Monday, 6 October 2014

பக்தி....6

நம்மில் அநேகர் கடவுள் என்றால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? கடவுள் நம்மைப் போல் மனித உருவத்தோடு இருப்பதாகவும், அதற்குப் பெண்ணாட்டிப் பிள்ளை, தாய் தகப்பன், வீடு வாசல், சொத்து சுகம் உண்டென்றும், அதற்கும் கல்யாணம், ருது சாந்தி, படுக்கை, வீடு, சீமந்தம், பிள்ளைப்பேறு உண்டென்றும், இப்படி ஆயிரக்கணக்கான கடவுள் - ஆயிரக்கணக்கான பெயரினால் இருக்கிறதாகவும், அதற்கு அபிஷேகமோ, பூஜையோ, தீபாராதனையோ, உற்சவமோ செய்வது தான் பக்தி என்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
     அதுபோலவே மதம் என்பதையும், நெற்றியில் நாமமோ, விபூதியோ, கோபியோ, சந்தனமோ பூசுவது தான் இந்து மதம் என்றும், ஒருவரை ஒருவர் தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என்று சொல்லுவதைத் தான் இந்து மதம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி சுவாமிகளுக்குக் கோயில் கட்டு-வதையும், உற்சவம் நடத்துவிப்பதையும், இந்த உற்சவத்திற்கு வரும் ஜனங்களுக்கு மடம் கட்டுவதும், சத்திரம் கட்டுவதும், சாப்பாடு போடுவதும் தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்விதக் காரியத்தைப் பிரசாரம் செய்வதையும், இவ்விதக் காரியங்-களை நிர்வகிப்பதையும், இதற்காகப் பொது-ஜனங்கள் பொருளைச் செலவு செய்வதையும் பரிபாலனம் என்று நினைக்கிறார்கள்.
     இந்து சமூகத்திற்கு அடிப்படையான குற்றம் - அதாவது அஸ்திவாரத்திலேயே பலவீனம் - நாம் கடவுளையும், மதத்தையும் அறிந்திருக்கும் பான்மையே தான். இந்தப் பான்மையுள்ள சமூகம் உருப்படியாவதற்கு மார்க்கமே இல்லை. தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் என்-பதும், நமது தேவைகளையெல்லாம், நமது பிரயத்தனமில்லாமல், கடவுளை ஏமாற்றி அடைந்து விடலாம் என்கிற பேராசைப் பயித்தியமும், நம்மை விட்டு நீங்க வேண்டும்.
மனிதர்கள் இவ்வளவு அக்கிரமங்கள் செய்யக் காரணமே, கடவுளைச் சரியானபடி உணராததும், உணர்ந்திருப்பதாய் நினைக்கும் பலர் கடவுளை வணங்கி மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடுவார் என்கிற நம்பிக்கையும் தான். கடவுள் ஒருவர் இருக்கிறார், அவர் எல்லா-வற்றையும் அறிந்து கொண்டு இருக்-கிறார் என்று எண்ணுகிற மக்களிலேயே ஆயிரத்தில் ஒருவன் கூட கடவுள் கட்டளைக்குப் பயந்து நடப்பது அருமை-யாய்த்தான் இருக்கிறது. இவற்றிற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமான கட்டளைகளையும், உண்மையான கடவுள் தன்மையையும் அறியாததே தான்.
     கடவுள் கட்டளை என்று சொல்வது ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதமாக இருந்து வருவதை நாம் காண்கின்றோம். இவை எப்படிக் கடவுள் கட்டளையாக மதிக்கப்படும்? அதுபோலவே பாவ புண்ணியம் என்பது தேசத்திற்கொரு விதமாகவும், மதத்திற்கொரு விதமாகவும், ஜாதிக்கொரு விதமாகவும் தான் கருதப்-படுகிறது. நமது கல்யாணங்களிலேயே மதத்திற்கு மதம் வித்தியாசம், ஜாதிக்கு ஜாதி வித்தியாசம். சிலர் தனது சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் புத்திரியை