Friday 13 February 2015

SMILE....239

 'காதலர் தின ஸ்பெஷல்'
தமிழ் சினிமாவும் காதலும் என்பது ரெண்டு இட்லி ஒரு வடை காம்பினேஷனைப் போல அருமையானது, அழகானது மற்றும் அற்புதமானது. காதல் 1980களுக்கு முன் வந்த படங்களில் பழைய சோறு போலவும், 1980களில் வந்த படங்களில் புளி சோறு போலவும், 2000க்கு மேல் வந்த படங்களில் பருப்புச்சோறு போலவும், இப்ப வரும் படங்களில் பீட்சா, பர்கர் போலவும் இருக்கலாம்.


ஆனால், 1990 - 2000க்குள் வந்த படங்களில்தான் காதல் டபுள் லெக் பீஸ் வச்ச சிக்கன் பிரியாணியைப் போல கமகமத்தது. வரலாற்றில் குப்தர்களின் ஆட்சி பொற்காலம் என்பது போல, தமிழ் சினிமாவில் இந்த காலகட்டம்தான் காதலின் பொற்காலம்!

காதல் தேசம், காதல் மன்னன், காதல் ரோஜாவே, காதல் கவிதை, காதல் வேதம், காதல் சாம்ராஜ்யம், காதல் செருப்பு, காதல் ஜட்டி, காதல் சொம்பு, காதல் சாம்பார், காதல் வௌக்குமாறு, காதல் குரூட் ஆயில், காதல் பாத்ரூம் ஆசிட், காதல் வாந்தி, காதல் காராபூந்தி என காதலுக்குப் பின்னால் ஏதாவது ஒரு வார்த்தையைப் போட்டு வரிசையாக காதல் படங்கள் வந்த அற்புதமான கால கட்டம் அது.

பார்த்தவுடனே காதல் வரும் படங்களில் இருந்து மாறுபட்டு பார்க்காமலே காதல் செய்யும் ‘காதல் கோட்டை’ வந்த பின்னர், எதுவும் பேசாமலே காதல், ஒரு தடவை மட்டுமே பேசியிருக்கும் காதல், பேசிக்கொண்டே இருக்கும் காதல், கெட்ட வார்த்தை பேசும் காதல், போனில் பேசியே வளர்த்த காதல், புரளி பேசி வளர்த்த காதலென பலப் பல வகை காதல்களைக் காட்டி கதறடித்தது தமிழ் சினிமா.

டி.ராஜேந்தர், கதிர், விக்ரமன் போன்ற ஆல்டைம் இளமை ஊஞ்சலாடும் இயக்குனர்கள் கூட கடைசி வரை சொல்லாத காதல், காதலியின் காதலை சேர்த்து வைக்கும் காதல், காதலுக்குள் நட்பு, நட்புக்குள் காதல் என ரூம் போட்டு யோசித்து பலப்பல வகைகளில் காதலைக் காட்டினார்கள்.

வயதான ஆணை இளம்பெண் காதலிக்கும் காதல் படம் ஊருக்குள் இருக்கும் திரையரங்குகளிலும், வயதான ஆன்ட்டியை இளம் வாலிபன் காதலிக்கும் படம் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் திரையரங்குகளிலும் சக்கை போடு போட்டது இந்த அருமையான காலகட்டத்தில்தான். காதல் பாடல் காட்சிகளில் யூனிஃபார்ம் அணிந்த குரூப் டான்சர்கள் முதல், எங்கிருந்து வருகிறார்கள் என இதுவரை ஆன்சர் கிடைக்காத வெள்ளை கவுன் தேவதைகள் வரை காட்டியது தமிழ் சினிமா. யூனிபார்ம் போட்ட பள்ளி மாணவ மாணவிகளே காதலிப்பதாய் பல நூறு படங்களை இறக்கி முறுக்கியது இந்த வருடங்களில்தான். 

அதுவரை இரு கோணம், முக்கோணக் காதல் கதைகளைச் சொல்லி தட்டுத் தடுமாறி வந்த தமிழ் சினிமா... காதல்களில் நாற்கோணம், ஐந்து கோணம், ஆறு கோணம், அரக்கோணம், தலக்கோணம், கும்பகோணம் என பற்பல காதல் கோணங்களையும் காட்டி, சனியனை சடை பின்னி அழகுப் போட்டிக்கு அனுப்பி வைத்தது இந்த அருமையான வருஷங்களில்தான்.

அடுத்தவன் பொண்ணை காதலித்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் அடுத்தவன் பொண்டாட்டியை காதலிக்கக் கற்றுக்கொடுத்த சினிமாக்கள் வலம் வந்த வளமான வருடங்கள் இவை. ஒரு மெண்டல் பெண்ணை காதலித்து கடைசியில் காதலன் மெண்டல் ஆன கதைகள், ஒரு மெண்டல் ஒரு பெண்ணை காதலித்து அவளை மெண்டலாக்கிய கதைகள், மெண்டலும் மெண்டலும் காதலித்து மெண்டலான கதைகள் என எக்கச்சக்க காதல் படங்கள் வந்து, பார்க்கும் பார்வையாளர்களையும் மெண்டலாக்கின.

