Monday 26 January 2015

இன்று படித்தது - 16

நம் முன்னோர் இருக்கும் திக்கு நோக்கி (எந்தத் திக்கு என்பதுதான் தெரியவில்லை)இரண்டு கரங்களையும் கூப்பித் தண்டனிடுகிறேன் ஆகா,அவர்கள் நமக்கு செய்திருக்கும் நன்மைதான் என்ன!வருடம் 365 நாளில் ஏறக்குறைய 300 நாட்கள் நமக்கு விடுதலை அளித்திருந்தனர்.
இக்காலத்தில் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது.ஆனால் நம் முன்னோர் செய்து வைத்த ஏற்பாடு எவ்வளவு அழகானது பாருங்கள்!


மாதங்களில் மார்கழியும் புரட்டாசியும் கெட்டவை.ஒரு மாதத்தை எடுத்துக் கொண்டால் அமாவாசை ,பாட்டிமை,அஷ்டமி,நவமி,திதி இவை உதவா.பின்னர் பரணி,கார்த்திகை நட்சத்திரங்கள்; சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை.ஆகா,செவ்வாயோ,வெறு வாயோ என்று கேட்டதில்லையா?


பின்னர் மரணயோகம்,கரிநாள்,மாதம்,திதி நட்சத்திரம்,கிழமை, யோகம் எல்லாமே கூடிய நாள் ஒன்றிருந்தால்,அதில் ராகு காலம், தியாஜ்யம், பிரதோஷம் இந்த வேளைகளில் கூடா.இவ்வளவு விபத்துக்களையும் கடந்து ஒருவன் ஏதேனும் காரியம் செய்யப்போனால்,யாரேனும் ஒரு சிறு தும்மல் தும்மி விட்டால் போதும்,அன்று விடுமுறைதான்.


ஆகா,இவ்வளவும் பூரணமாக அமுலிலிருந்த அந்தப் பழைய காலம்......நினைத்தாலே நாவில் ஜாலம் கொட்டுகிறது.இப்போது வரவரக் கலியுகம் அல்லவா முற்றி வருகிறது?
                                           --  முதல் முதலாக கல்கி ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை. 

No comments:

Post a Comment