Tuesday 15 January 2019

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 28

பொங்கலோ பொங்கல் !
பொங்கல் வாழ்த்து அட்டைகள், மடல்கள் 


இரண்டு நாட்களாக whats app லும், முகநூலிலும் எண்ணற்ற பொங்கல் வாழ்த்துக்களைக் கண்டபோது பொங்கல் மலரும் நினைவுகளாய்  பொங்கலன்று பொங்கல் வாழ்த்து மடல்களைக் கொண்டுவரும் தபால்காரருக்காகத் தவம் இருந்ததுதான் முதலில் ஞாபகம் வருகின்றது.

பக்க்கத்து வீடு நண்பனுக்குக்கூட தபாலில் பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்புவதுதான் - இருவருக்குமே மகிழ்ச்சி! ஒவ்வொரு நண்பனுக்கும் பிடித்த மாதிரி, உறவினர்களுக்குப் பிடித்த மாதிரி, ஆசிரியர்கள்/பெரியவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்த்து மடல்களைத் தேடி பிடித்து, அதில் உள்ள கவிதை வரிகளையும் சரியாகத்  தேர்ந்தெடுத்து , பிறகு அவர்களுக்குத் தெரியாமல் சஸ்பென்ஸாக அவர்கள் முகவரி கண்டு பிடித்து தபாலில் சேர்ப்பது ஓர் இன்பம்! அப்போதெல்லாம் book post ல் தபால் அனுப்புவது 8 paise மட்டுமே! post card க்கு 5 paise தான்! பொங்கலன்று தபால்காரர் கத்தை, கத்தையாக வாழ்த்து மடல்களைக் கொண்டு வருவார். அன்று அவருக்கு லீவ் இருப்பதில்லை.

வந்த மடல்கள் கவரைப் பிரித்து அதில் உள்ள படங்களை பார்ப்பது - எவ்வளவு விதவிதமான படங்கள் - சாமி படங்கள், தலைவர் படங்கள், நடிகர் / நடிகைகள் படங்கள், கரும்பு சுவைக்கும் குழந்தைகள்/சிறுவர்கள் படங்கள், ஏர் பிடிக்கும் விவசாயி படங்கள், அலங்கரிக்கப்பட்ட மாடுகள்  என எண்ணற்ற வகைகளில் வாழ்த்து மடல்கள் வரும்.


இவற்றை விற்பதற்கென்றே பொங்கலுக்கு முன் பல கடைகளில் சிறப்பாக எல்லா மாடல்களும் பார்வையில் படும்படி வைத்திருப்பார்கள். இவற்றைப் பார்ப்பதற்கென பல கடைகளுக்குச் சென்று வந்த ஞாபகம் பசுமையாக உள்ளது. எனது உயிர்த் தோழனுக்காக மூன்று நாட்கள் பல கடைகளில் வாழ்த்து மடல் தேடி மெனக்கட்ட அனுபவம் - படம் நன்றாக இருந்தால் அதில் உள்ள வாழ்த்து கவிதை நன்றாக இருக்காது - எப்படியோ கிடைத்து அனுப்பியதில் அடைந்த மகிழ்ச்சி இன்றும் ஒட்டிக்கொண்டுள்ளது.

என் நண்பன் post card ல் இங்க் spray  பண்ணி அழகாக வாழ்த்து மடல் தயாரிப்பான். அதில்  ஒன்றை வெகுகாலமாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன் - வழக்கம்போல தொலைத்து விட்டேன். 

வாழ்த்து அனுப்பாத நண்பர்களுக்குத் தண்டனையாக ஒரு காரியம் செய்வோம் - Post Card ஐ பாதியாக வெட்டி முகவரி உள்ள பகுதியில் நண்பன் முகவரி எழுதி
 " மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் " என எழுதி post செய்துவிடுவோம். இப்படி அனுப்பப்பட்ட card களுக்கு 10 paise due கட்டவேண்டும்.

பெரிய வகுப்பில் படிக்கும்  பசங்கள் மாணவிகளுக்கு வாழ்த்து மடல் அனுப்பி வாங்கிக்கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சிகளும் பொங்கலின்போது நடைபெறும்.

எதிர்பாராமல் வெகுநாட்களுக்குப் பிறகு பொங்கல் வாழ்த்து அனுப்பியதின்  மூலம் புதுப்பிக்கப்பட்ட நட்புகள்/உறவுகளும் உண்டு.

எல்லையில்லா மகிழ்ச்சியினை வாரி, வாரி வழங்கிய அந்த வாழ்த்து மடல்கள் இன்று கண்ணில் படுவதில்லை. ஏராளமான வாழ்த்துக்கள்
whats app ல் குவிந்தாலும் மனம் பழைய வாழ்த்து மடல்களுக்குதான்  ஏங்குகின்றது!

4 comments:

  1. Yes. Even now i remember... Thank you Uncle for the refreshing our memories..

    ReplyDelete
  2. Mainguard gate platform near teppakkulam post office, sophys corner etc searching for various designs. Great JP sir for taking me to those days.

    ReplyDelete
    Replies
    1. How are you PKRP? Are you in Trichy?
      Would like to meet you....
      Vazhga Valamudan!

      Delete