நம் கஷ்டத்தை ஈசுவரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப்பதாக, ஆகிறது. ‘இந்தக் கஷ்டத்தைப் போக்கு; அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்துகிற மனப்பான்மையை மாற்று’ என்கிறபோது நாம் கேட்டுத்தான் அவன் ஒன்றைச் செய்கிறான் என்றும் ஆகிறது. அதாவது தானாகப் பெருகும் அவனது காருண்யத்துக்குக் குறை,
உண்டாக்கிவிடுகிறோம். இப்படி ஞான சமுத்திரமாக, கிருபா சமுத்திரமாக இருக்கிற ஈசுவரனுடைய ஞானம், கிருபை இரண்டுக்கும் தோஷம் கற்பிக்கிற பிரார்த்தனை உண்மையான பக்தி இல்லை. ஆனால், நாமாகவே எல்லாம் சாதித்துவிட முடியும் என்ற அகங்காரத்தைவிட்டு ஈசுவரனிடம் யாசிக்கிற அளவுக்கு எளிமை பெறுகிறோமே, அதுவும் நல்லதுதான். அவனும், நாம் அவனுடைய ஞானத்துக்கும் கருணைக்கும் குறை உண்டாக்கியதைக்கூடப் பொருட்படுத்தாமல், நம் கர்மாவையும் மீறிப் பிரார்த்தனையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றலாம். ஆனாலும், ஒரு கஷ்டம் போனாலும் இன்னொரு கஷ்டம் என்று லோக வாழ்க்கையில் வந்துகொண்டேதான் இருக்கும். ஆகையால் லௌகிகமான கஷ்ட நிவிருத்திக்காக பிரார்த்தனை பண்ணுவதற்கு முடிவே இராது.
பக்தியால் படிப்படியாக லௌகிக கஷ்டங்களைப் போக்கடித்துக் கொள்ளலாம்; அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்தாத நிலைக்கு மனோபாவத்தை உயர்த்திக் கொள்ளலாம்; மனத்தின் அழுக்கைப் போக்கிக் கொள்ளலாம்; அலைகிற மனசை ஒருமுகப்படுத்தலாம்; ஈசுவரனின் கல்யாண குணங்களை நாமும் பெறலாம்; என்றும் அழிவில்லாத சாசுவதமான அன்பைப் பெற்று ஆனந்திக்கலாம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாகக் கர்ம பலனைத் தருகிறவனைத் தஞ்சம்
புகுந்தால்தான் அவன் கர்மகதிக்குக் கட்டுப்பட்ட ஸம்ஸாரத்திலிருந்து நம்மை
விடுவித்து முடிவில் முக்தி தருவான். அதாவது அவனேதான் நாமாகியிருப்பது,
எல்லாமுமாகி இருப்பது என்று அநுபவத்தில் அறிந்து கொண்டு அப்படியே இருக்கச்
செய்வான். இந்த அத்வைத ஞானத்தையும் முக்தியையும் அவன் கிருபையாலேயே
பெறலாம். பக்தி செலுத்துவதற்கு இத்தனை காரணம் இருக்கிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment