Monday 21 January 2019

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 29

Dr M S உதயமூர்த்தி 

ஆழியாறில் 2003ல் அருட்தந்தை நடத்திய நதி நீர் இணைப்பு கருத்தரங்கில் 
Dr M S  உதயமூர்த்தி அவர்கள் 


எனது இளமைப்பருவத்தில் எனக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைந்தவர்  Dr MSU அவர்கள். எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள விளநகர் கிராமத்தில் பிறந்த இவர் மயிலாடுதுறை உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றவர். இவரின் உறவினர்கள் எங்கள் வீட்டிற்கு அருகாமையில் வசித்ததால் இவருடைய தொடர்பு என் சித்தப்பாவிற்கு கிடைத்தது. 

இவரை உயர்நிலைக்கு ஆளாக்கிய இவரது சகோதரி கணவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மின்துறை பேராசிரியர் பாலசுந்தரத்திடம்தான் நான் பொறியியல் பயின்றேன். Dr MSU அமெரிக்காவிலிருந்து வரும்போதெல்லாம் சிதம்பரத்தில் பேராசிரியர் இல்லத்திற்கு வரும்போது எங்கள் வகுப்புகளுக்கும் வந்து உரையாடுவார். இவரது வளர்ச்சிக்கு உதவிய உறவினர் பேரா. சிங்காரம் அவர்களையும்  சில முறை சந்த்தித்து அறிவுரை பெற்றிருக்கின்றேன். 

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது யேல் பல்கலைக்கழகத்தில் விருது பெற்றபோது துணை நின்றவர் அவர். எம்ஜியார் அமெரிக்கா சென்றபோதும்  உதவியாய் இருந்தவர். 

1972ல் இவர் இந்தியா வந்திருந்தபோது மயிலாடுதுறையில் என் சித்தப்பா கடைக்கு வந்திருந்தார். அந்த ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 25ம் ஆண்டு வெள்ளிவிழா கண்டிருந்தது. இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் நிலை கண்டு மனம் வெதும்பி 
" தமிழ்நாடு எங்கே போகிறது? " என விகடனில் பல கட்டுரைகள் எழுதினர்.

நான் பொறியியல்துறை மாணவனாக படித்தபோது அவரின் " எண்ணங்கள் " கட்டுரைகளினால் ஈர்க்கப்பட்டு அவருக்கு கடிதம் எழுதி பேரா. பாலசுந்தரத்தின் மாணவன் எனக் குறிப்பிட்டு எனது கருத்துகளைத் தெரிவித்திருந்தேன். தவத்திரு சித்பவானந்தரின் " தினசரி தியானம் " சிறு நூலினைப் பற்றி என் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்த நூலினைப் பற்றி சிலாகித்து அவர் தன்  அடுத்த நூலான "மனம், பிரார்த்தனை, மந்திரம் " என்ற தனது நூலினால் குறிப்பிட்டிருக்கின்றார்.

அருட்தந்தை மகரிஷி அவர்களின் மனவளக்கலை அவருக்குப் பிடித்திருந்தது. சென்னை தூர்தர்ஷனில்  மகரிஷி அவர்களை  Dr MSUபேட்டி நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.

இவரின் " வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் ( ஜேம்ஸ் ஆலன் புத்தகத்தைத் தழுவியது ) " புத்தகத்தை நானும். மாலாவும் எங்கள் நண்பர்களுக்குப் பரிசளித்திருக்கின்றோம்.

2003ல் Dr MSUஆழியார் வந்திருந்தபோது மாலா அவரிடம் வெகுநேரம் உரையாடினாள். அவரது மருமகள்பெயரும் மாலாதான் ( பேரா. பாலசுந்தரத்தின் மகள் ) என்று சொல்லி மாலாவிற்கு " வாழ்க்கயை அமைக்கும் எண்ணங்கள் " புத்தகத்தில் வாழ்த்துக்கூறி எழுதிக் கொடுத்தது எங்களால் மறக்கமுடியாத ஒன்று.

இன்று அவரது நினைவு தினம் ( மறைந்து ஆறு ஆண்டுகளாகி விட்டது ).

இன்று எனது நட்சத்திர பிறந்ததினம் ( தைப்பூசம் ). இந்நாளில் அவரை  நினைவு கூர்ந்து சில விஷயங்களை பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செய்கின்றேன். வாழ்க Dr MSU புகழ்!

**************************************************

2012ம் ஆண்டு தைப்பூசத்தில் " எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் ' எழுத ஆரம்பித்தேன். ஆயிரக்கணக்கான தலைப்புகளில் நினைவுகளை எழுத ஆர்வம் கொண்டிருந்தேன். பல்வேறு வேலைகள் காரணமாகவும், Facebook , Twitter  மற்றும் Whats App வந்து blog படிப்பவர்கள் மிகவும் குறைந்துவிட்ட காரணத்தினாலும் மிகக் குறைவாகத்தான் எழுதியுள்ளேன். இனி நிறைய எழுதுவேன்.

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் -1 படிக்க இங்கே click செய்யவும்.

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 2  படிக்க இங்கே click செய்யவும்.

No comments:

Post a Comment