Friday, 10 October 2014

STRENGTH ...9

விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்..
நீங்கள் தயாரா?...1


சுவாமி விமூர்தானந்தர்

சுவாமி விவேகானந்தர், ""நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். உலகின் போக்கையே மாற்றிக் காட்டுகிறேன்"" என்றார். எல்லாக் காலங்களிலும் இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது உலகிற்குச் சேவையாற்ற ஏன் சுவாமிஜி இளைஞர்களை அதிகமாக வேண்டினார்?

அவர் விரும்பிய இளைஞர்கள் (அதில் பெண்களும் அடக்கம்) எப்படிப்பட்டவர்கள்? அவர் களின் தகுதிகள் என்ன என்பதைச் சிறிது ஆராய்வோம்.

இளமையைத் துறந்தால் பெருமையா?

இளமையை வேண்டாம் என்றார் ஒருவர் இறையடியார் என்று அவரைப் போற்றுகிறோம். இது காரைக்கால் அம்மையார் சரித்திரம். இளமையை வேண்டி இன்பங்களை அனுபவித்தார் மற்றொருவர் கடைசியில், மன அமைதி பெறுவதற்காகத் தாம் விரும்பிப் பெற்ற இளமையை வேண்டாம் என்றார். இது யயாதியின் கதை.

வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழ்க்கையே நீர்க்குமிழி என்றால், அதிலுள்ள இளமைக் காலம் எம்மாத்திரம்?

ஆதிசங்கரர், ஆன்மஞானம் அடைய முயலாதவர்களை, அக்ஞானத்தில் உழல்பவர்களைப் "பாலர்களே" என்று விளிக்கிறார்.

"இந்தக் காலத்து இளைஞர்கள் அவ்வளவாகப் பொறுப்புடன் இல்லை" என்று பொதுவாகப் பெரியவர்கள் கூறுவதுண்டு. இதே புகாரை, சாக்ரடீஸே ஒரு முறை கூறினாராம்!

இப்படிப் பலரும் இளைஞர்களையும், இளமைக் காலத்தையும் பெரிதாக மதித்ததாகத் தெரியவில்லை! ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தரும், அவர்கள் எல்லோரையும் சமமாக பாவித்தாலும் குறிப்பாக, இளைஞர்களின் ஆற்றலில் அதிக நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். அது ஏன்?

ஒவ்வொரு கணமும் நூற்றுக்கணக்கான திசுக்கள் நம் உடலில் அழிந்து கொண்டும், புதிதாகப் பிறந்து கொண்டும் இருக்கின்றன. அதன்படி, மனிதன் ஒவ்வொரு கணமும் பிறக்கிறான் இறக்கிறான். மனிதனின் இந்தப் பிறப்பிறப்பின் வேகம் சற்று கூடுதலாக, சீராக இருப்பதைத்தான் இளமைக் காலம் என்கிறோம். இதனைக் "கிளரொளி இளமை" என்று திவ்யப் பிரபந்தம் கூறும்.

அப்படி என்றால், யாரிடம் இளமைத் துள்ளல் உள்ளதோ, அவரே இளைஞர் என்று கூறி விடலாமா? அப்படிக் கூறிவிட முடியாது. ஏனென்றால் துருதுருவென செயல் புரிந்த வயதான "இளைஞர்கள்" இருந்தார்கள் ஏராளமாக- காந்திஜி, வினோபாஜி போன்றோர். இருக்கிறார்கள் தாராளமாக - அன்னா ஹசாரே, சின்னப்பிள்ளை போன்றோர். இருப்பார்கள் நிச்சயமாக!

வாலிபம் வயது அடிப்படையில் இல்லை என்பது இதன் மூலம் முடிவாகிறது அல்லவா?

மனதிற்கு இளமை என்ற நிலை உள்ளதா? உறுதி எடுக்கும் ஒரு கணம் ஏன் எடுத்தோம் என்று தடுமாறும் மறுகணம். இதுதான் மனம். ஆகையால் பிடிப்பும் தளர்வும் இயல்பாக உள்ள மனம் எப்போதும் துடிப்பாக - இளமையாக இருக்க முடியாது.

மனித மனமானது அளவற்ற ஆற்றலுடன், சோர்வின்றிச் செயலாற்ற இயலும். ஆனால், சக்தியின் ஊற்று அதற்கு வேறோர் இடத்திலிருந்து உதிக்கிறது.

உடல் ஒரு சில காலம் வரையில்தான் இளமையாக இருக்கும். மனதால் என்னதான் உற்சாகமாக இருக்க முயன்றாலும், அதுவும் காலப்போக்கில் மங்கத்தான் செய்கிறது. ஊக்கத்தால், மருந்து களால், ஏன் ஆசனங்களால் கூட நீடித்த இளமையைத் தர முடியாது.-

---தொடரும் 

No comments:

Post a Comment