அதென்ன ஸ்லீப் ஹைஜீன்?
1. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கையிலிருந்து எழுவதையும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
2. தூங்கச் செல்வதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும்.
3. இரவில் தயிர், முட்டை, இறைச்சி போன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு, எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
4. மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.
5. மதியம் உறங்கும் பழக்கமுள்ளவர்கள்,
20 நிமிடங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.
6. மாலை 6 மணிக்கு மேல் உடற்பயிற்சி செய்யக் கூடாது; டீ, காபி, குளிர்பானங்களை அருந்தக் கூடாது. மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் ஆழ்ந்த தூக்கத்தை பாதிக்கும்.
7. மாலை நேர நடைப்பயிற்சி இரவில் ஆழ்ந்த தூக்கத்துக்கு வழிவகுக்கும். வெகு நேரம் தூக்கம் வரவில்லையென்றால், எழுந்து ஒரு குறுநடை நடந்துவிட்டு வரலாம்.
8. படுக்கைக்குச் சென்ற பிறகு அடுத்த நாள் வேலை பற்றி யோசிக்கக் கூடாது. தீர்வே கிடைக்காத பிரச்னைகளைப் பற்றியும் யோசிக்கக் கூடாது.
9. நள்ளிரவில் கண்விழித்தால் இயல்பாக இருங்கள்.
10. மெல்லிசை அல்லது பாடல்களைக் கேட்பது தூக்கத்தை வரவழைக்கும்.
11. இரவில் பசும்பால் அருந்துவதும், ஆப்பிள், வாழைப்பழம் இரண்டையும் கலந்து சாலட் செய்து சாப்பிடுவதும் நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கும்.
12. படுக்கைக்குச் செல்லும்போது தளர்வான உடைகளை உடுத்துவது நல்லது. நனைந்த, இறுக்கமான உள்ளாடைகளுடன் தூங்கச் செல்லக் கூடாது.
தூக்கம் வரவழைக்கும் டெக்னிக்ஸ்!
புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது போன்ற பழக்கங்கள் தூக்கம் வரவழைக்க உதவும். ஆனால், அவை எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. தூக்கம் வரவழைக்க சில வழிமுறைகள் உள்ளன.
100 வரை எண்ணுங்கள்!
படுக்கை அறைக்குச் சென்றதும் 100-லிருந்து `99, 98, 97...’ என்று பின்னோக்கி எண்ண வேண்டும். இப்படி எண்ண ஆரம்பித்தால், முழு கவனமும் அதில் சென்றுவிடும். இதனால் மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டு, சிறிது நேரத்தில் உங்களை மறந்து தூங்கிவிடுவீர்கள்.