தமிழர்கள் கட்டும் கைலிகளில் இருக்கும் வகைகளை விட, தமிழ்ப் படங்களில் காட்டப்பட்ட கல்லூரிக் காதல்கள் அதிகம். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் காலேஜ் போக ஆரம்பித்த முரளி சார், சின்னி ஜெயந்த், சார்லி, தாமு போன்ற மாணவர்கள் அந்த பீமீநீணீபீமீன்  கடைசி வரை காலேஜ் போய் காதலித்துக்கொண்டிருந்தனர். அஜித், விஜய், பிரசாந்த் போன்ற புது மாணவர்கள் காதலிக்க வந்த பின், முரளி, பிரபு, கார்த்திக் போன்ற மாணவர்கள் இரண்டாம் ஆண்டுக்கு பாசாகி வந்தாலும், சின்னி ஜெயந்தும் சார்லியும் கடைசி வரை முதலாண்டு படிப்பே படித்துக்கொண்டிருந்தார்கள்.

தொண்ணூறுகளின்   மத்தியில், தமிழ் சினிமா ஒரு பூகம்பத்தைக் கண்டது. அதுவரை, காதலுக்காக காதலையோ காதலியையோ தியாகம் செய்து வந்த தமிழ் சினிமா ஹீரோக்கள் தங்கள் காதலுக்காக தங்கள் உடல் உறுப்புகளைத் தியாகம் செய்ய ஆரம்பித்தார்கள். லிவிங்ஸ்டன் நாக்கை தியாகம் செய்து ஆரம்பித்த டிரண்டை விஜய் கிட்னி தியாகம் செய்து உச்சத்துக்குக் கொண்டு சென்றார். அதன் பின் கண், மூக்கு, காது, இதயம் என ஆரம்பித்து கடைசியில் கல்லீரல், நுரையீரல் என உடம்பில் இருக்கும் ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்ஸையும் தானம் செய்ய வைத்து உடல் தான விழிப்புணர்வை ஊட்டியது தமிழ் சினிமா.

காதலில் இத்தனை ரசங்களை காட்டிய இயக்குனர்கள், காதல் செய்வதைப் பற்றி கிளாஸ் எடுக்காம சும்மாவா விடுவாங்க? காதலியின் தொப்புளில் பம்பரம் விட்டு ஆட்டத்தை கேப்டன் ஆரம்பிக்க, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் தொப்புளில் ஆம்லெட் போடுவது, அக்குளில் ஆபாயில் போடுவது, முதுகில் முறுக்கு சுடுவது, இடுப்பில் எண்ணெய் தடவுவது எனப் பல வகைகளில் காதல் செய்வது பற்றி பல்கலைக்கழகமே நடத்தியிருக்கிறார்கள்.

தொப்புளில் படகுப் போட்டி, ஒட்டக ஓட்டப் பந்தயம், உலகக்கோப்பை கிரிக்கெட், மாடு மேய்க்கும் சீனெல்லாம் சில இயக்குனர்கள் யோசித்து வைத்திருந்ததாகவும், பட்ஜெட் காரணமாக அந்த மக்கள் திட்டங்கள் கைவிடப்பட்டதாகவும் வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 ஷங்கர், ராஜமௌலி போன்ற பிரமாண்ட இயக்குனர்கள் நினைத்தால், தொப்புளில் சுனாமி கூட கொண்டு வரலாம்.தாலின்னா என்னன்னு தெரியாது, கல்யாணம்னா என்னன்னு தெரியாது, ஆனா காதல் மட்டும் நல்லாவே செய்யத் தெரியும் எனப் பல சின்னத்தம்பிகள் சில்மிஷ தம்பிகளாக மாறிய படங்கள் பல பொங் கலுக்கு ஓடின. காதலிக்கும் தன் பெண்ணையோ, பேத்தியையோ, தங்கச்சியையோ எப்படியெல்லாம் துன்புறுத்தி கொடுமைப்படுத்தலாம் என பலப்பல ஐடியா செய்து வில்லன்கள் மொத்த வித்தையையும் இறக்கியது இந்த 90களில்தான்.

இப்படியாக காதலை வளர்த்த, காதலுக்காக வளர்ந்த தமிழ் சினிமாவின் பொற்காலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வரவேண்டுமென இந்த ‘காதலர் தின ஸ்பெஷலில்’ குட்டிச்சுவர் கேட்டுக்கொள்கிறது. காதல் வாழ்க, கள்ளக்காதல் வாழ்க, எல்லா காதலர்களும் வாழ்க வாழ்க!    

- ஆல்தோட்ட பூபதி
நன்றி  - குங்குமம்

No comments:

Post a Comment