மணக்கிறார்கள்; சிலர் அத்தை மாமன் புத்திரியை மணக்-கிறார்கள்; சிலர் யாரையும் மணக்கிறார்கள். ஆகார விஷயத்திலோ சிலர் பசுவை உண்ணு-வது பாவம் என்கிறார்கள். சிலர் பன்றியை உண்பது பாவம் என்கிறார்கள். சிலர் கோழியை உண்பது பாவம் என்கிறார்கள். ஜந்துக்களி-லேயே சிலர் பசுவை அடித்து, துன்புறுத்தி வேலை வாங்கலாம். ஆனால், பாம்பை அடிப்பது பாவம் என்கிறார்கள். சிலர் எந்த ஜீவனையும் வதைக்கக் கூடாது என்கிறார்கள். சிலர் எல்லா ஜீவன்களும் மனிதன் தன் இஷ்டம் போல் அனுபவிப்பதற்குத் தான் படைக்கப்-பட்டன என்கிறார்கள். இந்த நிலையில் எது உண்மை? எது கடவுள் கட்டளை? எது பாவம்? என்று எப்படி உணர முடியும்? இவற்றைப் பற்றி எவராவது ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் உடனே அவரை நாஸ்திகர் என்று சொல்லுவதும், இதெல்லாம் உனக்கு எதற்காக வேண்டும்? பெரியவர்கள் சொன்னபடியும், நடந்தபடியும் நடக்க வேண்டி-யது தானே என்றும் சொல்லி விடுவார்கள்.
     சிலர் வேதம் என்று ஒன்றைச் சொல்லி, அதன்படி எல்லாரும் நடக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதில் என்ன சொல்லி-யிருக்கிறது? நான் பார்க்கலாமா என்றால், அது கடவுளால் சொல்லப்பட்டது, அதை நீ பார்ப்பது பாவம், நான் சொல்வதைத் தான் நம்ப வேண்டும் என்பார்கள். உலகத்தில் எத்தனைக் கடவுள் இருப்பார்கள். ஒரு கடவுள் தானே! அவர் சொல்லியிருப்பாரானால் அது உலகத்திற் கெல்லாம் ஒப்புக் கொள்ளப்-பட்டதாயிருக்க வேண்டாமா? அப்படியானால் கிறித்து, முகம்மது முதலிய மதங்களும், இந்தியா தவிர, மற்ற தேசங்களும் இதை ஒப்புக் கொள்ளும்படி கடவுள் ஏன் செய்யவில்லை? இம்மாதிரி மூடுமந்திரமானதும் இயற்கைக்கும், அனுபவத்திற்கும், நாணயத்திற்கும் விரோத மானதுமான கொள்கைகள், நமது நாட்டில் இந்து மதத்தின் பெயரால் இருந்து கொண்டு ஒரு பெருஞ் சமூகத்தையே தேய்ந்து போகும்-படிச் செய்வதோடு, இதன் பரிபாலனம் என்னும் பெயரால் தேசத்தின் நேரமும், அறிவும், பொருளும் அளவற்று அனாவசிய-மாய்ச் செலவாகியும் வருகின்றன.
     பெரியவர்கள் கோயிலில் சுவாமி கும்பிடும்போது கட்கத்திலிருக்கும் குழந்தை எப்படி ஒன்றும் அறியாமலும், மனதில் ஒன்றும் நினைக்காமலும் தானும் கைகூப்பிக் கும்பிடுகிறதோ, அதுபோலவே நமக்கும் தெய்வம் - மதம் - தர்மம் என்கிற சொற்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, அர்த்தமில்லாமல் நமக்குள் பதிந்து விட்டன. இதுபோலவே, பக்தி - தொண்டு - அகிம்சை என்னும் பதங்களும் அர்த்தமில்லாமலே வழங்கப்படுகின்றன. யோசித்துப் பார்ப்போமேயானால் நம்மிடையில் உள்ள மக்களிடம் காட்டும் அன்புதான் நாம் பக்தி செய்யத்தக்க கடவுள்; அவர்களுக்குச் செய்யும் தொண்டு தான் கடவுள் தொண்டு; அம் மக்களின் விடுதலை தான் மோட்சம்; அச்சீவன்களிடம் கருணை காட்டுவதும் அவை வேதனைப் படாம-லிருப்பதும் தான் அகிம்சை.

(ஏழாயிரம் பண்ணையில் பாலிய நாடார் சங்க இரண்டாம் ஆண்டு விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...) குடிஅரசு 30.5.1926.

No comments:

Post a Comment