Monday 20 October 2014

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 22




பெண்ணின் பெருமை

"அம்மா! பெண்கள் பற்றி பெரும்பாலும் மதநூல்களில் இழிவாய் சொல்லியிருக்கின்றார்களே, கேட்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. ஏன் இப்படி எழுதியுள்ளார்கள்?" என  ஒரு மாணவி கேட்க 

அம்மா சொல்கின்றார்கள் -

" இதற்கான விடை ரொம்ப சிம்பிள். மதநூல்களையும், பெண்கள் இப்படிதான் நடக்கவேண்டும் என்பதை எழுதியவர்கள் ஆண்கள்தான்! பெண்கள் அடிமைகள் என்ற உணர்வு  அந்த காலத்திலிருந்தே ஆண்களுக்கு இருந்து கொண்டிருக்கின்றது.   மாணவிகளாகிய நீங்கள் பெண்களின் பெருமை பற்றி நிறைய தெரிந்து கொள்ளவேண்டும்.  

பாரதியார் பெண்ணின் அடிமைதனத்தை இப்படி இடித்துரைகின்றார் -


பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணிவளர்த்திடும் ஈசன
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையகம்
பேதமை யற்றிடுங் காணீர்    - 

பெண்கள் மனிதருக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய வித்தியாசமில்லை என்பதும், ஆண்கள் அடைய விரும்பும் சீர்திருத்தங்கள் போலவே பெண்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதும், ஏனெனில், அவர்களை அழுத்தி அடிமைப்படுத்திய கொடுமையான பலமானது பெண்கள் தாங்கள் மெல்லியலாளர்கள் என்றும், ஏதாவது ஒரு ஆணின் காப்பில் இருக்கவேண்டியவர்களென்றும், தங்களையே கருதிக்கொள்ளும்படி செய்துவிட்டது. ஆதலால் அது முதலில் மாறவேண்டியது அவசியமாகின்றது.

நம் மகரிஷி அவர்கள் பெண்ணின் பெருமை பற்றி பேசியதில்  சுருக்கமாக அவர் வார்த்தைகளில் சொல்கின்றேன் - 

ஆணகளுக்கும், பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் இது தான். கணவன் அலுவலகத்திற்கோ தொழிற்சாலைக்கோ போகும் போது கூட மனைவியானவள் "அவரை நல்லபடியாகக் காப்பாற்று," என்று ஏதேனும் ஒரு தெய்வத்தை வேண்டிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். சமுதாயத்தில் ஒரு பழக்கமாகவே இது வந்து விட்டது. ஆனால் ஆண்களோ நல்லதாக இருந்தாலும் பெண்ணை பாராட்டுவதற்கு ஒரு கஞ்சத்தனம்! பெரிய பெரிய நன்மைகளை எல்லாம் தொடர்ந்து பெற்றவர்கள் கூட என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள்? ஒரு சிறிய பாராட்டு வாய் திறந்து சொன்னால் அவள் கை ஓங்கி விடுமாம்!  தானாக தன்னுடைய மனைவியைப் பாராட்டி அதிலே இருந்து அந்த இன்பத்தை அடையக் கூடிய மறுக்கக் கூடிய உள்ளங்களுக்கு அன்பு என்பது எங்கே உண்டாகும்? இதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்றால் நீண்ட காலமாகப் பழக்கத்தில் பெண்களை சாதாரணமாக உபயோகப்படக் கூடிய பொருளாகவே மதித்து மதித்து, அதே மாதிரி நிலையிலே பல நூல்கள் வந்ததனால் அந்தக் கருத்து இன்றும் நிலவி வருகிறது. பெண்களுக்குச் சம உரிமை மாத்திரம் இல்லை, பெரிய மதிப்பும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அது தான் எனது கவிதை நூலிலே ஒரு கவியிலே எழுதி இருக்கிறேன்:



"பெண் வயிற்றி லுருவாகிப்
பெண் பாலுண்டே வளர்ந்தாய்
பெண் துணையால் வாழ்கின்றாய்
பெண்ணின் பெருமை உணர்,"

