`உப்பில்லாப் பண்டம் குப்பையிலே…’ - இந்தப் பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? `நீ செல்லாத காசு, உன்ன குப்பையிலதான் போடனும்…’ என்று யாராவது திட்டிக் கேட்டிருக்கிறீர்களா? நிச்சயம் ஒருமுறையாவது மேற்சொன்ன வாசகங்களைக் கேட்டிருப்பீர்கள் அல்லவா? குப்பை என்றாலே யாருக்கும் பயன்படாது என்ற எண்ணத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வாசகங்கள்தான் இவை.
ஆனால், குப்பை என்ற பெயருடன் இருக்கும் ஒரு மூலிகை அக்கால சக்திமான் போல பல வித்தைகளைச் செய்யும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்... `குப்பை’ என்று நினைத்து அதிகம் கண்டு கொள்ளப்படாத மூலிகையான குப்பைமேனி, பல்வேறு நோய்களுக்கு மூடுவிழா நடத்தும் திறன் படைத்தது. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட குப்பைமேனி, அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான், அனைத்து இடங்களிலும் வளர்கிறது போலும்!

குப்பைமேனிக்கு அறிமுகம்
சினிமா கதாநாயகர்களுக்கு அறிமுகம் கொடுப்பதைப்போல, குப்பைமேனிக்கும் ஓர் அறிமுகம் கொடுக்கலாமா? குப்பைமேனியின் தாவரவியல் பெயர் Acalypha indica. நமக்கெல்லாம் ஒரு குடும்பம் இருப்பதைப்போல, தாவரங்களுக்கும் அதன் வளரியல்பு, குணாதிசயங்களைப் பொறுத்து குடும்பங்கள் உண்டு. அதில் குப்பைமேனி Euphorbiaceae குடும்பத்தைச் சார்ந்தது.
மேனியில் (தேகத்தில்) உண்டாகும் நோய்களை விரட்டுவதாலே, மேனி என்ற வேறுபெயரும் உண்டு குப்பை மேனிக்கு! அதுமட்டுமல்லாமல் அரிமஞ்சரி, பூனை வணங்கி, குப்பி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா மட்டுமன்றி பெரும்பாலான தென்கிழக்கு நாடுகளின் பாரம்பர்ய மருத்துவத்திலும் குப்பைமேனியை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
சரும நோய்களை அழிக்கும் சக்தி
விரல் இடுக்குகளில் ஏற்படும் சொறி, சிரங்கு நீங்க, குப்பைமேனி இலையோடு கொஞ்சம் உப்பு சேர்த்து அரைத்து சில நாள்கள் போட்டு வர அரிப்பு குறைந்து நோய் மறைவதைப் பார்க்கலாம். விளையாடும்போது உடலில் சிறு சிறு காயங்கள் ஏற்படும்போது, குப்பைமேனியுடன் கிருமிநாசினி குணம் நிறைந்த மஞ்சளைக் கூட்டி அரைத்துப் பூச, விளையாடும்போது ஏற்பட்ட வீரத் தழும்புகள் தோலோடு மறையும்.
கருஞ்சிவப்பு நிறத்துடன் தொடை இடுக்குகளில் அரிப்புடன் வரும் படர்தாமரை பிரச்னைக்கு குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு கூட்டி தடவி வர, நோயின் தீவிரம் குறையும். மூலிகை மருத்துவத்துடன் நல்ல சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால் படர்தாமரைக்கு நிரந்தர முடிவு கட்டலாம்.
குப்பைமேனி எண்ணெய்
குப்பைமேனியை வைத்து எளிமையாக ஓர் எண்ணெய் தயாரிக்கலாமா? நிறைய குப்பைமேனி இலைகளை எடுத்து நன்றாக அரைக்கவும். வெளிவரும் சாற்றை சம அளவு தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் கொதிக்க வைத்தால் குப்பைமேனி எண்ணெய் ரெடி!
இந்த மருத்துவ எண்ணெயைத் தோல் நோய்களுக்குத் தடவலாம். கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளால் உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புகளுக்கு குப்பைமேனி எண்ணெய் நன்மருந்து. கண்களுக்குத் தெரியாத சிறுசிறு பூச்சியினங்கள் கடிப்பதால் ஏற்படும் குறிகுணங்களை `காணாக்கடி’ என்று அழைப்பது வழக்கம். புண்களில் தடவும் பூச்சு மருந்தாகவும் இந்த எண்ணெய் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
கப நோய்களுக்கு...
