Thursday 16 October 2014

பக்தி....8

குயவன் ஒருவன் மண் பாண்டங்கள் செய்து கொண்டிருந்தான்.

அவன் வீட்டு வாசலில் ஒரு ஆடு கட்டப்பட்டிருந்தது.

அந்த வழியே துறவி ஒருவர் வந்தார்.

துறவியை வணங்கி அந்தக் குயவன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

பின் அவர் விடை பெறும்போது குயவன் சொன்னான், ''ஐயா,தயவு செய்து இரண்டு நாட்கள் இங்கே தங்கிச் செல்லுங்கள்.இங்கு நாளை எங்கள்  குல  தெய்வத்தினை வணங்குகிறோம்.விழா சிறப்பாக இருக்கும்.விழாவில் வாசலில் கட்டப்பட்டிருக்கும் ஆட்டினை பலி  கொடுத்து பூஜை செய்யப் போகிறோம்.''

துறவி சற்றும் எதிர்பாராத நிலையில்.குயவனின் பானை ஒன்றினை எடுத்து ஓங்கித் தரையில் அடித்து உடைத்தார்.பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் அதிர்ச்சி அடைந்தான்.அவனால் பேசக் கூட முடியவில்லை.துறவிக்குப் பைத்தியம்பிடித்திருக்குமோ என்று அஞ்சினான். 

துறவி அவனைப் பார்த்து,''இந்த உடைந்த துண்டுகளை எடுத்துக் கொள்.அவை எல்லாம் உனக்குத்தான்.''என்றார்.

குயவன்,''என் பானையை உடைத்து எனக்கே தருகிறீர்களா?''என்று ஆத்திரத்துடன் கேட்டான். 

அதற்கு துறவி,''கடவுள் படைத்த ஒரு உயிரைப் பலியிட்டு கடவுளுக்கே கொடுக்கப் போகிறேன் என்கிறாயே! அதை அவர் ஏற்றுக் கொள்வார் என்றால்.இந்த உடைந்த துண்டுகளை நீ ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது?''என்று கேட்டார்.

குயவன் பேச வழியின்றி வாயடைத்து நின்றான்

No comments:

Post a Comment