Thursday, 16 October 2014

SUPERSTITION ...6

மூட நம்பிக்கைகள் உருவாவது ஏன்?

1. எல்லோரும் செய்கிறார்கள் என்று நாமும் செய்வது.

2. ஒரு செயலின் காரணத்தை முன்னோர்கள் சொல்லாமல் மறைப்பது. அல்லது அந்தப் பெரியோர்களிடம் நாம் பயந்துகொண்டு காரணத்தை வினவாமல் விடுவது.


3. இப்படிச் செய்யாவிடில் ஏதேனும் எதிரிடை விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுவது அல்லது நாலு பேர் நம்மை என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவது.


4. யாரோ ஒரு பெரியவர் செய்த செயலை நாமாகத் தவறுதலாகப் புரிந்துகொண்டு பின்பற்றுவது அல்லது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல தவறாக விளக்கம் கொடுப்பது.


ஒரு ஊரில் ஒரு குரு இருந்தார். ஒரு நாள் அவருடைய ஆஸ்ரமத்தில் திடீரென்று ஒரு பூனை புகுந்தது. அது நோய்வாய்ப்பட்ட பூனை. ஆகையால் குரு அதை அன்புடன் கவனித்து நோயைக் குணப்படுத்தினார். இப்போது பூனைக்கு துணிச்சல் வந்துவிட்டது. 

குருநாதர் தியானம் செய்கையில் கூட அவர் மடியில் உட்கார்ந்து கொஞ்சத் துவங்கியது.இந்த அன்புத் தொல்லை பொறுக்காததால், பூனையை குருநாதர் தினமும் தனது கட்டில் காலில் கட்டிப் போட்டுவிட்டு தியானம் செய்யத் துவங்கினார். குருநாதரின் சீடர்கள் இதை உன்னிப்பாகக் கவனித்தனர். நாளடைவில் குருநாதருக்கு வயதாகி இறந்தும் போனார்.


ஆஸ்ரமத்தின் பிரதம சீடர் குருநாதர் பதவிக்கு வந்தார். அவரும் பூனையின் கட்டில் கால் ‘’மர்மத்தை’’ அறியாமல் தினமும் அதைக் கட்டிலின் காலில் கட்டிப் போட்டுவிட்டுத் தியானம் செய்யத் துவங்கினார். நாளாக நாளாக எல்லோரும், தியானத்தைவிட பூனையைக் கட்டில் காலில் கட்டிப் போடும் சடங்கை பயபக்தியுடன் செய்யத் துவங்கினர். 
அந்தப் பூனைக்கு வயதாகியதால் அது இயற்கை மரணம் எய்தியது. 

உடனே புது பூனை ஒன்றை வாங்கி கட்டில் காலில் கட்டத் துவங்கிவிட்டனர்!


பிரதம சீடரும் இறந்தவுடன் சீடர்கள் ஆள் ஆளுக்கு ஒரு பூனையை வாங்கி கட்டில் காலில் கட்டத் துவங்கினர்! இப்படியாக தியானத்தைவிட பூனை முதலிடம் பெற்றது!

No comments:

Post a Comment