ஐம்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன் என்னுடன் படித்த கூறைநாட்டுத் தோழன் பாஸ்கரை சென்ற சனிக்கிழமை இரவு அட்லாண்டாவில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.
மாயூரம் கூறைநாடு நகராட்சிப் பள்ளியில் ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது வகுப்புகளில் ஒன்றாகப் படித்தோம்.
பாஸ்கர் அப்போதே கால்பந்து, கபடி மற்றும் ஓட்டப் பந்தயங்களில் மாவட்ட அளவில் வீரன். பள்ளி கால்பந்து அணியின் கோல்கீப்பர்.
இவன் மூலம்தான் எனக்கு இம்மாதிரி போட்டிகளில் ஆர்வம் ஏற்பட்டு பிறகு இவன் அண்ணன் மூலமாக கிரிக்கெட் அறிமுகமானது, பாஸ்கர் வீட்டிற்குச் சென்று ரேடியோவில் கமென்டரி கேட்டு கிரிக்கெட் அறிவினை வளர்த்துக் கொண்டேன்,
பாஸ்கர் தயவால் பள்ளி கபடி மேட்ச்சில் கலந்து கொண்டு எங்கள் அணி ரன்னராக வந்தது. எனக்கும் சான்றிதழ் கிடைத்தது, விளையாட்டில் நான் பெற்ற ஒரே சான்றிதழ், இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.
இப்போது சந்தித்தபோது இரண்டு மணி நேரம் பல்வேறு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். நாங்கள் அடித்த லூட்டிகள் , வகுப்பு எடுத்த ஆசிரியர்கள் மற்றும் வகுப்புத் தோழர்கள் என பல்வேறு நினைவுகள் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னோக்கி எங்களை அழைத்துச் சென்று விட்டது.
கீழே உள்ளது இப்போது எடுத்த போட்டோக்கள் -
நாங்கள் இருவருமே தீவிர சிவாஜி கணேசன் ரசிகர்கள். கூறைநாடு கடைத்தெருவில் சிவாஜி ரசிகர் மன்றம் இயங்கி வந்தது. எல்லா வார, மாத பத்திரிகைகள் அங்கு இருக்கும். சிவாஜி நடித்த 100 வது படம் நவராத்திரி வந்தபோது அதை நாங்கள் சிறப்பாக கொண்டாடினோம். MGR ரசிகர்களை வெறுப்பேற்றினோம்( அப்போது MGR 100 படம் நடித்து முடிக்கவில்லை).
சிவாஜியின் 100 படங்கள் பற்றிய பட்டியல் தயாரித்தது போன்ற விஷயங்கள் இன்னும் ஞாபகம் உள்ளது,