ஒரு சீடன் குருவிடம் "குருவே, எனக்கு நிம்மதி வேண்டும்” என்றான். குரு அவனிடம் “அப்படி என்றால் தியாகம் செய்,'' என்றார்.
“எதை குருவே?” என்றான். “எண்ணங்களைத் தியாகம் செய். அதாவது கவலைகளை உருவாக்கும் எண்ணங்களை” என்றார் குரு.
உடனே சீடன் “கவலைகளைப் பிரச்னைகள்தான் உருவாக்குகின்றன” என்று சொல்லி இருக்கிறீர்கள். குருவே ''பிரச்னைகளை எப்படி இல்லாமல் செய்வது?” என்றான்.
“உன்னுடைய தேவைகளைக் குறைத்துக்கொள். பிரச்னைகள் குறைந்துவிடும்” என்றார்.
''பிரச்னைகளே இல்லையென்றால் கவலை இருக்காது. கவலையே இல்லை என்றால் அப்புறம் என்ன நிம்மதிதான்,” என்றார்.
சீடன், தனிமையில் எவருடைய தொல்லையும், தொந்தரவும் இன்றி நிம்மதியாக இருக்க எண்ணி, காட்டுக்குப்போய் ஒரு சிறிய குடில் அமைத்துக்கொண்டு அங்கே தவம் செய்து கொண்டிருந்தான்.
அவன் கண்களை மூடிக்கொண்டு மனதை ஒருநிலைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சில சுண்டெலிகள் அவன்மேல் ஏறி ஓட ஆரம்பித்தன. அவற்றைக் கொல்வதற்காக ஒரு பூனையை வாங்கி வளர்த்தான். பின்பு பூனைக்கு உணவாகப் பால் கொடுக்க ஒரு பசு வாங்கினான். பசுவைப் பராமரிக்க ஒரு பெண்ணை நியமித்தான். சில நாட்களில் அந்தப் பெண்ணோடு குடும்பம் நடத்த ஆரம்பித்தான். நிறைய குழந்தைகள் பெற்றெடுத்தான். இப்போது குடிலைப் பெரிதாகக் கட்டி, அதில் அவன் உருவாக்கிய நிறையப் பிரச்னைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். உண்மையில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு பிரச்னைதானே.
அவன் அவனுடைய தேவைகளை அதிகப்படுத்திக் கொள்ளாமல் இருந்திருந்தால் அவனுக்கு இந்த நிலைமை நிச்சயம் ஏற்பட்டிருக்காது.
*
No comments:
Post a Comment