Monday, 2 December 2024

மகரிஷி அவர்களுடன்........24

 

வாழ்க வையகம்                                                                                    வாழ்க வளமுடன்

 

வினைப்பதிவே  தேகம்  கண்டாய்

- முதுநிலை பேரா அ/நி மாலா ஜெயபிரகாஷ்  திருச்சி

 


இரு
நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒப்பற்ற மஹான், இன்றைய உலகிற்கேற்ப யோக முறைகளை நெறிப்படுத்தி, சீரமைத்து, எளிய முறை உடற்பயிற்சிகளில்  தொடங்கி அகத்தவம், காயகல்பம், அகத்தாய்வு என நம்மையெல்லாம் தகுதிப்படுத்தி நிறைவாக பிரம்மஞான விளக்கம் தந்து நம்மையெல்லாம் இறைநிலை உணரவும்,அதனை அடையவும் உயர்த்திவிட்ட   நம் குருபிரான் தத்துவஞானி சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்களை வணங்குவோம்.

ஒருமுறை ஆழியாரில் சுவாமிஜியுடன் " செயல் விளைவு தத்துவம் " பற்றி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குமேல் உரையாடும் நல்வாய்ப்பு கிடைத்தது.

"மனவளக்கலைக்கு வந்துவிட்டால் பதிவுகளை போக்கிக் கொள்ளலாம் என நினைக்கக்கூடாது. அயரா விழிப்புடன் எண்ணம், சொல், செயலில் தூய்மை பெற வேண்டும். அப்போதுதான் நம் குழந்தைகளுக்கு பாவப்பதிவுகளின் சுமை குறையும் " என மகரிஷி விரிவாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். " பதிவுகள் இருந்தால் அவை உள்ளத்தில் களங்கங்களாகவும், உடலிலே நோயாகவும் வெளிப்படும் " என மேலும் சொன்னார்கள்.

உடனே நான் " பிராரப்த கர்மவினைப் பதிவுகள் மற்றும் ஆகாமிய வினைப்பதிவுகள் பற்றி ஓரளவு புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் சஞ்சித வினைப்பதிவுகள் எவ்வளவு உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது சுவாமிஜி " எனக் கேட்டேன்.

சஞ்சித  கர்மா வினைப்பதிவுகள் ஒரு பெரிய மூட்டை அம்மா...அந்த மூட்டையில் எவ்வளவு பாவப்பதிவுகள் இருக்கிறது எனத் திரும்பி பார்க்கும் நேரத்தில் ஒரு நல்ல காரியம் செய்துவிடலாம் " என்றார்கள் சுவாமிஜி.

" எனக்கு புரியவில்லை சாமி " என்றேன்.

உனது கருமையம் காபி டிகாஷன் போல கருப்பாக களங்கமடைந்திருக்கின்றது என வைத்துக்கொள். நீ என்ன பண்ணனும்..தூய பால் ( நல்ல எண்ணம் ), மேலும் தூய பால் ( இனிய சொற்கள் ) மென்மேலும் தூய பால் ( நல்ல செயல்கள் ) என அபரிமிதமாக பாலை ஊற்றிக்கொண்டே வந்தால் என்ன ஆகும்? காபி டிகாஷன் வெண்மையாக மாறிக்கொண்டு வரும். அது தூய பாலா என்றால் இல்லை!தீயப்பதிவுகள் வலுவிழந்து செயலுக்கு வராமல் நம்மைக் காப்பாற்றும். ஆனால் நம் சேவையை நிறுத்திவிட்டால் ஏதேனும் ஒரு பதிவு மேலெழும்பி துன்பத்தினைத் தந்துவிடும். அப்படி பதிவுகள் துன்பத்தினைத் தந்தாலும் நம் மனவளக்கலை ஒரு கருங்கல் அரண். துன்பத்தினைத் தாங்கக்கூடிய வலிமையை அகத்தவம் தந்துவிடும் " என விளக்கினார்கள்.

என்ன அருமையான, எளிமையான விளக்கம்.

“ தவம் செய்ய, செய்ய சலிப்பில்லாமல் தொண்டு செய்யலாம். தொண்டு செய்ய, செய்ய தவத்தில் ஆழ்ந்து போகலாம்.

தொண்டு செய்தால் தவமும், தவம் செய்தால் தொண்டு சிறக்கும்” எனக் கூறி நிறைவு செய்தார்கள்.

நாமும் நம் அறிவில் உள்ள கறைகள் நீங்கி,  தொண்டாற்றி மெய்ப்பொருளை நிலைப்போம்.

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment