Tuesday 16 September 2014

பாவமன்னிப்பு .....2

ஒரு மதகுரு ஆலயத்தில் சொற்பொழிவாற்றினார். "மனிதர்களே நீங்கள் பாவிகளாக இருக்கிறீர்கள். உங்கள் பாவங்களுக்காக இறைவன் நிச்சயம் உங்களை தண்டிப்பான். இறைவனுடைய தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமானால் என்னிடம் ஒரு பாவமன்னிப்பு சீட்டு இருக்கிறது.ஒரு சீட்டு 50 ரூபா தான். அதை வாங்குங்கள்." என்று சொன்னார்.

50 ரூபாவில் பாவமன்னிப்பா? எத்தனை மலிவு?

கூட்டம் முண்டியடித்துக்கொண்டு பாவமன்னிப்பு சீட்டை வாங்கியது.

ஒருவன் மட்டும் இரண்டு சீட்டுக்கள் கேட்டான்.

மதகுரு " ஒரு சீட்டு போதுமே. யார் இந்த மடையன்? எதற்கு இரண்டு சீட்டுக்கள் கேட்கிறான்? நமக்கென்ன, பணம் கொடுக்கிறான்.வாங்கிக்கொள்வோம்" என்று நினைத்த படி அவனுக்கு இரண்டு சீட்டுக்கள் கொடுத்தார். 

நல்ல வியாபாரம். மதகுரு மகிழ்ச்சியுடன் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டார், அடுத்த ஊரில் கடை விரிக்க.

வழியில் காடு. திடீரென ஒருவன் கையில் கத்தியுடன் அவர் முன் தோன்றினான்,

"பணமூட்டையை கொடுத்துவிடு, இல்லாவிட்டால் கத்தியால் குத்திவிடுவேன்" என்று பயமுறுத்தினான்.

மதகுரு அதிர்ந்து போனார். "பாவி மதகுருவையே கொள்ளையடிக்கிறாயே இந்த பாவம் உன்னை சும்மாவிடாது"
என்று அலறினார்.

"அதைப்பற்றி நீ கவலைப்படாதே. இந்த பாவம் என்னை ஒன்றும் பண்ணாது" என்றான் அவன்.

அதெப்படி சாத்தியம்? என்று கேட்டார் மதகுரு.

"நான் இதற்காக பாவமன்னிப்பு சீட்டு வாங்கியிருக்கிறேன். அதுவும் உன்னிடமே வாங்கியிருக்கிறேன். ஒருவன் உன்னிடம் இரண்டு சீட்டுகள் வாங்கினானே,னினைவிருக்கிறதா? அது நான் தான். ஒரு சீட்டு செய்த பாவங்களுக்கு. இன்னொன்று செய்யப்போகும் பாவங்களுக்கு." என்றான் அவன்.

மதகுருவால் எதும் பேச முடியவில்லை. உள்ளுக்குள் தன்னையும், அவனையும் சபித்துக்கொண்டு பணமூட்டையை அவனிடம் கொடுத்தார்.

No comments:

Post a Comment