கோழையை (சளி) இளக்கி வெளியேற்றும் செய்கை கொண்ட குப்பைமேனியின் பொடியை 1 கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க, பாடாய்ப்படுத்தும் இருமல் கட்டுப்படும். ஒரே தலைபாரமாக இருக்கிறதா? குப்பைமேனி இலைகளை அரைத்து நெற்றியில் பற்று போட, உடனடியாகத் தலைபாரம் குறையும். சளி, இருமலைக் கட்டுப்படுத்த இதன் இலைச்சாறு ஐந்து துளியும், துளசி இலைச்சாறு ஐந்து துளியும் கலந்து கொடுத்தால் போதுமானது.
வயிற்றுப் புழுக்களுக்கு எதிரி...
குப்பைமேனி இலையில் சாறு பிழிந்து, ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க மலத்தை நன்றாக இளக்குவதோடு, வயிற்றில் உள்ள புழுக்களையும் அழித்து வெளியேற்றும். நீங்கள் சாப்பிடும் உணவுப் பொருள்களின் சத்துகளை உறிஞ்சிக்கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் புழுக்களைப் பற்றி குப்பைமேனி இருந்தால் பயப்பட வேண்டியதில்லை. வயிற்றுப் புழுக்கள் காரணமாக எத்தனையோ பள்ளி மாணவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
குப்பை மேனி இலை பொடியை விளக்கெண்ணெயில் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புழுக்கள் செத்து மடியும். குப்பைமேனி பொடியை பாலில் கலந்தும் சாப்பிடலாம். கற்ப மூலிகையான குப்பைமேனி உடலில் தங்கிய நஞ்சுகளை வெளியேற்றும் குணமுடையது. ஒரு வெளிநாட்டுக் குறிப்பு… குப்பைமேனியை கீரையாகச் சமைத்து சாப்பிடும் வழக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் தொடர்கிறது. நமது நாட்டைப் போலவே பாரம்பர்ய மருத்துவத்தில் ஆப்பிரிக்கா நாடும் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.
குப்பைமேனி இலைச் சாறு, ஆடுதீண்டாப்பாளை இலைச்சாறு மற்றும் நல்லெண்ணெய்க் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெயை, தலைக்குத் தேய்த்து குளித்து வர சைனஸைடிஸ் பிரச்னைகள் குறையும். Bacillus subtilis, Escherichia coli, Pseudomonas aeruginosa போன்ற பாக்டீரியாக்களை எதிர்த்து குப்பைமேனியின் உட்பொருள்கள் செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் முழுவதும் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலையின் சாற்றை, நல்லெண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சி வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தலாம். வயதான தாத்தா, பாட்டிகளுக்கு, கால் மூட்டுகளில் ஏற்படும் வலியுடன்கூடிய வீக்கங்களுக்கு, குப்பைமேனி இலையை சுண்ணாம்புடன் கலந்து பூசலாம்.
பாம்புக் கடிக்குக் கொடுக்கப்படும் சித்த மருந்துகளில் குப்பைமேனி தவறாமல் சேர்க்கப்படுகிறது எனும் உண்மையை இருளர் பழங்குடியினரிடம் பேசினால் தெரிந்துகொள்ளலாம். விஷமுறிவு மருத்துவத்தில் சிறந்து விளங்குபவர்கள் இருளர் பழங்குடியினர். தங்களின் பாரம்பர்ய மூலிகை அறிவைக் கொண்டு விஷத்தை முறிக்கும் வித்தை தெரிந்தவர்கள் அவர்கள்.
நன்றி: விகடன் இணையதளம்.
Kuppaimeni Soap for Skin is a natural herbal soap made with the goodness of Kuppaimeni (Acalypha indica), known for its powerful antibacterial, antifungal, and anti-inflammatory properties. This Ayurvedic soap helps deeply cleanse the skin, remove impurities, and control acne, pimples, and blackheads. Regular use of Kuppaimeni Soap helps soothe skin irritation, reduce blemishes, and promote a natural, healthy glow. Ideal for oily and acne-prone skin, it’s free from harsh chemicals, parabens, and artificial fragrances - giving your skin pure, herbal care every day.
ReplyDelete