Tuesday, 5 August 2014

குரு - சீடன்....10

அங்கெங்கினாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை உணர்ந்து கொள்வதுதான் ஞானம்.

ஒரு சீடனுக்கு சந்தேகம் வந்தது. தன் குருவிடம் கேட்டான்: “நான் விழித்திருக்கும் போது, நடக்கும்போது, பேசும்போது, சாப்பிடும்போது, ஏன் உறங்கும்போதும் கூட கடவுள் பக்கத்திலேயே இருக்கிறார் என்கிறீர்களே, அது எப்படி?”

“கடவுள் எப்போதும் நம்முடன்தான் இருக்கிறார். நாம் அதை உணரவில்லை என்றால் அது நம் தவறு. உடன் இருக்கிறார் என்ற நம்பிக்கைத்தான் முக்கியம். அந்த நம்பிக்கை வலுப்பெற்று விட்டால் நம் ஒவ்வோர் இயக்கத்துக்கும் அவன் துணை இருக்கிறது என்பதையும் நாம் உணரமுடியும்'' என்றார் குரு.

சீடன் விழித்தான். யோசித்தான். அது எப்படி?

குரு அவனிடம் ஒரு தம்ளரில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். அதில் சிறிதளவு உப்பைப் போட்டுக் கலக்கச் சொன்னார். கலக்கினான்.

“அப்படியே வை. சிறிது நேரம் கழித்து வா” என்றார் குரு.

அவர் சொன்னபடியே சிறிதுநேரம் கழித்து வந்தான் சீடன்.

“அந்தத் தண்ணீர் தம்ளரை எடு” என்றார் குரு.

சீடன் எடுத்து வந்தான்.

“இதில் என்ன இருக்கிறது?” குரு கேட்டார்.

“தண்ணீர்'' என்று பதில் வந்தது.

“தண்ணீர் மட்டுமா இருக்கிறது?”

“ஆமாம்.”

“ஆனால், நீ உப்பைப் போட்டுக் கலக்கினாயே?”

“ஆமாம்!”

“அந்த உப்பு எங்கே?”

“தெரியவில்லையே!”

“இந்தத் தம்ளரிலுள்ள தண்ணீரில் உப்பைப் போட்டுக் கலக்கியவன் நீ. ஆனால், இப்போது உப்பைக் காணோம் என்கிறாய். உப்பு எங்கேதான் போயிற்று?''

சீடன் விழித்தான். அவனுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. ‘கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, மற்றபடி அந்தத் தண்ணீரில் உப்பைப் போட்டுக் கலக்கியவன் நான்தான். ஓ! உப்பு கரைந்து விட்டிருக்கிறது. தண்ணீரோடு தண்ணீராக தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறது!’

குரு மெல்லிய சிரிப்புடன் சீடனைப் பார்த்தார். அவனுடைய சந்தேகம் பரிபூரணமாகத் தீரவில்லை என்ற உண்மை அவருக்குப் புரிந்தது. அதையும் அவனாகவே புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார் அவர்.

“சரி, அந்தத் தம்ளர் தண்ணீரை எடு. ஒரு ஸ்பூனால் மேல் பாகத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் குடித்துப் பார்” என்றார்.

சீடன் அப்படியே செய்தான்.

“எப்படி இருக்கிறது?” குரு கேட்டார்.

“உப்புக் கரிக்கிறது” என்றான் சீடன்.

“சரி, ஸ்பூனை உள்ளே விட்டு நடுப்பகுதியிலிருந்து சிறிதளவு தண்ணீர் எடுத்துக் குடி”

“இதுவும் உப்புக் கரிக்கிறது.”

“சரி, அடியிலிருந்து எடுத்துக் குடி.”

“இதுவும்தான் உப்புக் கரிக்கிறது.”

“கடவுள் இப்படித்தான் நம் வாழ்க்கையுடன் ஒன்றியிருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும்போது தண்ணீர்தான் தெரிகிறது. ஆனால், அதன் ஒவ்வொரு துளியும் உப்புக் கரிக்கிறது. இதை உணர்ந்தும் ருசித்தும் பார்த்தால்தான் அந்தப் பேருண்மை புரிகிறது” என்றார் குரு.

சீடன் புரிந்து கொண்டான். தன்னுடனேயே உறையும் கடவுளை உணர்ந்து கொண்டான்.

உண்மையான ஆன்ம ஞானம், மேலோட்டமான ஆன்மிக உணர்வையும் ஆழ்ந்த ஆன்மிக ஈடுபாட்டையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய திறன் வாய்ந்தது. மேலோட்டமான உணர்வு அலைக்கழிக்கப்படும் தன்மையுடையது.

ஒருவன் ஒரு மரத்திலிருந்து பூக்களைப் பறிக்கிறான். காய்கனிகளைக் கொய்கிறான். கிளைகளை வெட்டுகிறான். ஆனாலும் மரம் உயிர் வாழ்கிறது. அடியோடு வெட்டப்பட்டாலன்றி அந்த மரம் முழுமையாகச் சாய்ந்து விடுவதில்லை. எப்படியாவது வேரூன்றி, நிலத்திலிருந்து நீர் உறிஞ்சி, உயிர் வாழும் அவசியத்தை அது உணர்த்துகிறது.

அதுபோலதான், மூப்பு காரணமாகவோ, விபத்து காரணமாகவோ உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக நீங்கினாலும் உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழிவதேயில்லை. மொத்தமாக உடலே பூமிக்குள் புதையுண்டாலோ அல்லது எரியுண்டாலோ ஆத்மா மட்டும் இந்த உடலிலிருந்து விடுதலை பெற்று வேறோர் உடலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு விடுகிறது.

இருக்கும் கொஞ்ச நாளிலேயே இந்த உடம்பு உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுகிறது. முக்கியமான இரண்டு உணர்வுகள் அன்பும், பகையும். அன்பால் ஏமாற்றப்படுவதும், பகையால் செல்வாக்குப் பெறுவதுமாகிய பலன்களால் அவ்விரண்டு குணங்களுக்கும் இருக்கக்கூடாத ஒரு மதிப்பு தங்கிவிடுவதுதான் துரதிர்ஷ்டம்.

ஆனால், இந்த உணர்வுகளாலும், பலன்களாலும் பாதிக்கப்படுவது உடல்தானே தவிர உள்ளிருக்கும் ஆத்மா அல்ல. 

No comments:

Post a Comment