என்று, தாய்க்குலத்திற்கு நாம் ஏன் அவ்வளவு மதிப்புத்தர வேண்டியதாக இருக்கிறது என்று உலக சமாதானம் என்ற நூலில் ஒரு இடத்தில் விளக்கம் கொடுக்கும் போது,

"பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்
பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறென்ன
பெருமை இதை விட எடுத்துச் சொல்லுதற்கு?
பெண்ணினத்தின் இயல்பு பெற்ற மக்கள் தம்மை,
பிறர் வளர்க்க அனுமதியார், மனமும் ஒவ்வார்,
பெண்ணினத்தின் விடுதலைக்கு இந்தத் தியாகம்,
பேருலக அமைதிக்கும் அவசியம் ஆம்,"

என்று எழுதியுள்ளேன்.  வேறு என்ன பெருமை இதைவிட எடுத்துக் கூறுவதற்கு? வேறு ஒரு பெருமையும் நீங்கள் பேச வேண்டியதில்லை; எல்லாருமே பெண்களால் அளிக்கப்பட்ட, பெறப்பட்ட பிள்ளைகள்தான் என்பதை உணர்ந்தாலே போதும்.  சம உரிமை மாத்திரம் அல்ல, இன்னும் பிரத்தியட்சமாக சில உரிமைகள்கூட அவர்களுக்குக் கொடுத்து நாம் வாழ வைக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். போன காலம் எல்லாம் போகட்டும், இனி வருங்காலத்திலேயாயினும் முதலில் அவரவர்கள் வீட்டிலே தொடங்க வேண்டும்.

கருத்தரித்த நாள் முதற்கொண்டு ஒன்பது மாதம் பத்து நாள் வரையில் ஒரு தாய்க்கு என்ன துன்பம் இருக்கும் என்று யாராலும் எண்ணிப் பார்த்ததால் அதை விடத் துன்பம் உலகத்தில் மனிதனுக்கு இருக்க முடியாது.

எல்லையற்ற பெருவெளியாகி மெய்ப்பொருள் தன்னில் உள்ளமைந்துள்ள ஆற்றலால் நுண்ணியக்க மூலக்கூறாகிய ஆகாசமெனும் சக்தியாகி, சிவம் சக்தி இரண்டின் கூட்டுச் சேர்க்கையில், விகிதாச்சார அமைப்புக்கேற்ப அணு முதல் அண்டகோடிகளாக விளங்குவதைச் சிந்தனையாற்றல் பெற்ற அனைவரும் அறிவோம்.

பேரியக்க மண்டலமெனும் பிரபஞ்சத்தின் ஆக்கம், நிகழ்வு, முடிவு எனும் மூன்றும் அணுக்கள் கூடுதல், இயங்குதல், பிரிதல் எனும் நிகழ்ச்சிகளேயாகும்.

எனினும், உயிரினங்கள், தோற்றங்கள், காப்பு இவற்றைப் பெண்மையினிடத்தே அருட்பேராற்றல் அமைத்திருக்கும், ஒப்புவித்திருக்கும் பேருண்மையை உணரும்போது எல்லோரும் பெண்ணினத்தின் பெருமையை உணர்ந்து போற்ற வேண்டியுள்ளது" .


" பெண்குலமே மகரிஷி அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றது " என்கிறாள் ஒரு மாணவி.

" இது மாத்திரமல்ல...'சிறப்புணர்ந்த பெண்மதிப்பு' என வேதாத்திரியத்தின் ஒரு அம்சமாகவும், 'மனைவி நல வேட்பு நாள் ' உலகமெங்கும் கொண்டாடவைத்து பெண்ணின் பெருமைகளை எல்லோருக்கும் குறிப்பாக ஆண்களுக்கு உணர்த்தியவர் நம் மகரிஷி அவர்கள். உங்களுடன் சேர்ந்து நன்றி மலர்களை அவர் பாத கமலங்களில் சமர்ப்பிக்கின்றேன் " என முடிகின்றார்கள்  அம்மா.

- தொடரும்


No comments:

Post a Comment