Wednesday, 17 September 2014

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 21





" சாமி கும்பிடுவது நல்லதா? தியானம் இருப்பது நல்லதா?"  எனக் கேட்கிறாள் ஒரு மாணவி.

" சாமி கும்பிடுவது என்கிறாயே, நீ என்ன செய்கிறாய் என்பது  பற்றி  சொல் " என்கிறார்கள் அம்மா.

"எனக்குத் தெரிந்த ஸ்லோகங்கள், பாடல்களை மனமுருகி சொல்லி என் தேவைகளை நிறைவேற்ற வேண்டுகின்றேன்"

"இப்படி செய்வதுதான் கடவுளிடம் பக்தி செலுத்துவது, இதுதான் பிரார்த்தனை என பலர் நினைத்து வழிபாடு என்ற பெயரில் இறைவனிடம்  கோரிக்கைகள் வைக்கின்றனர்.  
இது பற்றி காஞ்சி பெரியவர்கள் ' நம் கஷ்டத்தை ஈசுவரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப்பதாக, ஆகிறது. ‘இந்தக் கஷ்டத்தைப் போக்கு; அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்துகிற மனப்பான்மையை மாற்று’ என்கிறபோது நாம் கேட்டுத்தான் அவன் ஒன்றைச் செய்கிறான் என்றும் ஆகிறது. அதாவது தானாகப் பெருகும் அவனது காருண்யத்துக்குக் குறை  உண்டாக்கிவிடுகிறோம். இப்படி ஞான சமுத்திரமாக, கிருபா சமுத்திரமாக இருக்கிற ஈசுவரனுடைய ஞானம், கிருபை இரண்டுக்கும் தோஷம் கற்பிக்கிற பிரார்த்தனை உண்மையான பக்தி இல்லை' என்கிறார்கள்.
சாமி கும்பிடும் பழக்கம் நம் சின்ன வயதில், அறியாப்  பருவத்தில் ஏற்பட்டது. ஏன் சாமி கும்பிடவேண்டும், கோவிலில்தான் சாமி இருக்கிறாரா, நம்மிடம் இல்லையா என்று எந்த விளக்கமும் பெறாமல் பெரியவர்கள் சொன்னதை கடைபிடிக்கிறோம். இந்த பழக்கம் மூட நம்பிக்கைகளை ஏற்படுத்தி நம்மை ஏமாற்றத்தில் கொண்டு விடுகின்றது.

தியானத்தில் முதலில் மனதை கூர்ந்து கவனித்து ஒருநிலைப் படுத்துகிறோம். பிறகு மனதின் அடித்தளமான உயிரை உணர்கின்றோம். பிறகு உயிரின் மூலமான இறைநிலை உணர்கின்றோம். அப்போது உள்ளுணர்வாக இறைநிலை நமக்கு தேவையானவற்றை உணர்த்தும்.
சுருக்கமாகச் சொன்னால் சாமி கும்பிடும்போது பிரார்த்தனை என்ற பெயரில் நம் தேவைகளை, கோரிக்கைகளை சாமியிடம் சொல்லிக்  கொண்டிருக்கின்றோம். ஆனால் தியானத்தில் இறைநிலை நம்மோடு  உள்ளுணர்வாக பேசுவதை கவனிக்கின்றோம் " என்று முடிக்கிறார்கள் அம்மா.    
                                                      
ஒரு மாணவி " பெண்களாகிய நமக்கு வரக்கூடிய மாதாந்திர பிரச்சனையின்போது  சாமி கும்பிடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளனவே, அந்த காலங்களில் கடைபிடிக்க வேண்டியவைகளைப் பற்றி சொல்லுங்கள், அம்மா" எனக் கேட்கிறாள்.

" இதைப் பற்றி நானே உங்களுக்குச் சொல்வதாக இருந்தேன். பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான மாதந்திர உடற் கழிவினை ஒட்டி எத்துனை வேண்டாத சடங்குகள், நம்பிக்கைகள், பயங்கள்! இந்தநாட்களில் பெண்களுக்கு சோர்வு, சலிப்பு, வலி, எரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்பு. இந்த நாட்களில் ஆரோக்கியம் காக்க உடற்பயிற்சிகள், காயகல்பம் மற்றும் தியானம் தவிர்ப்பது நல்லதுதான்.
மற்றபடி இது சம்பந்தமான மூட நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாதீர்கள்" என்கிறார்கள் அம்மா.

"இது பற்றி மகரிஷி என்ன சொல்லியிருக்கிறார்கள்?" எனக் கேட்கிறாள் ஒரு மாணவி.

" மகரிஷி  சொன்னதைத்தான் நானும் சொன்னேன். உடல் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகின்றது. மூத்திரம் நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கொரு முறை கழிகின்றது. மாதவிடாய் மாதத்திற்கொரு முறை நிகழ்கின்றது. இரண்டுமே கழிவுகள்தான். இவை உடலிலேயே தேங்கி நின்றால்தான் பிரச்சனை.  ஒரு பெண்மணி மகரிஷியிடம் கேட்டாராம் - ' மாதவிலக்கு வந்த பெண் சமைத்ததை சாப்பிடுவீர்களா?' என்று. அதற்கு மகரிஷி அவர்கள் '  ஒ! சாப்பிடுவேன். நீ நினைப்பது புரிகின்றது. அம்மா வயிற்றில் கருவாக இருந்தபோது இதை சாப்பிட்டுதான் வளர்ந்தேன். பிறந்து வெளியே வந்தவுடன் இக்கழிவுதான் பாலானது. அதையும்தான் சாப்பிட்டேன். இப்போது மட்டும் மாதவிலக்கு பெண் சமைத்ததில் எப்படி குற்றம் காணமுடியும்' என்று கேட்டார்களாம்.
மகரிஷி அவர்கள் பாடல் ஒன்றை இங்கு நினைவு கூர்கின்றேன் -

' தகப்பனுடைய ஒருகழிவைத்   தாயார் ஏற்று 
தன்கழிவை அதனோடு சேர்த்துச் சேர்த்து 
மிகப் புனிதமெனும் இந்த உடலை ஈந்தாள் 
மீண்டும் அவள் உடல் கழிவைப் பாலை உண்டோம் 
சுகப்பிணைப்பின் அடையாளமான இந்தச் 
சுக்கில சுரோணிதம் சேர்ந்து உருவாய் வந்த 
முகப்பினையே உடல் வளர்ச்சி பெற்ற பின்னர் 
முன்நினைவால் நாடுவதே மோகம் ஆகும்'

இயற்கை நம் உடல் ஆரோக்கியத்திற்காக தன கடமையை செய்கின்றது. இயற்கையோடு ஒத்து போவதுதான் நலம் பயக்கும். இதுபற்றி தெளிவாக தெரிந்துகொள்ள ஒரு தனி வகுப்பு நடத்துவது நன்றாக இருக்கும். சிறந்த டாக்டர்களைக் கொண்டு இந்த வகுப்பு நடத்த உங்கள் பள்ளி நிர்வாகத்துடன் பேசுகிறேன்" என்கிறார்கள் அம்மா.

"மிக்க நன்றி, அம்மா! பெண்கள் பற்றி பெரும்பாலும் மதநூல்களில் இழிவாய் சொல்லியிருக்கின்றார்களே, கேட்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. ஏன் இப்படி எழுதியுள்ளார்கள்?" எனக் கேட்கிறாள் ஒரு மாணவி.

- தொடரும் 



No comments:

Post a Comment