நோக்கி அமர்ந்தது ஜபம் அல்லது தியானம் இருப்பார்கள். முடிக்கும்போது சூரியோதயம் அவர்கள் மனதிற்கு மிக இனிதாக அமையும். இன்றோ சூரிய உதயத்தைப் பார்க்க முடியாமல் கட்டிடங்கள் மறைத்து நிற்கின்றன. வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி பூமியின் காந்த மண்டலம் இயங்குகின்றது. இதை ஒட்டி வடக்கு நோக்கி அமர்ந்து தவம் பண்ணும் பழக்கமும் ஏற்பட்டது. நீங்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் 'நான் அமர்ந்துள்ள இடத்தைச் சுற்றிலும் நல்ல தெய்வீக ஆற்றல் நிறைந்துள்ளது' என்ற உணர்விலே தவறாமல் தவம் செய்யங்கள்" என்கிறார்கள் அம்மா.
" சாமி கும்பிடுவது நல்லதா? தியானம் இருப்பது நல்லதா?" என்கிறாள் ஒரு மாணவி.
- தொடரும்
No comments:
Post a Comment