Saturday 26 February 2022

தேவநேயப் பாவாணர் - 2

 


மிழறிஞர் ஒருவர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மிதிவண்டியில் வந்த ஒருவன் கவனிக்காமல் அவர்மீது மோதிவிட்டான். ''அய்யா மன்னித்துக்கொள்ளுங்கள்... தெரியாமல் மோதிவிட்டேன்'' என்றான். இதைக்கேட்ட அந்தத் தமிழறிஞருக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. உடனே அவர், ''மன்னிப்பு என்பது உருதுச் சொல். "பொறுத்துக்கொள்ளுங்கள் என்பதே சரியான தமிழ்ச் சொல்'' என்றார். இப்படிச் சாதாரண பேச்சில்கூடத் தமிழ் மொழியை உச்சரித்தவர் வேறு யாருமல்ல... அவர், தனித்தமிழ் இயக்கத்துக்கு வேராக நின்று தமிழை வளர்த்த தேவநேயப் பாவாணர்தான்.

'மாந்தன் பிறந்தது மறைந்த குமரிக்கண்டம், அவன் பேசிய மொழி தமிழே, தமிழே உலக முதன்மொழி, தமிழே திராவிடத்துக்குத் தாய், தமிழே ஆரியத்துக்கு மூலம்' என்று சூளுரைத்த பாவாணர், பிறர் தமது காலில் விழுவதை,  ஒருபோதும் விரும்ப மாட்டார். ''மாந்தன், இன்னொரு மாந்தன் காலில் விழுவதைத் தன்மானக் கேடு'' என்றே சொல்வார். 

தாயினுஞ் சிறந்தது தமிழே!

தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே

வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே.

பாலூட்டி வளர்த்ததும் தமிழே தாலாட்டி வளர்த்ததும் தமிழே
பாராட்டி வளர்த்ததும் தமிழே சீராட்டி வளர்த்ததும் தமிழே

தேம்படு மழலையுந் தமிழே திருந்திய வுரைகளும் தமிழே
தேம்பி யழுததுந் தமிழே தேவையைக் கேட்டதும் தமிழே

முந்தி நினைந்தலும் தமிழே முந்தி மொழிந்ததும் தமிழே
குந்தி யெழுந்ததும் தமிழே குலவி மகிழ்ந்ததுந் தமிழே

பயன்படு கல்வியும் தமிழே பணிபெறப் படுவதும் தமிழே
அயன்மொழி பயில்வதும் தமிழே அயன்மொழி நினைவதும் தமிழே

குலமெனப் படுவதும் தமிழே கோவெனப் படுவதும் தமிழே
நலமெனப் படுவதும் தமிழே நாடெனப் படுவதும் தமிழே

தனிமொழி யானதும் தமிழே தாய்மொழி யானதும் தமிழே
கனிமொழி யானதும் தமிழே கலைமொழி யானதும் தமிழே!

– மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்:


No comments:

Post a Comment