" அம்மா, பழனி தல வரலாறு சொல்லும் உண்மையை புரிந்து கொண்டோம். மிக்க நன்றி. இது போல மற்ற கோவில்களின் தல வரலாறுகள் உணர்த்தும் விஞ்ஞான விளக்கங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றோம்.
நிறைய சொல்லுங்கள் " எனக் கேட்கிறாள் ஒரு மாணவி.
" என் இனிய மாணவச் செல்வங்களே! இதுவரை ஆன்மீக ஆனா, ஆவன்னா என்ற தலைப்பில் அடிப்படை விஷயங்கள் அனைத்தையுமே நன்கு தெளிவாக உணர்ந்துகொண்டீர்கள். ஒவ்வொரு கோயிலாக எடுத்துக்கொண்டு அந்த கோயில் புராணம் மற்றும் பெருமைகளை நன்கு ஆராய்ந்து பாருங்கள். நீங்களே புராணங்கள் விளக்கும் தத்துவங்களைப் புரிந்து கொள்வீரகள்" என்கிறார்கள் அம்மா.
" அம்மா, நீங்களே ஒரு ஊர் கதையை சொல்லுங்கள். நாங்கள் உண்மைத் தத்துவத்தைக் கண்டு பிடிக்கின்றோம் " எனக் கேட்கிறாள் ஒரு மாணவி.
" சரி, மதுரையில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்ததாக ஒரு திருவிளையாடல் கதை உங்கள் எல்லோருக்கும் தெரியும் அல்லவா! அதைச் சொல்லி அந்த கதை மூலம் நீங்கள் அறியும் உண்மையையும் சொல்லுங்கள் பார்க்கலாம்" என்கிறார்கள் அம்மா.
ஒரு மாணவி சொல்ல ஆரம்பிக்கின்றாள் -
சிவனின் லீலையால் வைகையில் வெள்ளம் வந்து கரை உடைந்துவிடுகின்றது.
கரையை சீர் செய்ய வீட்டிற்கு ஒரு இளைஞன் வரவேண்டும் என அரசன் ஆணையிடுகின்றான்.
வந்தி எனும் புட்டு சுட்டு விற்கும் கிழவி தன சார்பாக அனுப்ப ஆள் இல்லாததால் இறைவனை வேண்ட சிவபெருமான் ஓர் இளைஞன் உருவில் அவளிடம் வந்து ' நான் உனக்காக வேலை செய்கின்றேன். எனக்கு கூலியாக உன் புட்டை கொடு' என கேட்கிறார்.
ஆனால் கிழவியோ ' நான் புட்டு செய்யும்போது உதிரும் புட்டு மாத்திரமே உனக்கு கொடுக்கமுடியும்' என்கிறாள்.
அன்று வந்திகிழவி செய்யும் புட்டு எல்லாமே உதிர்ந்துவிடுகின்றது.
எல்லா புட்டினையும் வயிறு முட்ட சாப்பிட்ட சிவபெருமான் வைகை கரையை அடைக்காமல் ஒரு மரத்தடியில் தூங்குகிறார்.
இதைக் கண்ட அரசன் கோபமுற்று கூலியாளாக வந்த சிவனை பிரம்பால் அடிக்க அந்த அடி பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து உயிர்களின்மீது பட அரசன் அரண்டுபோய் விட்டான்...."
" இந்த அளவு கதை போதும். இதிலிருந்து நீங்கள் உணரும் தத்துவம் என்ன?" எனக் கேட்கிறார்கள் அம்மா.
" இறைநிலையாக உள்ள சுத்தவெளி இந்த பிரபஞ்சம் முழுதும் மற்றும் பிரபஞ்சத்தை சூழ்ந்தும் உள்ளது. சுத்தவெளியின் எந்த ஒரு பகுதியில் ஏற்படும் அதிர்வுகளோ, மாற்றங்களோ அல்லது விளைவுகளோ சுத்தவெளியின் எல்லா இடங்களிலும் உணரப்படும் " என்கிறாள் ஒரு மாணவி.
" அற்புதமாகச் சொன்னாய். சுத்தவெளியை நம் முன்னோர்கள் சிவம் என்ற பெயரில் அழைத்தார்கள். பிறகு மக்களுக்குப் புரிய வைப்பதற்காக அதற்கு சிவன் என்ற உருவம் கொடுத்து பல விஞ்ஞானத் தத்துவங்களை மக்களுக்கு புரிய வைப்பதற்காக இந்த மாதிரி புராணக் கதைகளைச் சொன்னார்கள். ஆனால் இன்றோ மக்கள் இம்மாதிரி கதைகளில் உள்ள தத்துவத்தை உணராமல் கதையின் சடங்குகளுக்கு முக்கியம் கொடுக்கின்றார்கள். உதாரணமாக பிட்டுக்கு மண் சுமந்த இந்த திருவிளையாடல் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மதுரையில் பண்டிகையாக கொண்டாடப் படுகின்றது. அன்று சிவனுக்கு புட்டு படைத்து வழிபடும் சடங்கு மாத்திரம்தான் நடைபெறுகின்றது. ஆனால் சிவம் எல்லா உயிர்களிலும் இருக்கின்றது என்ற இக்கதையின் தத்துவத்தை புரிந்து கொள்பவர்கள் மிகச் சிலரே" என்கிறார்கள் அம்மா.
" ஆன்மீக அடிப்படைகளை தெளிவாக எங்களுக்கு உணர்த்திவிட்டீர்கள். நாங்கள் இப்போது நன்றாக சிந்தித்து தெளிவாக முடிவேடுக்கின்றோம்.
எங்களுக்கு நீங்கள் மேலும் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?" என ஒரு மாணவி கேட்க
" என் இனிய மாணவச் செல்வங்களே! நீங்கள் சிந்தனையில் உயர்ந்துள்ளதைக் கண்டு மிகவும் மகிழ்கின்றேன். என்னுடன் ஒத்துழைத்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் தெரிந்துகொண்ட இந்த ஆன்மீக அடிப்படை எல்லா மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு தெளிவாக தெரியவேண்டும். இன்று இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர்கள், சுமார் 60 கோடி மக்கள் 30 வயதுக்கு கீழே உள்ள இளைஞர்கள். இவர்கள்தான் எதிர்கால இந்தியாவை வல்லமையாக உருவாக்க வேண்டும். ஆனால் இவர்களின் இன்றைய மனோநிலை சரியான வழிகாட்டுதல் இன்றி இவர்கள் செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது. இவர்களுக்கு நல்லமுறையில் வழிகாட்டி, ஆக்கத்துறையில் ஈடுபடுத்தி ஊக்கமுடன் உழைத்து உயர என்ன செய்யலாம்?" என அம்மா கேட்கின்றார்கள்.
மாணவிகள் சிந்திக்கின்றனர்.
அடுத்த இதழுடன் இந்த தொடர் நிறைவு பெறுகின்றது.
No comments:
Post a Comment